Latest News :

‘சத்ரு’ விமர்சனம்

7f6179ff79ec5568ddbf0d444c313257.jpg

Casting : Kathir, Srushti Dange, Neelima Rani, Suja Varunee

Directed By : Naveen Nanjundan

Music By : Amresh Ganesh, Surya Prasad

Produced By : Raghukumar, Raja Ratnam, Sritharan

 

’பரியேறும் பெருமாள்’ வெற்றியை தொடர்ந்து கதிர் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருக்கும் ‘சத்ரு’ எப்படி என்பதை பார்ப்போம்.

 

குழந்தைகளை கடத்தி பணம் பறிக்கும் கும்பல் ஒன்று சிறுவன் ஒருவனை கடத்தி வைத்து, அவனது பெற்றோரிடம் ரூ.5 கோடி பணம் கேட்கிறது. அந்த சிறுவனின் பெற்றோர் பணம் கொடுத்து மகனை மீட்க தயாராக இருந்தாலும், போலீஸ் தரப்பு குற்றவாளிகளை பிடிப்பதிலேயே குறியாக இருக்க, ஒரு கட்டத்தில் போலீஸாரே நடுங்கும் விதத்தில், கடத்தல் கும்பல் சம்பவம் ஒன்றை அரங்கேற்ற, அதன் பிறகு பணத்தை கொடுத்து குழந்தையை மீட்க போலீஸ் முடிவு செய்கிறது.

 

அதன்படி, போலீஸ் தரப்பில் இருந்து ஒருவரிடம் பணத்தை கொடுத்து அனுப்புமாறு கடத்தல் கும்பலின் தலைவர் லகுபரன் கூற, சப்-இன்ஸ்பெக்டரான கதிரிடம் அந்த பொருப்பை போலீஸ் தரப்பு ஒப்படைக்கிறது. நேர்மையும், தைரியமும் மிக்க சப்-இன்ஸ்பெக்டரான கதிர், பணத்தை கொடுத்துவிட்டு, குழந்தையை மீட்பதோடு, குற்றவாளிகளுக்கும் பொறி வைக்க, அதில் கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவன் மட்டும் சிக்க, அவனை என்கவுண்டர் செய்துவிட்டு குழந்தையையும், பணத்தையும் மீட்கிறார்.

 

இதனால் கோபமடையும் கடத்தல் கூட்டம், தனது நண்பனை கொன்றதற்காக கதிரை பழிவாங்க துடிப்பதோடு, 24 மணி நேரத்தில் கதிர் மற்றும் அவரது குடும்பத்தையே கொலை செய்ய முடிவு செய்கிறது. சில இழப்புகளுக்கு பிறகு இதனை அறியும் கதிர், தனது குடும்பத்தை காப்பாற்றுவதோடு, அதே 24 மணி நேரத்தில் கடத்தல் கும்பலை முழுவதுமாக அழிக்க களத்தில் இறங்க, யார் யாரை அழித்தார்கள் என்பது தான் படத்தின் மீதிக்கதை.

 

கதை கருவை பார்த்தால் ‘காக்க காக்க’ படத்தை நினைவுப்படுத்தினாலும், அதை படமாக்கிய விதம் என்னவோ மாறுபட்டு தான் இருக்கிறது.

 

சப்-இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தும் கதிர், உயர் அதிகாரிகள் திட்டும் போது கொடுக்கும் ரியாக்‌ஷனும், அதன் பிறகு எப்போதும் போல தனது போலீஸ் அதிரடியை காட்டுவது என்று வஞ்சனை இல்லாமல் நடித்திருக்கிறார்.

 

படத்திற்கு ஹீரோயினே தேவை இல்லை என்றாலும், போஸ்டர் டிசைனுக்காவது தேவைப்படும் என்று இயக்குநர் சிருஷ்டி டாங்கோவை ஹீரோயினாக்கியிருக்கிறார். 

 

வில்லனாக அறிமுகமாகியிருக்கும் லகுபரன், ஒட்டு மொத்த வில்லத்தனத்தையும் தனது முகத்தில் காட்டினாலும் அவரது உருவத்தை வைத்து பார்த்தால், கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கிறது. 

