Casting : Sivakarthikeyan, Ravi Mohan, Atharvaa, Sreeleela, Chethan, Prithvi Pandiarajan, Kaali Venkat
Directed By : Sudha Kongara
Music By : G.V. Prakash
Produced By : Dawn Pictures - Aakash Baskaran
இந்தி திணிப்புக்கு எதிராக போராடும் மாணவர் அமைப்பை தலைமை தாங்கி வழிநடத்தும் சிவகார்த்திகேயன், தனது தோழனின் இழப்பால் போராட்டத்தை கைவிட்டுவிட்டு ரயில்வே துறையில் சாதாரண ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சில வருடங்களுக்குப் பிறகு கல்லூரியில் படிக்கும் சிவகார்த்திகேயனின் தம்பி அதர்வா, இந்தி திணிப்புக்கு எதிராக தனது கல்லூரி தோழர்களுடன் இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். தம்பியின் செயலை கண்டு கவலைக் கொள்ளும் சிவகார்த்திகேயன், அவரை கண்டிக்கிறார்.
இதற்கிடையே, போராட்டங்களை கட்டுப்படுத்தி, போராட்டக்காரர்களை வேறோடு அழிப்பதற்காக மத்திய அரசால் நியமிக்கப்படும் ஐபிஎஸ் அதிகாரியான ஜெயம் ரவி, தனது பணியில் வெறித்தனமாக செயல்படுகிறார்.
இந்த நிலையில், மத்திய அரசின் இந்தி திணிப்பு கொள்கையினால் தமிழர்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்படுகிறார்கள். சிவகார்த்திகேயனும் இந்தி மொழியால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்படுகிறார். மறுபக்கம் அவரது தம்பி அதர்வா மற்றும் அவரது நண்பர்கள் இந்தி திணிப்புக்கான தங்களது போராட்டங்களை தீவிரப்படுத்த, அண்ணன் சிவகார்த்திகேயன் என்ன செய்தார், என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்வதே ‘பராசக்தி’.
செழியன் என்ற கதாபாத்திரத்தில் மொழிப்பற்று மிக்க மாணவராக நடித்திருக்கும் சிவகார்த்திகேயனின் துடிப்பு மிக்க நடிப்பு அவரது கதாபாத்திரத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது. அரசியல் பின்னணி கொண்ட கதைக்களத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கும் சிவகார்த்த்கேயன், மாணவ போராளியாகவும் சரி, சாமானிய மத்திய அரசு ஊழியராகவும் சரி, தனது வசன உச்சரிப்பு மற்றும் உடல் மொழி மூலம் செழியன் என்ற கதாபாத்திரத்தை செதுக்கியிருக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ரவி மோகன், குறைவான வசனம் மற்றும் அளவான நடிப்பின் மூலம் வில்லத்தனத்தை அசத்தலாக வெளிக்காட்டியிருக்கிறார். போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீதான தனது கடும்கோபத்தை தனது பார்வையின் மூலமாகவே வெளிக்காட்டியிருக்கும் ரவி மோகனின் ஒவ்வொரு செயலும், அவர் மீது படம் பார்ப்பவர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்துகிறது.
அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதர்வா, இந்தி திணிப்புக்கு எதிராக பேசும் வசனங்கள் அனைத்தும் கவனம் ஈர்க்கிறது. சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் ராணா டக்குபதி, ஃபாசில் ஜோசஃப், தனஜெயன் ஆகியோரது திரை இருப்பு தனி கவனம் பெறுகிறது.
நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீலீலா, திரைக்கதையோடு பயணிக்கும் வலுவான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து தனித்து நிற்கிறார்.
ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன், 1960-க்கு முந்தைய காலக்கட்டங்களில் பயணித்த உணர்வை படம் பார்ப்பவர்களுக்கு கொடுத்திருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் கேட்கும்படி உள்ளது. பின்னணி இசை உணர்வுப்பூர்வமாக பயணித்து கதைக்களத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
அரசியல் பின்னணி கொண்ட கதைக்களத்தை சுவாரஸ்யமாக மட்டும் இன்றி விறுவிறுப்பாகவும் நகர்த்தி செல்லும் விதத்தில் படத்தொகுப்பாளர் சதிஷ் சூர்யா காட்சிகளை தொகுத்திருக்கிறார்.
கலை இயக்குநர் எஸ்.அண்ணாதுரை, அக்காலத்து கட்டிடங்கள், ரயில் நிலையம், ரயில் என அனைத்து விசயங்களையும் மிக நுணுக்கமாக கையாண்டிருப்பது உண்மைக்கு நெருக்கமாக உள்ளது.
ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா மற்றும் ஒப்பனை கலைஞரின் பணியும் கவனம் ஈர்க்கிறது.
சுதா கொங்குரா மற்றும் அர்ஜுன் நடேசன் ஆகியோரது எழுத்து, இந்தி திணிப்பின் பாதிப்பு மற்றும் அதில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க போராடியவர்களின் தியாகங்களை காட்சிகள் மற்றும் வசனங்கள் மூலம் பார்வையாளர்களிடம் மிக எளிமையாகவும், அழுத்தமாகவும் கடத்தியிருக்கிறது.
”மொழி என்பது வெறும் வார்த்தைகள் அல்ல, அது ஒருவரது அடையாளம்” என்பதையும், அந்த மொழியை காக்க எத்தகைய போராட்டங்களை வழிநடத்தியிருக்கிறார்கள் என்பதையும், காட்சி மொழியின் மூலம் மிக சிறப்பாக சொல்லியிருக்கும் இயக்குநர் சுதா கொங்குரா, சித்தரிக்கப்பட்ட காட்சிகள் மூலம் இந்தி திணிப்பின் பாதிப்பை அனைத்து மக்களும் எளிமையான முறையில் புரிய வைத்திருக்கிறார்.
மாபெரும் மொழி போரை உண்மைக்கு நெருக்கமாக சொல்லி, பார்வையாளர்களின் முழு கவனத்தையும் படம் ஈர்த்தாலும், காதல் காட்சிகளின் நீளம் சில இடங்களில் கவன சிதறலை உண்டாக்குகிறது. இருப்பினும், இரண்டாம் பாதியில் காதல் காட்சிகளை முழுமையாக தவிர்த்துவிட்டு, மொழி போரின் வீரியத்தை சொல்லி மீண்டும் ரசிகர்களின் முழு கவனத்தையும் படம் ஈர்த்து விடுகிறது.
தணிக்கை குழு பல இடங்களில் கட் மற்றும் மியூட் கொடுத்திருந்தாலும் அவை இயக்குநரின் கருத்தீயலை எந்த வகையிலும் பாதிக்காமல், அவர் என்ன சொல்ல நினைத்தாரோ, மக்களுக்கு எதை புரிய வைக்க முயற்சித்தாரோ, அதை முழுமையாக செய்திருக்கிறார்.
மொத்தத்தில், கலைஞரின் பராசக்தி போல் இந்த ‘பரசாக்தி’-யும் மக்கள் மனதில் இடம் பிடித்து வெற்றி முரசு கொட்டும்.
ரேட்டிங் 4.8/5