Casting : Dinesh, Reshma Venkatesh, Madhunika, Mansoor Alikhan, Arjay, Saravana Subbaiah, Kalaiyarasan Kannusamy
Directed By : Murali Krish.S
Music By : Inbaa
Produced By : Yasho Entertainment - DR Murali Krishnan
ஆன்லைன் திருமண தகவல் மையத்தின் மூலம் சந்திக்கும் நாயகன் தினேஷும், நாயகி ரேஷ்மா வெங்கடேஷும் காதலிக்கிறார்கள். தனது வருங்கால மனைவியின் ஆசைக்காக பழைய கருப்பு நிற பல்சர் பைக் ஒன்றை தினேஷ் வாங்குகிறார். அந்த பைக் அவரிடம் வந்ததில் இருந்து அவரது வாழ்க்கையில் சில தவறான சம்பவங்கள் நடக்கிறது. இதற்கிடையே, தினேஷின் பைக் மூலம் சில அமானுஷ்ய சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதோடு, உயிர் பலியும் ஏற்படுகிறது. இதனால் அச்சத்தில் இருக்கும் தினேஷுக்கு, அந்த கருப்பு பல்சர் பைக் பற்றிய அதிர்ச்சிகரமான உண்மை தெரிய வருகிறது. அது என்ன ?, என்பதே படத்தின் கதை.
நாயகனாக நடித்திருக்கும் தினேஷ் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், தோற்றத்தில் இரண்டுக்கும் பெரிய வித்தியாசத்தை காட்டவில்லை. வழக்கம் போல் தனது கதாபாத்திரத்தை மிக சாதாரணமாக கையாண்டு இருப்பவர், சில இடங்களில் வாய் அசைவு தெரியாதவாறு வசனங்களை உச்சரிக்கிறார். இதனால், அவர் பேசும் காமெடி வசனங்கள் எடுபடாமல் போகிறது. இருந்தாலும், உணர்வுப்பூர்வமான காட்சிகளில் பாராட்டும்படி நடித்திருப்பவர், ஜல்லிக்கட்டு போட்டியிலும் நம்பும்படி நடித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ரேஷ்மா வெங்கடேஷ் பாடல் காட்சிகளுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கிறார். மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் மதுனிகா, பாடல் காட்சிக்கு கூட பயன்படுத்தப்படவில்லை.
வில்லனாக நடித்திருக்கும் அர்ஜய் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார். மன்சூர் அலிகானின் அனுபவம் வாய்ந்த நடிப்பு படத்திற்கு அடையாளத்தை கொடுத்திருக்கிறது. அவரது அடியாளாக நடித்திருக்கும் கலையரசரன் கன்னுசாமி மற்றும் அவரது குழுவினரின் காட்சிகள் சிரிக்க வைக்கிறது. போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் சரவண சுப்பையாவின் கதாபாத்திரம் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
பாஸ்கர் ஆறுமுகத்தின் ஒளிப்பதிவில் ஜல்லிக்கட்டு போட்டியை காட்சிப்படுத்திய விதம் மற்றும் உண்மையான ஜல்லிக்கட்டு போட்டி காட்சிகளை இணைத்து, படத்தின் காட்சிகளை வடிவமைத்த விதம் ரசிக்க வைக்கிறது.
இன்பாவின் இசை மற்றும் பாடல்கள் கதைக்களத்தை விவரிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. பின்னணி இசையில் குறையில்லை.
ஜல்லிக்கட்டு போட்டியில் இருக்கும் அரசியல் கதைக்களமாக இருந்தாலும், அதை கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த திரைக்கதையோடு விவரித்திருக்கும் இயக்குநருக்கு, படத்தொகுப்பாளர் சசி தக்ஷாவின் பணி பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் முரளி கிரிஷ்.எஸ், ஜல்லிக்கட்டு போட்டியின் பின்னணியில் இருக்கும் சாதி அரசியல், என்ற பலமான கதைக்கருவை, கமர்ஷியல் பாணியில் சொல்லியிருந்தாலும், தான் சொல்ல நினைத்த கருத்தை பார்வையாளர்கள் மனதில் ஆழமாக பதிய வைத்து விடுகிறார்.
குறிப்பிட்ட பட்ஜெட் எல்லைக்குள் படம் பயணித்தாலும், மையக்கருவான ஜல்லிக்கட்டு போட்டியை உண்மைக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, அதை திகில், காமெடி, காதல் என அனைத்துவிதமான ஜானர்களுடன் ஒன்று சேர்த்து சொல்லி, அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும் படமாக கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் முரளி கிரிஷ்.எஸ்.
மொத்தத்தில் ‘கருப்பு பல்சர்’ கவனம் ஈர்க்கும்
ரேட்டிங் 3.3/5