 

சுஜா வாருணி, பவன், பொன்வண்ணன், கதிரின் போலீஸ் நண்பரகளாக நடித்திருப்பவர்கள் என அனைவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

 

இசையமைப்பாளர் அம்ரிஷுக்கு படத்தில் வேலை இல்லை என்றாலும், பின்னணி இசையமைத்திருக்கும் சூரியபிரசாத்துக்கு அதிகமான வேலையை இயக்குநர் கொடுத்திருக்கிறார். திரைக்கதையின் வேகத்திற்கும், விறுப்புக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் சூரியபிரசாத், பின்னணி இசை அமைத்திருந்தாலும், அது எங்கேயோ கேட்டது போலவே இருக்கிறது.

 

மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. திரைக்கதையில் இருக்கும் விறுவிறுப்பு காட்சிகளிலும் இருக்கிறது என்றால் அது மகேஷின் கேமரவால் தான். 

 

படம் தொடங்கியதில் இருந்து முடியும் வரை, அடுத்தது என்ன நடக்கும், என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தாலும், எதோ ஒன்று குறைவது போன்ற உணர்வும் படம் முழுவதும் தோன்றுகிறது.

 

சஸ்பென்ஸ் ஆக்‌ஷன் படமாக இருந்தாலும், அதில் இரண்டு டூயட்டை போட்டு படத்தின் நீளத்தை கூட்டாமல் ஹீரோ பிளஸ் வில்லன் என்று இவர்களை சுற்றியே படம் நகர்வது போல இயக்குநர் நவீன் நஞ்சுண்டன், திரைக்கதை அமைத்திருப்பது படத்தின் சுவாரஸ்யத்தை அதிகரித்திருந்தாலும், முக்கியமான காட்சிகளில் லாஜிக் பார்க்காமல் விட்டிருப்பது, சினிமாத்தனமாக அமைந்திருக்கிறது.

 

குறிப்பாக, பள்ளி வாகனங்கள் குழந்தைகளை இறக்கி விடும் போது பெற்றோர் வாகனம் நிற்கும் பகுதியில் தான் நிற்பார்கள். ஆனால், இயக்குநர் நவீன் அதை எதிர்மாறாக செய்து, வில்லன் குழந்தையை கடத்துவதில் எந்தவித சிக்கலும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறார். அதேபோல், வில்லன் கோஷ்ட்டி பார்த்திராத கதிரின் உறவினர்களை, கொல்ல ரயில் நிலையத்திற்கு செல்வதோடு, பார்க்காத ஒருவரை சரியாக அடையாளம் கண்டு, அவரை கொலை செய்ய முயற்சிக்கும் காட்சியும் ரசிகர்கள் காதில் பூ சுற்றுகிறது. 

 

காட்சிகளில் லாஜிக் பார்க்காத இயக்குநர் காவல் துறையை கலாய்ப்பதில் தாராளம் காட்டியிருக்கிறார். ஆப்பரேஷன் ஆம்லாவை கொண்டாடும் போலீசார் நிஜ குற்றவாளிகளை எப்படி தவறவிடுகிறார்கள், என்பது அஜாக்கிரதையாக இருக்கும் சில போலீஸ்காரர்களுக்கு குட்டு வைத்தது போல இருந்தாலும், கிழக்கு கடற்கரை சாலையில், போலீஸ் வாகனங்களுக்கு போக்கு காட்டிவிட்டு லகுபரன் தப்பிப்பது, ஒட்டு மொத்த காவல் துரையையே கையாளாகதவர்கள் என்பது போல சித்தரித்திருக்கிறது.

 

ஹீரோவை காட்டிலும் வில்லனை சில இடங்களில் தூக்கி நிறுத்துவதற்காக திரைக்கதையை ஜவ்வாக இழுத்திருப்பதும் படத்திற்கு சற்று பலவீனமாக அமைந்திருக்கிறது. இருந்தாலும், எளிமையான கதையை தனது வலிமையான திரைக்கதை மூலம் வேறுபடுத்தி காட்டுவதில் இயக்குநர் நவீன் நஞ்சுண்டன் தனது திறமையை நிரூபித்திருக்கிறார்.

 

படத்தில் சிறு சிறு தவறுகள் இருந்தாலும், அவை முக்கியமான இடத்தில் இருப்பது படத்தின் பெரிய பலவீனமாக அமைந்திருக்கிறது. அந்த சிறு சிறு தவறுகள் இல்லை என்றால், காதல் இல்லாத ‘காக்க காக்க’- வாக இந்த ‘சத்ரு’ ரசிகர்கள் மனதில் பசை போட்டு ஒட்டிக்கொண்டிருக்கும்.

 

ரேட்டிங் 3/5