Casting : Srikanth, Shrusti Dange, Black Pandi, VJ Pappu, Vikram, Divya, John Vijay, Devi Priya
Directed By : S.Manibharathi
Music By : Tajnoor
Produced By : Aanjaneya Productions & Srinithi Productions - K. Kandhasamy, K. Ganeshan, V. Vijayakumar, V. Logeshwari Vijayakumar
நாயகன் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது நண்பர்கள் வார விடுமுறையை கழிப்பதற்காக ஊட்டிக்கு செல்ல முடிவு செய்கிறார்கள். உடன் விலை மாதுவான சிருஷ்டி டாங்கேவையும் அழைத்து செல்கிறார்கள். சிருஷ்டி டாங்கே மீது காதல் கொள்ளும் ஸ்ரீகாந்த், அவரை தனது நண்பர்கள் தொடாதவாறு பார்த்துக் கொள்கிறார். அதே சமயம், சிருஷ்டி டாங்கே உடன் உல்லாசமாக இருக்க அவரது நண்பர்கள் துடிக்கிறார்கள்.
இந்த நிலையில், சிருஷ்டி டாங்கே திடீரென்று மாயமாகி விடுகிறார். மறுநாள் நான்கு நண்பர்களில் ஒருவரும் காணாமல் போய்விடுகிறார். மாயமான இருவரையும் நண்பர்கள் ஊட்டி முழுவதும் தேடுகிறார்கள். அவர்கள் கிடைத்தார்களா ? , அவர்கள் மாயமானதன் பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன ?, விலை மாது என்று தெரிந்தும் சிருஷ்டி டாங்கே மீது ஸ்ரீகாந்த் காதல் கொண்டது ஏன் ? ஆகிய கேள்விகளுக்கான விடை தான் படத்தின் மீதிக்கதை.
ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்திருந்தாலும், அவருக்கு இப்படி ஒரு நிலையா !, என்று அதிர்ச்சியடையும் விதத்தில் தான் அவரது படங்கள் இருக்கிறது. இருந்தாலும், தான் ஏற்று நடித்த கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் சிருஷ்டி டாங்கே, அழகோடு கொஞ்சம் கவர்ச்சியாகவும் வலம் வந்து பார்வையாளர்களை கவர்கிறார். அளவான நடிப்பு மற்றும் கவர்ச்சியில் படம் முழுவதும் ரசிக்க வைத்திருப்பவர், ஸ்ரீகாந்த் நண்பர்களைப் போல் படம் பார்க்கும் பார்வையாளர்களையும் ஏங்க வைத்து விடுகிறார்.
ஸ்ரீகாந்தின் நண்பர்களாக நடித்திருக்கும் பிளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஜான் விஜய், நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் திவ்யா, போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் தேவி பிரியா ஆகியோர் அளவாக நடித்து கதாபாத்திரங்களுக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
தாஜ்நூர் இசையில் ஒரு பாடல் என்றாலும், முனுமுனுக்க வைக்கும் ரகமாக இருக்கிறது. பின்னணி இசை கதைக்களத்திற்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் கோகுல், ஊட்டியின் வழக்கமான பகுதிகளை தவிர்த்துவிட்டு, காதல் மற்றும் திரில்லர் ஜானருக்கு ஏற்ற வகையிலான புதிய லொக்கேஷன்களில் காட்சிகளை படமாக்கி கதைக்களத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் எஸ்.மணிபாரதி, உணர்வுப்பூர்வமான காதல் கதை அதே சமயம் யூகிக்க முடியாத சஸ்பென்ஸ் திரில்லர் என இரண்டு ஜானர்களை அளவாக கையாண்டு இரண்டு மணி நேரம் போனதே தெரியாதவாறு படத்தை நகர்த்தி செல்கிறார்.
குறைவான கதாபாத்திரங்கள், விறுவிறுப்பு இல்லாத போலீஸ் விசாரணை ஆகியவை படத்தின் சிறிய பலவீனமாக இருந்தாலும், கதையை நேர்மையாக கையாண்ட விதம் அந்த குறைகளை மறக்கடித்து விடுகிறது.
விலை மாதுவான நாயகியை மையப்படுத்திய கதைக்கரு என்றாலும், எந்தவித ஆபாசமும் இன்றி காட்சிகளை அழகியலோடு படமாக்கியிருப்பவர், தான் சொல்ல வந்த கதையை மிக நாகரீகமாகவும், எளிமையாகவும் திரைக்கதையாக்கி இயக்கியிருக்கிறார்.
மொத்தத்தில், ‘தி பெட்’ தூங்க வைக்காமல் பார்க்க வைக்கும்.
ரேட்டிங் 3.2/5