Latest News :

’எழுமின்’ திரைப்பட விமர்சனம்

2a571a547626546fd2d2d293bb8de551.jpg

Casting : Vivek, Devayani, Premkumar, Azhagam Perumal, Rishi

Directed By : VP Viji

Music By : Ganesh Chandrasekaran

Produced By : Vaiyam Mediyas

 

’முதல் தற்காப்பு கலை திரைப்படம்’ என்ற பெருமையோடு வெளியாகியிருக்கும் ‘எழுமின்’ சிறுவர்களுக்கான படமாக மட்டும் இன்றி, சிறுவர்களை வழி நடத்தும் பெற்றோர்களுக்கு வழி காட்டி திரைப்படமாகவும் உள்ளது.

 

விவேக் - தேவயானி தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். படிப்பு மட்டும் இன்றி பாக்ஸிங்கிலும் அசத்தம் அச்சிறுவனைப் போல, பல சிறுவர்கள் தற்காப்பு கலை மீது ஆர்வமாக இருக்க, அவர்களை விவேக் ஊக்கப்படுத்தி வருகிறார். விவேக் வசதியானவராக இருந்தாலும், சில ஏழை மாணவர்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

 

நல்ல திறமை இருந்தும் பணம் இல்லை என்ற காரணத்திற்காக ஏழை மாணவர்களை விளையாட்டு அகடாமியில் இருந்து வெளியேற்றுவதுடன், அவர்களை தேசிய அளவிலான போட்டியில் கலந்துக்கொள்ளாதபடியும் செய்கிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவேக், அந்த ஏழை மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் பயிற்சி அளிக்க முன் வருகிறார். இதற்கிடையே, விவேக்கின் மகன் திடீரென்று உயிரிழக்க, அவரது நினைவாக விளையாட்டு அகாடமி ஒன்றை தொடங்கும் விவேக் அதன் மூலம் திறமையுள்ள ஏழை சிறுவர்களை தயார் படுத்தி, போட்டியில் வெற்றி பெற செய்ய, எப்போதும் போல பணம் தனது சதி வேலையை தொடங்குகிறது. இதனால், திறமை உள்ள சிறுவர்களுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. அந்த பிரச்சினையை எதிர்கொள்ளும் அந்த சிறுவர்கள் விவேக்கின் உதவியுடன் போட்டியில் மட்டும் அல்லாமல், தங்களுக்கு நிஜ வாழ்க்கையில் வரும் சோதனையிலும் எப்படி வெற்றி பெறுகிறார்கள், என்பது தான் ‘எழுமின்’ படத்தின் கதை.

 

ஆயுத பூஜை பண்டிகை, சனி, ஞாயிறு என்று மொத்தம் நான்கு நாட்கள் விடுமுறை என்பதால், இரண்டு பெரிய படங்கள் வெளியாகும் இந்த நேரத்தில், இந்த சிறுவர்கள் நடித்த ‘எழுமின்’ படமும் வெளியாகிறது என்றால், அபோதே தெரியும் படத்தில் ஏதோ சரக்கு இருக்கிறது என்று. நாம் நினைத்தது போலவே, சிறுவர்களுக்கான படமாக மட்டும் இன்றி, ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு அதிரடி ஆக்‌ஷன் படத்தை பார்த்த திருப்தியை இப்படம் கொடுக்கிறது.

 

காமெடி நடிகராக பார்த்த விவேக்கை இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு குணச்சித்திர நடிகராக பார்க்க முடிகிறது. அதிலும், தனது மகன் இறந்த செய்தியை கேட்டவுடன், அவர் அதை எதிர்கொள்ளும் காட்சியும், அதில் அவர் நடித்த விதமும், நம்மையும் கண் கலங்க வைத்துவிடுகிறது.

 

தற்காப்பு கலை என்பது பதக்கம் வாங்குவதற்கும், பாராட்டு பெறுவதற்கும் மட்டும் அல்ல, நமக்கு பிரச்சினை ஏற்படும் போது நம்மை காத்துக்கொள்வதற்காக தான், என்பதை அழுத்தமாக சொல்லும் இப்படம், தற்காப்பு கலைகளில் இருக்கும் பல வகைகளில் சிலவற்றை எடுத்துக் கொண்டு அதில் சிறந்த அனுபவம் பெற்ற சிறுவர்களையே நடிக்க வைத்திருப்பது இப்படத்தின் மற்றொரு சிறப்பாக உள்ளது. விவேக் குணச்சித்திர நடிகராக மாறினாலும், அவருடன் பயணிக்கும் செல் முருகன் அதே நக்கல் நையாண்டியோடு நம்மை அவ்வபோது சிரிக்க வைத்துவிடுகிறார்.

 

ஒவ்வொரு சிறுவரும் ஒவ்வொரு தற்காப்பு கலையில் சிறந்து விளங்க, இறுதிக் காட்சியில் அனைவரும் சேர்ந்து போடும் அதிரடி ஆக்‌ஷன் நமக்கு ட்ரீட்டாக இருக்கிறது.

 

பாசமிகு தந்தையாகவும், ஊக்கம் தரும் நண்பராகவும் விவேக் தனது வேலையை சரியாக செய்ய, அவரது மனைவி வேடத்தில் நடித்திருக்கும் தேவயானியும் தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். சிறுவர்களும் நடிப்பு, ஆக்‌ஷன் என்று அமர்க்களப்படுத்த, படத்தில் வில்லனாக வரும் ரிஷி, பழைய டெக்னிக்கான புறாவை தற்போது பயன்படுத்துவதும், பிறகு சிறுவர்களுடன் மோதும் போது ரியலாகவே அடிவாங்குவதும் காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறது.

 

இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரின் பாடல்களும், ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசையும் படத்திற்கு உறுதுணையாக இருப்பது போல், கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. இறுதிக் காட்சியில் வரும் ஆக்‌ஷன் காட்சியில் மிரட்டியிருக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் மிராக்கில் மைக்கேலையும் பாராட்டியாக வேண்டும்.

 

இப்படத்தை தயாரித்து இயக்கியிருக்கும் வி.பி.விஜிக்கு ஆயிரம் மலர் கொத்து கொடுத்து பாராட்டினாலும் தகும். பணத்திற்காக படம் எடுக்காமல், மக்களுக்கு நல்ல விஷயத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த படத்தை எடுத்திருக்கிறார். அதிலும், தற்போதைய காலக்கட்டத்தில் சிறுவர்களுக்கு, அதிலும் சிறுமிகளுக்கு தற்காப்பு கலை எந்த அளவுக்கு முக்கியம், என்பதை ரொம்ப அழுத்தமாக சொல்வதோடு ரசிக்கும்படியும் சொல்லியிருக்கிறார்.

 

படத்தில் குறையே இல்லை என்று சொல்ல முடியாது என்றாலும், சிறு சிறு குறைகள் இருந்தாலும், அவற்றை நிராகரித்துவிட்டு, மனதாரா பாராட்டும் விதத்தில் நல்ல மெசஜை சொல்லும் இப்படம், சிறுவர்களுக்கான படம் என்றாலும், பெரியவர்களும் நிச்சயம் பார்க்க வேண்டிய படமாக உள்ளது.

 

மொத்தத்தில், இந்த ‘எழுமின்’ சிறுவர்களை எழுச்சியடைய செய்வதோடு, பெற்றோர்களை யோசிக்கவும் வைக்கிறது.

 

ரேட்டிங் 3.5/5