Latest News :

‘டியர் ரதி’ திரைப்பட விமர்சனம்

a07ce4b56fc779aa1ac0c5db0aa93b80.jpg

Casting : Saravana vickram , Hasli Amaan, Rajesh Balachandiran, Sai Dinesh Badram, Yuvraj Subramaniyan

Directed By : Praveen k Mani

Music By : MS Jones Rupert

Produced By : Insomniacs Dream Creations LLP & Logline Pictures - Mohana Manjula.S

 

நாயகன் சரவண விக்ரமிற்கு சிறு வயதில் இருந்தே பெண்களிடம் பேசுவது என்றால் ஒருவித பயம். அதனால் அவருக்கு கைகூடிய இரண்டு காதல் கைவிட்டு போய் விடுகிறது. பெண்களிடம் அவருக்கு இருக்கும் பயத்தை போக்குவதற்காக அவரது நண்பர் பாலியல் தொழில் நடக்கும் இடத்திற்கு அவரை அழைத்து செல்கிறார். அங்கு பாலியல் தொழிலாளியான நாயகி ஹஸ்லி அமானை சந்திக்கும் நாயகனுக்கு அவர் மீது ஒருவித ஈர்ப்பு வருகிறது. அதனால், அவருடன் பழக ஆசைப்படுபவர், அவருடன் ஒருநாள் முழுவதும் செலவிட விரும்புகிறார். அதற்கு ஹஸ்லி அமானும் சம்மதிக்க, இருவரும் சேர்ந்து தங்களது ஒருநாள் பயணத்தை தொடங்குகிறார்கள்.  மறுபக்கம் ஹஸ்லி அமானை பெரும் கூட்டம் ஒன்று தேடி வருகிறது.

 

நாயகன் உடனான ஒருநாள் பயணத்தையும், பெரும் கூட்டத்தின் தேடுதல் பயணத்தையும் எதிர்கொள்ளும் நாயகி ஹஸ்லி அமான் யார் ?, இவற்றை அவர் எப்படி எதிர்கொள்கிறார், என்பதை பலவித குழப்பங்களோடு சொல்வதே ‘டியர் ரதி’.

 

நாயகனாக நடித்திருக்கும் சரவண விக்ரம், தொலைக்காட்சி தொடரில் நடித்த அனுபவம் பெற்றிருப்பதால், படம் முழுவதும் பேசிக்கொண்டே இருப்பதை சர்வ சாதாரணமாக செய்திருக்கிறார். வசன உச்சரிப்பில் எந்தவித தடுமாற்றமும் இன்றி நடித்திருப்பவர், அவ்வபோது பார்வையாளர்களை பார்த்தும் பேசுவதால், ”கொஞ்சமாவது நடிங்க சார்...”, என்ற பார்வையாளர்களின் குரலும் திரையரங்கில் கேட்க செய்கிறது. ஆனால், அதற்கான வாய்ப்பு படத்தில் மிக மிக குறைவு என்பதால் சரவண விக்ரமின் நிலை பரிதாபமே.

 

ரதி என்ற பாலியல் தொழிலாளி கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்திருக்கும் ஹஸ்லி அமான், பேரழகியாக தெரியவில்லை என்றாலும், எளிமையான அழகு மூலமாகவும், கண்கள் மூலமாகவும் கவர்ந்திழுக்கிறார். தனது கதாபாத்திரத்திற்கான பணியை திறம்பட செய்திருக்கிறார்.

 

காமெடித்தனம் கலந்த வில்லனாக வரதன் கதாபாத்திரத்தில் மிரட்ட முயற்சித்திருக்கிறார் ராஜேஷ் பாலச்சந்திரன். அவரது அறிமுக காட்சியிலேயே “யாருப்பா இந்த ஸ்னேக் பாபு” என்று யோசிக்க வைப்பவர், அதன் பிறகு சம்மந்தம் இல்லாமல் பேசி, ஒருவழியாக “நான் தான் வில்லன்” என்று பார்வையாளர்களிடம் தெரிவிக்கிறார். இந்த படத்திற்கு எதுக்கு வில்லன் ? என்று யோசிக்கும் போது தான், இதில் பிளாக் காமெடி போர்ஷன் இருப்பது தெரிகிறது. சரி நடந்துங்கப்பா...என்று விட்டால், ராஜேஷ் பாலச்சந்திரன் மற்றும் அவரது குழுவினர் அடித்து பிடித்து சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், சிரிப்பு சத்தம் துளி கூட தியேட்டரில் கேட்கவில்லை.

