Casting : Vadivukkarasi, Dhileepan, Singam Puli, Gaja Raja, Ananthu Nag, Aparna, Master Ghanshyam, Baby Sandrea
Directed By : Vijaya Kumaran
Music By : Dr. Chelliah Pandian
Produced By : Vijay Mary Universal Media - T. Vijayamary
கேரளா - தமிழக எல்லைப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில், 10 வயதுக்குள் இருக்கும் ஒரு சிறுமி கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். அந்த கொலை வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி தீலீபனுக்கு, ஒரு தகவல் கிடைக்கிறது. அந்த தகவலை வைத்து விசாரணையை தீவிரப்படுத்துகிறார்.
இதற்கிடையே, லண்டனில் இருந்து தனது மனைவி, இரண்டு குழந்தைகளுடன் தமிழகத்தில் இருக்கும் தன் பூர்வீக வீட்டில் ஆனந்த் நாக் குடியேறுகிறார். வீட்டை சரி செய்யும் வேலைகளில் அவர் பரபரப்பாக இருக்கும் நேரத்தில், வீட்டு வாசலில் ஒரு மூதாட்டி மயக்கம் அடைந்து விழுகிறார். அவரை உள்ளே அழைத்து வந்து, படுக்க வைக்கிறார். அந்த மூதாட்டியை பார்க்கும் ஊர் தலைவர், அவரைப் போலவே இருக்கும் ஒரு மூதாட்டி பற்றிய பயங்கரமான கதை ஒன்றை சொல்லி ஆனந்த் நாக்கை எச்சரிக்கிறார்.
ஊர் தலைவரின் கதையை ஆனந்த் நாக் உதாசினப்படுத்த, மறுபக்கம் அவரது மனைவி, அந்த மூதாட்டி தான் தங்களது வீட்டின் முந்தைய உரிமையாளர் என்பதோடு, அவரைப் பற்றிய அதிர்ச்சிகரமான மற்றொரு தகவலையும் தெரிந்துக் கொண்டு அச்சத்தில் உரைந்து போகிறார். அதேபோல், காவல்துறை அதிகாரி திலீப்பனும் மூதாட்டியின் மறுபக்கம் அறிந்து, அவரை தேடி ஆனந்த் நாக் வீட்டுக்கு வருகிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களையும், அந்த மூதாட்டி யார் ? என்பதையும் அச்சத்தின் உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் வகையில் சொல்வதே ‘க்ராணி’.
சிறுவர்களுக்கு கதை சொல்லி தூங்க வைக்கும் பாட்டிகளை பார்த்திருக்கிறோம், ஆனால் தன் தேவைக்காக அந்த சிறுவர்களை வேட்டையாட துடிக்கும் ஒரு பாட்டியின் மூலம் பார்வையாளர்களை பயத்தில் ஆழ்த்தும் ஒரு முயற்சியை மேற்கொண்டிருக்கிறார் இப்படத்தின் இயக்குநர் விஜய குமாரன்.
ஒச்சாயி மூதாட்டியாக, அதீத ஒப்பனையோடு நடித்திருக்கும் வடிவுக்கரசி, தள்ளாடும் வயதோடு, ஆரம்பத்தில் இறக்கப்பட வைத்தாலும், அடுத்தடுத்த காட்சிகளில் அவர் முகத்தில் தெரியும் வெறித்தனம், பார்வையாளர்களை பீதியடைய செய்கிறது. எந்த பக்கம் போனாலும், மின்னல் போல் சட்டென்று வந்து நிற்பதும், எதிரே இருப்பவரை விட பல அடி உயரத்திற்கு விஸ்வரூபம் எடுப்பதும், என்று இரண்டாம் பாதி முழுவதும் அதிரடி ஆட்டம் ஆடியிருக்கும் வடிவுக்கரசி, வசனம் ஏதும் பேசாமல் தனது நடிப்பு மற்றும் பார்வை மூலமாகவே மிரட்டியிருக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் திலீபன், போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் சிங்கம்புலி, ஊர் தலைவராக நடித்திருக்கும் கஜராஜ், வீட்டின் உரிமையாளராக நடித்திருக்கும் ஆனந்த் நாக், அவரது மனைவியாக நடித்திருக்கும் அபர்ணா மற்றும் குழந்தை நட்சத்திரங்களான மாஸ்டர் கன்ஷியாம், பேபி சாண்ட்ரியா என அனைவரும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஏ.மணிகண்டனின் கேமரா, பழைய வீட்டுக்குள் நடக்கும் திகில் சம்பவங்களை பரபரப்பின் உச்சமாக காட்சிப்படுத்தியிருக்கிறது.
இசையமைப்பாளர் டாக்டர்.செல்லையா பாண்டியனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்களத்திற்கும், காட்சிகளுக்கும் உயிரூட்டியிருக்கிறது.
எம்.எஸ்.கோபியின் படத்தொகுப்பு குழப்பம் இல்லாமல் கதை சொல்லியிருப்பதோடு, குழந்தைகள் தப்பிப்பார்களா ? என்பதை பரபரப்பாக நகர்த்தி பார்வையாளர்களை சீட் நுணியில் உட்கார வைத்து விடுகிறது.
எழுதி இயக்கியிருக்கும் விஜய குமாரன், குழந்தைகளுக்கு சொல்லப்படும் மாய மந்திர கதைகளை மையமாக வைத்து, ஒரு சுவாரஸ்யமான திகில் கதையை சொல்லியிருப்பதோடு, அதன் பின்னணியில் ஒரு மூதாட்டியை வைத்து பார்வையாளர்களை அச்சுறுத்தியிருக்கிறார்.
சுவாரஸ்யமான கதை சொல்லல், அதிர்ச்சியளிக்கும் மூதாட்டியின் பின்னணி, ஆபத்தில் இருக்கும் சிறுவர்கள், விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை அதிகாரி என, பல ஈர்ப்பான அம்சங்களோடு ஒரு திகில் கதைக்களத்தை, மிக நேர்த்தியாக கையாண்டிருக்கும் இயக்குநர் விஜய குமாரன், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படமாக கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில், ‘க்ராணி’ கதை சொல்லும் பாட்டி அல்ல, கதற விடும் பாட்டி.
ரேட்டிங் 3.2/5