Latest News :

’அகவன்’ விமர்சனம்

9ec5f26f5b0b5cc29137d4e9278522d3.jpg

Casting : Kishore Ravichandran, Chitra Shree, Nithya Shetty, Thambi Ramaiah, Saranraj

Directed By : APG Elumalai

Music By : S.Sathya

Produced By : RBK Entertainment R.Ravichandran

 

ஆர்.பி.கே எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஆர்.ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஏ.பி.ஜி.ஏழுமலை இயக்கத்தில் அறிமுக ஹீரோ கிஷோர் ரவிச்சந்திரன் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘அகவன்’ எப்படி என்பதை பார்ப்போம்.

 

ஹீரோ கிஷோர் ரவிச்சந்திரனின் அண்ணனை போலீஸ் கைது செய்து அழைத்து செல்கிறது. அவரை ஜாமீனில் எடுப்பதற்காக கிஷோர் வழக்கறிஞருடன் காவல் நிலையத்திற்கு செல்லும் போது, அப்படி யாரையும் கைது செய்யவில்லை என்று போலீஸ் கூற, மறுநாள் போலீஸால் கைது செய்யப்பட்ட கிஷோரின் அண்ணன் இறந்து கிடக்கிறார். அண்ணனின் மரணத்திற்கு தானும் ஒரு காரணம் என்று நினைக்கும் ஹீரோ கிஷோர், அந்த பாவத்தை போக்க சிவன் கோயில் ஒன்றில் வேலை செய்கிறார். அங்கே தங்கிக் கொண்டு கோயிலின் அனைத்து வேலைகளையும் செய்பவர், அந்த கோயில் பகுதியில் தனது அண்ணனை கைது செய்து அழைத்து செல்லும் காவலர்களை பார்க்கிறார். அண்ணனின் மரணத்தின் பின்னனியை அறிய அவர்களை துரத்தி செல்ல அதில் ஒருவர் உயிரிழக்க, மற்றொருவர் தப்பித்து விடுகிறார்.

 

இதற்கிடையே, கிஷோர் வேலை செய்யும் பழமையான சிவன் கோவிலில் அவ்வபோது சில மர்மமான விஷயங்கள் நடைபெறுவதோடு, அப்பகுதியில் இருக்கும் மனநல காப்பகத்திலும் சில மர்மமான சம்பவங்கள் அரங்கேறுகிறது. அண்ணனின் மர்மமான மரணத்தின் பின்னணி குறித்து அறிய முயற்சிப்பவர், அந்த கோயிலை சுற்றி நடக்கும் சில மர்மங்கள் குறித்தும் அறிய களத்தில் இறங்க, அவர் கண்டுபிடிக்கும் ரகசியங்களும், அதன் பின்னணியும் தான் ‘அகவன்’ படத்தின் கதை.

 

சிவன் கோயிலை கருவாக வைத்துக் கொண்டு இயக்குநர் ஏ.பி.ஜி.ஏழுமலை, விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் நிறைந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக அகவன் -னை கொடுத்திருக்கிறார்.

 

ஹீரோவின் அண்ணன் போலீஸ் மூலம் கைது செய்யப்பட்டு, கொலை செய்யும் காட்சிக்கு பிறகு, என்ன நடந்திருக்கும், என்று யோசிக்கும் ரசிகர்களை, சிவன் கோவில் மர்மங்களைக் காட்டி, சீட் நுனியில் உட்காரை வைக்கும் இயக்குநர், ஹீரோயின்கள் உட்பட ஒட்டு மொத்த நடிகர்களையும் திரைக்கதைக்கு முக்கியத்துவம் உள்ளவர்களாக பயன்படுத்தியிருப்பது திரைக்கதையின் மிகப்பெரிய பலம்.

 

ஹீரோவாக நடித்திருக்கும் கிஷோர் ரவிச்சந்திரனுக்கு முதல் படம் என்றாலும், தனது கதாபாத்திரத்தை புரிந்து நடித்திருக்கிறார். திரைக்கதை வெயிட்டாக இருப்பதால், ஹீரோவின் நடிப்பு லைட்டாக இருந்தால் போதும், என்ற இயக்குநரின் மனநிலைக்கு ஏற்ப தனது வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்.

 

Aghavan

 

சித்ரா ஸ்ரீ, நித்யா ஷெட்டி என இரண்டு ஹீரோயின்களும் காதல், டூயட் என்று இல்லாமல், திரைக்கதையில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக வருகிறார்கள்.

