Latest News :

‘Mr.லோக்கல்’ விமர்சனம்

ff18821fd8b1225c9d8d51517e8460f5.jpg

Casting : Sivakarthikeyan, Nayanthara, Radhika, Yogi Babu, Sathish, Robo Shankar, Thambi Ramaiah

Directed By : M.Rajesh

Music By : HiHop Thamizha Aadhi

Produced By : Studio Green KE Gnanavelraja

 

எம்.ராஜேஷ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்திருக்கும் ‘Mr.லோக்கல்’ எப்படி என்பதை பார்ப்போம்.

 

சிவகார்த்திகேயனின் அம்மாவான ராதிகா தனக்கு பிடித்த சீரியல் நடிகையை நேரில் பார்க்க ஆசைப்படுகிறார். அம்மாவின் பிறந்தநாளன்று அவரது ஆசையை நிறைவேற்றுவதற்காக அவரை அழைத்துக் கொண்டு சீரியல் நடிகையை சந்திக்க சிவகார்த்திகேயன் செல்லும் போது, அவரது பைக்கில் நயன்தாராவின் கார் மோதிவிடுகிறது. உடனே சிவகார்த்திகேயன் மன்னிப்பு கேட்க சொல்ல, நயன்தாரா கேட்காமல் தனது பணக்கார திமிருடன் அங்கிருந்து கிளம்பிவிடுகிறார். அதில் இருந்து சிவகார்த்திகேயனுக்கும், நயன்தாராவுக்கும் இடையே தொடரும் மோதல் ஒரு கட்டத்தில் காதலாக மாறினாலும், அந்த காதலிலும் மோதல் தொடர, இறுதியில் இருவருக்கும் இடையில் மோதல் அற்ற காதல் பிறந்ததா இல்லையா, என்பது தான் படத்தின் மீதிக்கதை.

 

சிவகார்த்திகேயனுக்காக தனது பானியை மாற்றிக் கொண்டதாக கூறிய ராஜேஷ், கதையையும், காட்சிகளையும் மட்டும் மாற்றாமல் தனது முந்தைய படங்களைப் போலவே இப்படத்தையும் எடுத்திருக்கிறார். இதில் என்ன கொடுமை என்றால், அவரது முந்தைய படத்தில் சந்தானம் என்ற ஒரே ஒரு காமெடி நடிகரை வைத்துக் கொண்டு நம்மை கலகப்பாக சிரிக்க வைத்தவர், இந்த படத்தில் நான்கு காமெடி நடிகர்களை வைத்துக் கொண்டு சில இடங்களில் மட்டுமே சிரிக்க வைக்கிறார்.

 

சிவகார்த்திகேயன் எப்போதும் போல அனைத்து தரப்பினரையும் கவரும்படி தனது நடிப்பில் காமெடி மசாலாவை கலந்து நடித்திருக்கிறார். படத்தில் பலர் செய்த தவறுகளை சரிக்கட்டி சமாளித்து காட்சிகளை மெருகேற்ற சிவகார்த்திகேயன் ரொம்பவே கஷ்ட்டப்பட்டிருக்கிறார்.

 

ஹீரோவுக்கு நிகரான வேடத்தில் நடித்திருக்கும் நயன்தாரா, படத்திற்கான கூடுதல் பலம். தனது பணக்கார திமிருடன் அவர் நடிப்பது மட்டும் அல்ல, பார்வையிலேயே தனது கதாபாத்திரத்தின் பலத்தை காட்டியிருப்பவர், கோபப்படும் போது கூட ரசிகர்களை சொக்க வைத்துவிடுகிறார்.

 

யோகி பாபு, சதீஷ், ரோபோ சங்கர், தம்பி ராமையா என நான்கு காமெடி நடிகர்கள் இருந்தாலும், யோகி பாபுவின் காமெடி மட்டுமே சிரிக்க வைக்கிறது. அதிலும் ரோபோ சங்கரின் காமெடி காட்சிகள் அத்தனையும் அறுவையாக இருக்கிறது.

 

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசையில் பாடல்கள் ரசிக்கவும், தாளம் போடவும் வைத்தாலும், மனதில் நிற்காமல் போய்விடுகிறது. தினேஷ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் அழகியலோடு இருக்கிறது.

 

குழந்தைகள், பெரியவர்கள் என்று குடும்பத்தோடு பார்ப்பதற்கான படமாக இருந்தாலும், சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா என்ற பெரிய காம்பினேஷன் ஏற்படுத்திய எதிர்ப்பார்ப்பை இப்படம் பாதி அளவு கூட பூர்த்தி செய்யாது படத்தின் மிகப்பெரிய மைனஸ். பிளஸ் என்றால் சிவகார்த்திகேயனின் காமெடியும், நயன்தாராவுடனான மோதலும் தான். அதே சமயம், இருவருக்கும் இடையே காதல் ஏற்படும் இடம் ரொம்பவே மொக்கையாக இருக்கிறது. அதிலும், இயக்குநர் எம்.ராஜேஷ், இரண்டாம் பாதியை நகர்த்திய விதமும், அதில் இடம்பெறும் காட்சிகளும் படத்திற்கு மிகப்பெரிய மைனஸாக அமைந்திருக்கிறது.

 

கதைக்கான ஹீரோவாக இருந்த சிவகார்த்திகேயன் ஹீரோவுக்கான கதையில் நடிக்க தொடங்கியதில் இருந்தே சற்று சறுக்கல்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில், அவருக்கு இன்னொரு சறுக்கலாகவே இந்த ‘Mr.லோக்கல்’ அமைந்திருந்தாலும், தனது படத்தை அனைத்து தரப்பினரும் பார்க்க வேண்டும் என்பதற்காக நேர்மையான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார்.

 

ரேட்டிங் 3/5