’யூத்’ திரைப்பட விமர்சனம்

bfd4e2faf801aac1790e833f5525a02a.jpg

Casting : Ken Karunas, Anishma Anilkumar, Meenakshi Dinesh, Priyanshi Yadav, Suraj Venjanamodu, Devadarshini

Directed By : Ken Karunas

Music By : GV Prakash Kumar

Produced By : Paarvathaa Entertainment - Karuppaiya C.Ram, Sulochana Kumar

 

10ம் வகுப்பில் மிக குறைந்த மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெறும் கென் கருணாஸ், 11ம் வகுப்பில் படிப்பின் மீது கவனம் செலுத்தாமல் காதல் மீது கவனம் செலுத்துகிறார். அப்பாவின் அக்கறை, அம்மாவின் நம்பிக்கை இரண்டையும் நினைத்துப் பார்க்காமல் வயது கோளாறில் எந்த நேரமும் காதல் மயகத்திலேயே இருக்கும் கென் கருணாஸ், 12ம் வகுப்பு முடிப்பதற்குள் மூன்று காதல்களை கடக்கிறார்.  இப்படி காதல் மட்டுமே வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டிருக்கும் கென் கருணாஸுக்கு, அதை விட வாழ்க்கையில் மிக முக்கியமானது படிப்பும், குடும்பமும் தான் என்பதை புரிய வைக்க கூடிய ஒரு சம்பவம் நடக்கிறது. அது என்ன ? அதன் மூலம் அவரது வாழ்க்கை எப்படி திசை மாறுகிறது, என்பதை இளசுகளுக்கு பிடிக்கும் வகையில் சொல்ல முயற்சித்திருப்பதே ‘யூத்’.

 

பள்ளி மாணவர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தும் கென் கருணாஸ், காமெடி, செண்டிமெண்ட் என அனைத்து ஏரியாவிலும் அளவாக நடித்து பாராட்டு பெறுகிறார். விஜய், தனுஷ், சிம்பு ஆகியோரது சாயல் அவரது நடிப்பு மற்றும் உடல் மொழியில் தெரிந்தாலும், தனது துள்ளல் நடிப்பு மூலம் படம் முழுவதையும் யூத்புல்லாக நகர்த்தி செல்கிறார்.

 

அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி யாதவ் என மூன்று நாயகிகளும் காதல், குறும்பு, அன்பு என்று மூன்று விதமான உணர்வுகளை வெளிப்படுத்தி படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். 

 

நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் சூரஜ் வெஞ்சரமோடு தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் மகன்கள் மீதான அக்கறையை மனதில் வைத்துக்கொண்டு முகத்தில் கோபத்தை வெளிக்காட்டும் அப்பாக்களை பிரதிபலித்திருக்கிறார்.

 

நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் தேவதர்ஷினிக்கு வழக்கமான அப்பாவித்தனமும், அளவில்லா அன்பும் கொண்ட அம்மா கதாபாத்திரம் என்றாலும், அதை நிறைவாக செய்து பார்வையாளர்கள் மனதில் இடம் பிடிப்பதோடு, இளைஞர்களுக்கு அவர்களது அம்மாக்களை நினைவுப்படுத்தி விடுகிறார்.

 

நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் எனர்ஜியோடு நடித்திருக்கிறார்கள். அவர்களது உடல் மொழி மற்றும் டைமிங் வசனங்கள் படத்தை கலகலப்பாக நகர்த்தி செல்ல பெரிதும் உதவியிருக்கிறது.

 

படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு காட்சிகளை யூத்புல்லாகவும், கலர்புல்லாகவும் காட்சிப்படுத்தி படத்தை ரசிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விக்கி.

 

பழக்கப்பட்ட கதை என்றாலும் அந்த உணர்வில் இருந்து பார்வையாளர்களை வெளியேற்றி படத்தை ரசிக்க வைப்பதில் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை முக்கிய பங்காற்றியிருக்கிறது. பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது என்றால் பின்னணி இசை திரைக்கதையை தொய்வில் இருந்து மீட்டெடுத்து விடுகிறது.

 

நாஷின் படத்தொகுப்பு மற்றும் ராமு தங்கராஜின் கலை இயக்கம் இரண்டும் படத்திற்கு பலமாக பயணித்திருக்கிறது.

 

இளைஞர்களுக்கான ஒரு கதையாக இருந்தாலும், அதை மிக நாகரீகமாக கையாண்டிருக்கும் கென் கருணாஸ், பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையிலான புரிதல் மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளை மிக சிறப்பாக கையாண்டு, இளைஞர்களுக்கான படமாக மட்டும் இன்றி அனைத்து தரப்பினரையும் ரசிக்க வைத்திருக்கிறார்.

 

இயக்குநர் மற்றும் நாயகனாக பயணித்தாலும், தன் கதாபாத்திரத்தை எந்த இடத்திலும் தனித்துவம் படுத்தாமல், திரைக்கதையை மட்டுமே முன்னிலைப்படுத்தி படத்தை நகர்த்தியிருக்கும் கென் கருணாஸ், மற்ற கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை கலகலப்பாக நகர்த்தி செல்கிறார். 

 

காதல் தான் வாழ்க்கை, என்ற மனநிலையில் பயணிக்கும் இளைஞர்களுக்கு படிப்பும், குடும்பமும் தான் முக்கியம் என்ற அறிவுரை சொல்லும் கதையை, ஏற்கனவே வெளியான சில படங்களின் சாயலோடு கையாண்டிருந்தாலும், எந்தவித தொய்வின்றி ஆரம்பம் முதல் முடிவு வரை, நகைச்சுவையோடும், ரசிக்கும்படியாகவும் படத்தை நகர்த்தி சென்றிருக்கும் கென் கருணாஸ், நாயகனாக மட்டும் இன்றி இயக்குநராகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறார். 

 

மொத்தத்தில், ‘யூத்’ பெரியவர்களையும் கவரும்.

 

ரேட்டிங் 4/5

Recent Gallery