Casting : Guru Lakshman, Padine Kumar, Sumithra Devi, Anith Yash Paul, Yoga Lakshmi, Iniyal, Jeeva Ravi, Sharmila, Praveena Princy, Kalai, Ajith, Pavithra and Seenu.
Directed By : Sadhasivam Senthilrajan
Music By : Michael Akash
Produced By : Elysium Maxima, Allo Media
உடலில் உள்ள நோய்களை கண்டுபிடிப்பதில் தொடங்கி, பேசுவது உண்மையா ? பொய்யா ? என்பதை கண்டுபிடிப்பது என பலவற்றுக்கு அறிவியல் கருவிகள் பயன்படும் போது, ஒருவர் மனதில் உள்ள காதலை கண்டுபிடிக்க ஒரு கருவியை ஏன் உருவாக்க கூடாது ? என்ற கேள்வி அறிவியல் மீது பேரார்வம் கொண்ட நாயகி பாடினி குமார் மனதில் எழுகிறது. அந்த கேள்விக்கான பதிலாக அவர் ஒரு கருவியை உருவாக்குகிறார். ஒருவர் மீது மற்றொருவருக்கு எவ்வளவு காதல் இருக்கிறது, என்பதை சொல்லும் அந்த கருவி வெற்றிகரமாக இயங்குகிறது.
இந்த நிலையில், நாயகி பாடினி குமாரை சந்திக்கும் நாயகன் குரு லக்ஷ்மன், அவரது கருவி பற்றி அறிந்து அதை கிண்டல் செய்வதோடு, அந்த கருவியால் ஒருவர் மனதில் இருக்கும் காதலை கண்டுபிடிக்க முடியாது, என்பதை நிரூபித்து காட்டுவதோடு, நாயகியை காதலிக்க வைப்பதாகவும், சவால் விடுகிறார். இந்த சவாலில் நாயகன் வெற்றி பெற்றாரா ? இல்லையா ? என்பதை அறிவியல் மற்றும் உணர்வுகள் கலந்த காதல் கதையாக சொல்வது தான் ‘ஹார்டிலே பேட்டரி’.
புதிய முயற்சியாக மட்டும் இன்றி மிக சுவாரஸ்யமான கதைக்கருவோடு உருவாகியுள்ள ‘ஹார்டிலே பேட்டரி’ தொடர், இணையத் தொடர் உலகில் புதிய அத்தியாயத்தை படைக்கும் வித்தியாசமான முயற்சி. குறிப்பாக அறிவியல் கலந்த காதல் கதையாக பயணிக்கும் இதை, இணையத் தொடராக அல்லாமல் திரைப்படமாக எடுத்திருந்தால் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். இருந்தாலும், தொடராக பல எப்பிசோட்கள் மூலம் சொல்லப்பட்டாலும், அதையும் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்கள்.
நாயகியாக நடித்திருக்கும் பாடினி குமார் மற்றும் நாயகனாக நடித்திருக்கும் குரு லக்ஷ்மன் இருவருக்குமான கெமிஸ்ட்ரி மிக நன்றாகவே வேலை செய்திருக்கிறது. இருவருக்குமான அறிமுகம் மற்றும் உரையாடல்கள் ரசிக்கும்படி இருப்பதோடு, இருவருக்கும் இடையிலான சவால் மற்றும் அதைச் சார்ந்த காட்சிகள் கவிதை போல் பயணிக்கிறது.
சுமித்ரா தேவி, அனித் யாஷ் பால், யோகலக்ஷ்மி, இனியள், ஜீவா ரவி, சர்மிளா, பிரவீன் பிரின்ஸி, கலை, அஜித் பவித்ரா, சீனு என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் கதாபாத்திரத்திற்கு பொறுத்தமான தேர்வாக பயணித்திருக்கிறார்கள்.
கூலி செளந்தரராஜனின் ஒளிப்பதிவு, மைக்கேல் ஆகாஷின் இசை, நிசாமின் படத்தொகுப்பு மற்றும் அனிமேஷன், ராஜா.டி.எஸ்-ன் கலை என அனைத்துவிதமான தொழில்நுட்ப கலைஞர்களும் தங்கள் பணி மூலம் காதலுக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கும் சதாசிவம் செந்தில்ராஜன், காதல் கதையை வித்தியாசமான முயற்சியாக மட்டும் இன்றி, அறிவியலோடு சேர்த்து சொல்லி ரசிக்க வைத்தது மட்டும் அல்லாமல், தற்போதைய விஞ்ஞான காலத்தில் அறிவியல் கருவி மூலம் காதலை கண்டுபிடிப்பது சாத்தியமே, என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
ஒரு பக்கம் காதல் கருவி மூலம் அறிவியல் உலகத்திற்கு சாதகமாக பேசியிருந்தாலும், கருவியை தாண்டிய ஒரு உணர்வு தான் காதல் என்பதையும் சுவைபட சொல்லி காதல் கதையை திகிட்டாத தித்திப்பாக கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில், ‘ஹார்டிலே பேட்டரி’ இதயத்தை தொடும்.
ரேட்டிங் 4/5