’கொலைச்சேவல்’ திரைப்பட விமர்சனம்

c1a32af298b261e7a1ef2f283c18043c.jpg

Casting : Kalaiyarasan, Deepa Balu, Bala Saravanan, Gajaraj, Vijay Sathya, Aadhav Chandra, Akaran Venkat, Vijayalakshmi, Jayalakshmi, Rajamani, Dhanalakshmi, Manjula, Kayal, Manimegalai

Directed By : VR. Thudhivaanan

Music By : Santhan

Produced By : RP Films - R.P.Bala - Kousalya Bala

 

நாயகி தீபா பாலு, பெற்றோரின் எதிர்ப்பை மீறி தான் காதலித்த நாயகன் கலையரசனை திருமணம் செய்து கொள்கிறார். வெளியூரில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் மீண்டும் ஊருக்கு திரும்புகிறார்கள். ஊர் வழக்கப்படி, காட்டுப்பகுதியில் இருக்கும் நிறைசூலி தெய்வத்திற்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தால் குழந்தை நல்லபடியாக பிறக்கும் என்பதால்,  நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தீபா பாலு, தன் கணவர் உள்ளிட்ட குடும்பத்துடன் கோவிலுக்கு செல்கிறார். 

 

குலதெய்வத்தை வணங்க சென்றாலும், மனதுக்குள் ஒருவித பயத்துடனும், பதற்றத்துடனும் செல்லும் தீபா பாலு, எதிர்பாக்காத பிரச்சனை ஒன்றை எதிர்கொள்கிறார். அது என்ன ? என்பதை சமூகத்தில் காலம் காலமாக நடக்கும், நடந்துக் கொண்டிருக்கும் கொடூர சம்பவத்தின் வலியாகவும், வேதனையாகவும் சொல்வதே ‘கொலைச்சேவல்’.

 

கதாநாயகனாக நடித்திருக்கும் கலையரசன், இதற்கு முன்பே இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், இதில் தனது எதார்த்தமான நடிப்பு மற்றும் கடுமையான உழைப்பின் மூலம் எளிமையான கதைக்கு பெரும் வலிமை சேர்த்திருக்கிறார்.

 

கதாநாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை தீபா பாலு, பார்த்த உடனே பிடித்துப் போகும் குடும்ப பாங்கான முகத்தோடு வலம் வருகிறார். கதபாத்திரத்திற்கான பொறுத்தமான தேர்வாக இருப்பதோடு, எதார்த்தமான மற்றும் இதயம் கனக்க செய்யும் நடிப்பை வெளிப்படுத்தி பார்வையாளர்களை கண்கலங்க வைத்து விடுகிறார். குறிப்பாக அழுத்தமான காட்சிகளில் ஒரு நடிகையாக அல்லாமல் அந்த கதாபாத்திரமாக அடி உதை வாங்கி கடினமான காட்சிகளில் அதிகமாக மெனக்கெட்டு நடித்திருக்கும் அவரை அதற்காகவே தனியாக பாராட்டலாம்.

 

நாயகனின் நண்பராக நடித்திருக்கும் பால சரவணன், நகைச்சுவை நடிகராக அல்லாமல் குணச்சித்திர நடிகராக நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார். ஆனால், இறுதிக் காட்சியில் அவரது வருகை புரண்டு அழுவதை தவிர வேறு எதையும் செய்யாதது ஏமாற்றமே.

 

வசனம் பேசாத கதாபாத்திரம் என்றாலும், அந்த வேடத்தின் வெறித்தனத்தை தன் முகத்திலும், நடிப்பிலும் வெளிக்காட்டியிருக்கிறார் கஜராஜ். 

 

விஜய் சத்யா, ஆதவ் சந்திரன், அகரன் வெங்கட், விஜலட்சுமி, ஜெயலட்சுமி, ராஜாமணி, தனலட்சுமி, மஞ்சுளா, கயல், மணிமேகலை ஆகியோர் மண் சார்ந்த மக்களாக பயணித்திருக்கிறார்கள்.

