Latest News :

‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்பட விமர்சனம்

e349745e72b391b14f77f6b5c29bb448.png

Casting : Jiiva, Prathana Nathan, Thambi Ramaiah, Anuraj, Ilavarasu, Jenson Dhivakar, Sarjin Kumar, Jaiwanth,Rajesh Pandian, Amith Mohan, Subash Kannan, Sharath, Savithri

Directed By : Nithish Sahadev

Music By : Vishnu Vijay

Produced By : Kannan Ravi Productions - Kannan Ravi

 

பஞ்சாயத்து தலைவரான ஜீவா, ஊர் மக்களின் வாக்குகளுக்காக அவர்களது வீட்டு விசேஷங்கள் முதல் துக்கம் நிகழ்வு வரை அனைத்தையும் தலைமை ஏற்று நடத்துகிறார். அதன்படி, இளவரசுவின் மகள் திருமணத்திற்கான பணிகளில் ஜீவா ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, அவரது பக்கத்து வீட்டுக்காரரான தம்பி ராமையாவின் நோய்வாய்ப்பட்ட தந்தை இறந்து விடுகிறார். 

 

இளவரசு மற்றும் தம்பி ராமையா இருவருக்குமிடையே ஏற்கனவே பகை இருப்பதால், இளவரசுவின் மகள் திருமணம் நடைபெறும் அதே நேரத்தில் தான், தனது தந்தையின் இறுதி ஊர்வலமும் நடக்க வேண்டும், என்று தம்பி ராமையா பிடிவாதம் பிடிக்கிறார். தன் மகள் திருமணம் தனது வீட்டில் தான் நடக்க வேண்டும், என்பதில் இளவரசுவும் உறுதியாக இருக்கிறார். 

 

இந்த இரண்டு குடும்பங்களையும் சமாதானப்படுத்தி, இரண்டு நிகழ்வுகளையும் சரியாக நடத்தும் பொறுப்பை ஏற்று பஞ்சாயத்து செய்யும் ஜீவா, அதில் வெற்றி பெற்றாரா ? என்பதை சிரிக்கும்படியும், சிந்திக்கும்படியும் சொல்வதே ‘தலைவர் தம்பி தலைமையில்’.

 

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடத்திலும் அன்பாகவும், அக்கறையாகவும், நட்பாகவும் பழகும் ஒரு கலகலப்பான மற்றும் பொறுப்பான கதபாத்திரத்தில் மிக சரியாக பொருந்திப் போகும் ஜீவா, தனது இயல்பான நடிப்பு மூலம் முழு படத்தையும் தன் தோளில் சுமந்திருக்கிறார்.  ஜீவாவை தவிர்த்து படத்தில் இடம் பெறும் அனைத்து கதாபாத்திரங்களும் திரைக்கதையில் முக்கியத்துவம் பெற்று, பார்வையாளர்களை சிரிக்க வைத்தாலும், அவர்கள் அனைவரையும் தலைமை தாங்கி வழி நடத்தும் தலைவராக ஜீவா முத்திரை பதித்துள்ளார்.

 

’பார்க்கிங்’ படத்தில் மகளாக கவனம் ஈர்த்த பிரார்த்தனா நாதன், இதில் மணமகள் கதாபாத்திரத்தில் எளிமையான அழகு மற்றும் அளவான நடிப்பு மூலம் பார்வையாளர்கள் மனம் கவர்கிறார். 

 

கதையின் மையப்புள்ளிகளாக பயணித்திருக்கும் இளவரசு மற்றும் தம்பி ராமையா இயல்பான நடிப்பின் மூலம் திரைக்கதையின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறார்கள். 

 

ஜென்சன் திவாகர், சர்ஜின் குமார், ஜெய்வந்த், ராஜேஷ் பாண்டியன், அமித் மோகன், சுபாஷ் கண்ணன், சரத், சாவித்ரி ஆகியோர் படம் முழுவதும் சிரிக்க வைக்கிறார்கள்.

 

படம் முழுவதையும் கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் பப்ளு அஜு, மலையாளப் படத்தை பார்த்த உணர்வை கொடுக்கிறார்.

 

இசையமைப்பாளர் விஷ்ணு விஜய் இசையில் பாடல்கள் கொண்டாட்டம் ரகம். பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது.

 

படத்தின் துவக்கம் முதல் இறுதி வரை, ஒரு குறிப்பிட்ட லொக்கேஷனில் கதை பயணித்தாலும் அந்த உணர்வே ஏற்படாத வகையில் படத்தை வேகமாக நகர்த்தி செல்லும் படத்தொகுப்பாளர் அர்ஜுனே பாபு, இயக்குநர் சொல்ல வந்த கருத்தையும் பார்வையாளர்களிடத்தில் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார்.

 

சஞ்சோ ஜோசப், நிதிஷ் சகாதேவ் மற்றும் அனுராஜ்.ஓ.பி ஆகியோரது திரைக்கதை எளிமையான கதைக்கருவுக்கு மிகப்பெரிய வலிமை சேர்த்திருக்கிறது. படம் முழுவதும் நகைச்சுவையாக இருந்தாலும், அதில் பேசப்பட்டிருக்கும் சில விசயங்கள் சிந்திக்க வைக்கிறது.

 

இயக்குநர் நித்திஷ் சகாதேவ், எதார்த்தமான வாழ்வியல் சம்பவங்களை மிக நேர்த்தியான காட்சிகள் மூலம் நகைச்சுவையாக சொல்லி ரசிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக படம் முழுவதையும் மலையாளப் படம் போன்று கையாண்டது தமிழ் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கிறது.

 

மொத்தத்தில், ‘தலைவர் தம்பி தலைமையில்’ கொண்டாட்டம்.

 

ரேட்டிங் 3.5/5

Recent Gallery