Latest News :

’நிர்வாகம் பொறுப்பல்ல’ திரைப்பட விமர்சனம்

4ce7f4a3b012bbf5009d57e3e42afd3d.jpg

Casting : S Kaarthieswaran, Sreenithi, Aadhavan, Livingston, Black Pandi, Mrithula Suresh, Akalya Venkatesan

Directed By : S Kaarthieswaran

Music By : Srikanth Deva

Produced By : D Radhakrishnan

 

நாயகன் கார்த்தீஸ்வரன், பல வழிகளில் மோசடி செய்து ரூ.5 ஆயிரம் கோடி சம்பாதிக்கிறார். அந்த பணத்தை எடுத்துக் கொண்டு வெளிநாட்டுக்கு பறந்து விட நினைக்கும் போது, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிதியிடம் சிக்கிக் கொள்கிறார். 

 

போலீஸிடம் சிக்கிக் கொண்ட கார்த்தீஸ்வரன் தப்பித்தாரா? , அவர் செய்த மோசடிகள் என்ன ? அதை அவர் எப்படி சாமர்த்தியமாக செய்கிறார், அவர் இப்படி செய்வதற்கு என்ன காரணம் ?, ஆகிய கேள்விகளுக்கான விடை தான் படத்தின் கதை.

 

படத்தை இயக்கியிருக்கும் எஸ்.கார்த்தீஸ்வரன் கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அப்பாவி முகம், சாதுவான தோற்றம் என்று சாதாரணமாக வலம் வரும் கார்த்தீஸ்வரன் செய்யும் மோசடிகள் அனைத்தும், அடங்கப்பா....ரகங்களாக அதிர்ச்சியளிக்கிறது. கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கும் கார்த்தீஸ்வரன், பலவித கெட்டப்புகளில் தோன்றினாலும், அவற்றுக்கு பொருத்தமாக இல்லாதது சற்று வருத்தமளிக்கிறது. இருந்தாலும், ஒரு நடிகராக நடிப்பு, நடனம், காமெடி, ஆக்‌ஷன் என அனைத்தையும் சரியாக செய்திருக்கிறார்.

 

போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஸ்ரீநிதி கம்பீரமாகவும், கவர்ந்திழுக்கும் அழகோடும் வலம் வருகிறார்.

 

கார்த்தீஸ்வரனின் மோசடி குழு உறுப்பினராக நடித்திருக்கும் ஆதவன், லிவிங்ஸ்டன், பிளாக் பாண்டி, மிருதுலா சுரேஷ், அகல்யா வெங்கடேசன் என அனைவரும் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் என்.எஸ்.ராஜேஷ், காட்சிகளை கலர்புல்லாகவும், தரமாகவும் படமாக்கியிருக்கிறார்.

 

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை அளவுக்கு அதிகமாக காதை கிழிக்கிறது.

 

படத்தொகுப்பாளர் சஜின்.சி, இயக்குநரின் வரிசைப்படி காட்சிகளை தொகுத்து கொடுத்திருக்கிறார்.

 

எழுதி இயக்கியிருக்கும் எஸ்.கார்த்தீஸ்வரன், மிக குறைந்த விலையில் ஸ்மார்ட் போன் தருவதாக கூறி கார்ப்பரேட் நிறுவனம் மூலம் நடத்திய மோசடி முதல் தற்போது நடக்கும் ஆன்லைன் மோசடிகள் வரை, அனைத்து விதமான மோசடிகளையும் அதிர்ச்சியளிக்கும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

 

பல வழிகளில், பலர் ஏமாற்றப்பட்டு வருவது தொடர்பாக செய்திகள் வெளியானாலும், மக்கள் ஏமாறுவதும், அவர்களை தொடர்ந்து ஏமாற்றுவதும் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. இதற்கு காரணம் என்ன ? என்பதை கமர்ஷியலாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர்  எஸ்.கார்த்தீஸ்வரன், இத்தகைய மோசடிகளில் சிக்காமல் இருக்க மக்கள் என்ன செய்ய வேண்டும், என்பதையும் சொல்லியிருக்கிறார்.

 

மேக்கிங், காட்சிகளை கையாண்ட விதம் ஆகியவற்றில் சில குறைகள் இருந்தாலும், தான் சொல்ல வந்ததை நேர்த்தியாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லியிருகும் இயக்குநர் எஸ்.கார்த்தீஸ்வரன், திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், நிச்சயம் இன்னொரு சதுரங்க வேட்டை ஆடியிருக்கலாம். 

 

மொத்தத்தில், ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ எச்சரிக்கை.

 

ரேட்டிங் 3/5

Recent Gallery