 

காட்வின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாய் தினேஷ் பத்ராம் மற்றும் ஷெரிப் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யுவராஜ் சுப்பிரமணியம் ஆகியோர் புதியவர்களாக இருந்தாலும், தங்கள் மீது கவனம் ஈர்க்க முயற்சித்திருக்கிறார்கள். 

 

லோகேஷ் இளங்கோவனின் ஒளிப்பதிவில் குறிப்பிட்ட வண்ணங்களும், புதுமையான கோணங்களும் படத்தின் தரத்தை உயர்த்தியிருப்பதோடு, பிளாக் காமெடி ஜானர் படத்தை பார்த்த அனுபவத்தை கொடுக்கிறது.

 

எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் பாடல்கள் தனி கவனம் பெறவில்லை என்றாலும், பின்னணி இசை கவனிக்க வைக்கிறது.

 

படத்தொகுப்பாளர் பிரேம்.பி, இயக்குநர் சொல்ல நினைத்ததை திரையில் கொண்டு வருவதற்கு கடுமையாக உழைத்திருக்கிறார். குறிப்பாக வசன காட்சிகள் அதிகம் இருப்பதோடு, கதை எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது, என்று தெரியாமல் அவரும் குழப்பமடைந்து, படம் பார்ப்பவர்களையும் பல இடங்களில் குழப்பமடைய செய்திருக்கிறார்.

 

எழுதி இயக்கியிருக்கும் பிரவீன் கே.மணி, காதல் குறித்து வகுப்பு எடுக்க முயற்சித்திருப்பவர், அதை கணக்கு பாடம் போல், பெரும்பாலனவர்களுக்கு புரியாதபடி எடுத்திருக்கிறார்.  

 

ஆரம்பத்தில் காதல் மற்றும் காமம் குறித்து பேசுபவர் பிறகு பாலியல் தொழில் மற்றும் பாலியல் தொழிலாளிகள் குறித்து பேசுவதோடு, அந்த தொழில் இந்தியாவில் உருவானது எப்படி?, அதற்காக பிரிட்டிஷ் ஆட்சியில் போட்ட சட்டம், என்று பல விபரங்களை தெரிவித்திருக்கிறார். 

 

பாலியல் தொழில் மற்றும் அதில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவாக இயக்குநர் பிரவீன் கே.மணி பேசுவது பாராட்டுக்குரியது என்றாலும், அதை திரைக்கதை ஓட்டத்திற்கு ஏற்றபடி சொல்லாமல், திணித்தது போல் சொல்லியிருப்பது படத்தை தொய்வடைய செய்கிறது. அதே சமயம், திரைக்கதையில் இடம்பெற்றிருக்கும் பிளாக் காமெடி காட்சிகளில் நடிகர்கள் போட்டி போட்டு நடித்தாலும், அவர்களது நடிப்பு, உடல் மொழி ஆகியவை சிரிக்கும்படி இல்லாததும் படத்திற்குப் பெரும் பலவீனம்.

 

காதல் மற்றும் அது தரக்கூடிய உணர்வை ஒருவர் சொல்வதனால் புரிந்துக் கொள்ள முடியாது, அதை அனுபவித்தால் மட்டுமே புரிந்துக் கொள்ள முடியும். ஆனால், இயக்குநர் காதல் குறித்து படத்தின் டைடில் கார்டு போடும் போதே, பக்கம் பக்கமாக பேசுகிறார். அவரது அந்த பேச்சு எதற்காக, யாருக்காக என்பதே தெரியவில்லை. ஒருவழியாக காதல் பிரச்சாரத்தை முடித்து கதைக்குள் போகிறவர், அங்கேயும் திரைக்கதையை சரியான நேர்கோட்டில் பயணிக்க வைக்காமல், எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தெரியாமல் ஒருவித குழப்பத்தோடு படத்தை நகர்த்திச் செல்கிறார். இறுதியில் நாயகி யார் ?, அவரது மனநிலை என்ன ? என்பதையும் தெளிவில்லாமல் சொல்லியிருக்கிறார்.

 

சில இடங்களில் குழப்பமான சூழ்நிலை இருந்தாலும், சூழ்நிலை எதையும் சாத்தியப்படுத்தும் என்ற கருத்தோடு, காதலைப் பற்றி சில இடங்களில் ரசிக்கும்படியும் சொல்லியிருக்கும் இயக்குநர் பிரவீன் கே.மணி, காதலை பற்றி மட்டுமே பேசியிருந்தால் படம் அனைத்து தரப்பினரையும் ரசிக்க வைத்திருக்கும்.

 

மொத்தத்தில், ‘டியர் ரதி’ பெரும் குழப்பவாதி.

 

ரேட்டிங் 3/5

Recent Gallery