 

பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு கிராமத்து அழகையும், மக்களின் கொடூரமான மனங்களையும் எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறது. கொலை சம்பவத்தை காட்சிப்படுத்திய விதம் அதீத வன்முறையோடு இருந்தாலும், அதன் பின்னணியில் இருக்கும் வலி மற்றும் வேதனையை மக்கள் மனதில் கடத்தும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

 

சாந்தன் இசையமைப்பில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டுமே மனித உணர்வுகளுக்கு உயிரூட்டும் வகையில் பயணித்திருக்கிறது. அமைதியான சுழல் என்றாலும், வரப்போகும் ஆபத்தை பிரதிபலிக்கும் வகையில் ஒலிக்கும் பழைய பாடல் மற்றும் பதற்றமான சூழலை விவரிக்கும் பீஜியம் ஆகியவை பார்வையாளர்களை கவனத்தை முழுமையாக ஈர்த்து விடுகிறது.

 

காதல், எதிர்பார்க்காத அதிர்ச்சிகரமான சம்பவம் மற்றும் நடிகர்களின் இயல்பான நடிப்பு ஆகியவற்றுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் திரைக்கதையை,  சுருக்கமாக சொன்னாலும், மிக சுவாரஸ்யமான படமாக நகரும்படி பணியாற்றியிருக்கிறார் படத்தொகுப்பாளர் அஜய் மனோஜ்.

 

சமூகத்தில் நடந்த மற்றும் நடந்துக் கொண்டிருக்கும் கொடூரமான செயலை மையக்கருவாக எடுத்துக் கொண்டு, அதை எதார்த்தமான முறையில் திரைப்படமாக்கியிருக்கும் இயக்குநர் வி.ஆர்.துதிவாணன், அதை வலியும், வேதனையும் மிக்கதாக காட்சிப்படுத்தியிருந்தாலும், அதனுள் இருக்கும் காதலை அழகியலோடும், உணர்வுப்பூர்வமாகவும் காட்சிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.

 

இவ்வளவு உணர்வுப்பூர்வமான காதல் தம்பதிக்கு இப்படி ஒரு நிலையா!, என்று படம் பார்ப்பவர்கள் அதிர்ச்சியடையும் அவகையில், படத்தின் முக்கிய காட்சிகள் எதார்த்தமாக படமாக்கப்பட்டிருந்தாலும், அவை வன்முறையின் உச்சமாக இருப்பது சற்று முகம் சுழிக்க வைக்கிறது.

 

ஒரு திரைப்படமாக பார்க்கும் போது, ஆரம்பத்திலே கதை இந்த பிரச்சனையை பற்றி தான் பேசப்போகிறது என்பதை பார்வையாளர்கள் எளிதியில் யூகித்து விட முடிகிறது. யூகிக்க வேண்டும் என்பதற்காக இயக்குநர் வி.ஆர்.துதிவாணன், பல குறியீடுகளுடன் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். அதில் முக்கியமானது நிறைசூலி தெய்வம். 

 

இப்படிப்பட்ட சம்பவங்கள் நடப்பது ஏன் ?, இத்தகைய குற்றங்களில் ஈடுபடுகிறவர்களுக்கான தண்டனை என்ன ?, இத்தகைய சமூக பிரச்சனைகளை வோரோடு களைய என்ன செய்ய வேண்டும் ?, இப்படி எந்த கேள்வியும் கேட்காமல், எப்படிப்பட்ட தீர்வும் சொல்லாமல், இப்படி ஒரு கொடூரமான சம்பவத்தால் பாதிக்கப்படுகிறவர்களின் வலியை மட்டுமே மக்கள் மனதில் பதிய வைக்க முயற்சித்திருக்கும் இயக்குநர் வி.ஆர்.துதிவாணன், சிறப்பான மேக்கிங் மூலம் அதை திறம்பட செய்திருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘கொலைச்சேவல்’ வலி.

 

ரேட்டிங் 3.5/5

Recent Gallery