Casting : Sri Deva, Nivedha, Vela Ramamurthy, Saravana Subbaiah, Saravana Sakthi, Rindhu Ravi, Naveen Krishna, Vaigunda Selvan, Vijayan, Jayanthi, Divya, Sindhuja,
Directed By : Vel Kumaresan
Music By : Bharani
Produced By : ML Productions - Arumugam Mathappan
பொறியியல் பட்டதாரியான நாயகன் ஸ்ரீதேவா, பலரிடம் பல லட்சங்கள் கடன் வாங்கி விட்டு, அதை திருப்பிக் கொடுக்காமல் இருக்கிறார். இதனால், அவர் எங்கு போனாலும், கடன்காரர்கள் விரட்டுகிறார்கள். கடன் கொடுத்தவர்களிடம் இருந்து தப்பித்து ஓடிக்கொண்டிருப்பவர், கடனை அடைப்பதற்காகவும், வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதற்காகவும், சிலரிடம் பொய் சொல்லி, ஏமாற்றி பணம் பறிக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையே, சிறு வயதில் இருந்தே போலீஸ் ஆக வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் நாயகி நிவேத, அதற்காக எவ்வளவு பணம் செலவு செய்யவும் தயாராக இருக்கிறார். நிவேதாவின் எண்ணத்தை அறிந்துக் கொண்ட ஸ்ரீதேவா, அவரிடம் பொய் சொல்லி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அதன்படி, இருவரும் நட்பாக பழகுவதோடு, ஸ்ரீதேவாவை நம்பி அவர் கேட்கும் பணத்தை கொடுக்க நிவேதா சம்மதிக்கும் நிலையில், அவரைப் பற்றிய உண்மையை தெரிந்துக் கொள்கிறார். இதனால் கோபமடையும் அவர், தான் போலீஸ் ஆன பிறகு நாயகனுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும், என்ற முடிவுக்கு வருகிறார். அவர் நினைத்தது நடந்ததா?, ஸ்ரீதேவா எதற்காக கடன் வாங்கினார் ?, அவர் கடனை அடைத்தாரா, இல்லையா ?, என்பது தான் மீதிக்கதை.
பல திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வரும் சின்னத்திரை பிரபலம் ஸ்ரீதேவா, நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். அப்பாவியான முகம், பொய்யை நம்பும்படியாக சொல்லும் திறன், என்று கதாபாத்திரத்திற்கு பொறுத்தமான தேர்வாக இருப்பவர், நகைச்சுவை, காதல், செண்டிமெண்ட் என அனைத்து உணர்வுகளையும் மிக இயல்பாக வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார். நல்ல கதைகளை தேர்வு செய்தால் நிச்சயம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக உருவெடுப்பதற்கான அனைத்து அம்சங்களும் அவரிடத்தில் இருக்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் நிவேதா புதுவரவு என்றாலும், கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார். பாடல் காட்சிகளில் பளிச்சென்று ஜொலிப்பவர், அளவான அழகு மற்றும் நடிப்பு என தன் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.
நாயகியின் தந்தையாகவும், வில்லனாகவும் நடித்திருக்கும் வேல ராமமூர்த்தி வழக்கமான தனது முறைப்பு மற்றும் விறைப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகனின் மாமாவாக நடித்திருக்கும் சரவண சக்தி, சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சரவண சுப்பையா, ரிந்துரவி, நவீன் கிருஷ்ணா, வைகுண்ட செல்வன், விஜயன், திவ்யா, ஜெயந்தி, சிந்துஜா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரையை நிரப்ப பயன்பட்டிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஆர்.என்.சிவகுமார் சிறிய முதலீட்டுக்கு ஏற்றபடி பணியாற்றினாலும், காட்சிகளை தரமாக படமாக்கியிருக்கிறார். பாடல் காட்சியையும் குறிப்பிட்ட பட்ஜெட்டில் படமாக்கியிருந்தாலும், கலர்புல்லாக காட்சிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.
பரணி இசையில் பாடல்கள் அனைத்தும் கமர்ஷியல் அம்சம். பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் சுரேஷ் அர்ஸ், இயக்குநநர் வரிசைப்படுத்திய காட்சிகளை நேர்த்தியாக தொகுத்து கொடுத்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் வேல் குமரேசன், பழைய பாணியிலான கமர்ஷியல் கதையை, அதே பழைய பாணியில் சொல்லியிருக்கிறார். படத்தின் தலைப்பு ஹீரோவை மையப்படுத்தியதாக இருந்தாலும், படத்தில் அவரிடம் இருந்து கடனை வசூலிக்க முடியாமல் பலர் திண்டாடுகிறார்கள்.
காதல் மற்றும் நகைச்சுவையை மையமாக கொண்டு நகரும் திரைக்கதையில், நிருபரின் கொலை, அதன் குற்றவாளியை பிடிக்க காவல்துறை அதிகாரி போடும் திட்டம், என்று மற்றொரு பாதையில் பயணிக்கும் கதை, இறுதியில் எப்படி ஹீரோவின் வாழ்க்கையை மாற்ற உதவுகிறது, என்ற விசயம் படத்திற்கு சிறிது சுவாரஸ்யத்தை சேர்த்திருக்கிறது.
திரைக்கதையில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும், அதற்கான நட்சத்திர தேர்வு இல்லாதது படத்தை சற்று பலவீனப்படுத்துகிறது. இருந்தாலும், நாயகன், அவரது மாமா கதாபாத்திரம் மற்றும் நாயகி மூலம் படத்தை கலகலப்பாக நகர்த்தி செல்லும் இயக்குநர் வேல் குமரேசன், சகோதரி மற்றும் அம்மா செண்டிமெண்ட்டை இடையில் நுழைத்து, பார்வையாளர்களை கலங்கடிக்கவும் செய்து விடுகிறார்.
மொத்தத்தில், ‘வசூல் மன்னன்’ வெற்றி வாகை சூடினால் நல்லது.
ரேட்டிங் 2.8/5