 

எப்போதும் தானே மைண்ட் வாய்ஸில் பேசினால் ரசிகர்களுக்கு போரடித்துவிடும் என்பதால், வேறு ஒருவரை மைண்ட் வாய்ஸில் பேச வைத்து காமெடி செய்திருக்கும் தம்பி ராமையாவின் காமெடி காட்சிகள் கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் மொக்கை என்ற ரீதியில் இருக்கிறது.

 

போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் சரண்ராஜ், வில்லன்களாக நடித்திருப்பவர்கள் என அனைவரும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

 

படத்திற்கு திரைக்கதை மூலம் பாதி பலம் கிடைத்திருந்தாலும், ஒளிப்பதிவாளர் பால பழனியப்பனின் கேமரா மற்றும் சி.சத்யாவின் இசை மூலம் முழு பலம் கிடைத்திருக்கிறது. சத்யாவின் இசையில் பாடல்கள் புரியும்படி இருப்பதோடு, பின்னணி இசை திரைக்கதையின் விறுவிறுப்பை குறைக்காமல் பார்த்துக் கொள்கிறது.

 

படத்தில் முக்கிய கதாபாத்திரமாக வலம் வருவது பழமையான சிவன் கோவில். அந்த கோவிலை ஒளிப்பதிவாளர் படமாக்கிய விதத்திற்காகவே இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம், என்று சொல்லும் அளவுக்கு அவரது பணி சிறப்பாக உள்ளது. மூன்று வெவ்வேறு கோயில்களில் படப்பிடிப்பு நடத்தி அதை ஒரே கோவிலாக மெர்ஜ் செய்திருக்கும் ஓளிப்பதிவாளர் பால பழனியப்பன் மற்றும் எடிட்டர்கள் எல்.வி.கே.தாஸ், ஆர்.நிர்மல் ஆகியோரது பணிக்கு பலமான அப்ளாஷ் கொடுக்கலாம்.

 

முதல் பாதி முழுவதும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாக நகர்ந்தாலும், திரைக்கதையின் மர்மங்களை அவிழ்க்கும் இரண்டாம் பாதியில், முதல்பாதியில் சொல்லப்பட்ட முக்கியமான விஷயங்களை சாதாரணமாக சொல்லி முடிப்பது சலிப்படைய செய்துவிடுகிறது. குறிப்பாக ஹீரோவின் அண்ணன் மரணத்தின் மர்மத்தை முதல் பாதியில் ஸ்ட்ராங்க சொல்லி கதையை நகர்த்தும் இயக்குநர், அதற்கான காரணத்தை சொல்லும் போது, அதை ரொம்ப சாதாரணமாக முடித்துவிடுகிறார். இருந்தாலும், படத்தின் இரண்டாம் பாகத்தில் இயக்குநர் சொல்லியிருக்கும் முக்கியமான விஷயத்தால் அந்த தவறு மறைந்துவிடுகிறது.

 

சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் தொடங்கும் படம் க்ளைமாக்ஸை நெருங்கும் போது பேண்டஸி காட்சிகளுடன் முடிவது ரசிக்க வைக்கிறது.

 

சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் என்றாலே, திரைக்கதையில் பல இடங்களில் ட்விஸ்ட்டுகள் இருக்க வேண்டும் என்பதால், ஹீரோவை கூட ஒரு இடத்தில் வில்லனாக காட்டும் இயக்குநர், க்ளைமாக்ஸில் ஹீரோ கோவிலில் வேலை பார்ப்பதற்கான உண்மையான காரணத்தை சொல்லும் இடமும், அவரது பணியும் எதிர்ப்பார்க்காத ஸ்விஸ்ட். அதேபோல், போலீஸ் அதிகாரி சரண்ராஜின் கதாபாத்திரத்தையும் மிக சஸ்பன்ஸாக நகர்த்தி செல்கிறார்.

 

அறிமுக ஹீரோ, இயக்குநர் என்பதால் சாதாரணமாக படம் பார்க்க ஆரம்பித்தால், ஆரம்பத்தில் நம்மை நிமிர்ந்து உட்கார செய்யும் படம், ஒரு கட்டத்தில் சீட் நுணியில் உட்கார வைக்கும் விதத்தில், படம் முழுவதும் சஸ்பென்ஸையும், த்ரில்லரையும் இயக்குநர் ஏ.பி.ஜி.ஏழுமலை நேர்த்தியாக கையாண்டிருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘அகவன்’ ரகசியங்கள் நிறைந்த சுவாரஸ்யமானவனாக இருக்கிறான்.

 

ரேட்டிங் 3.5/5