Latest News :

‘கொலைகாரன்’ விமர்சனம்

8f2c3a5dcff78f21806e2825391842e8.jpg

Casting : Vijay Antony, Arjun Ashima Narwal, Seetha

Directed By : Andrew Louis

Music By : Simon K. King

Produced By : Pradeep

 

தியா மூவிஸ் சார்பில் பி.பிரதீப் தயாரிப்பில் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிப்பில் உருவாகி, பாப்டா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் கோ.தனஞ்செயன் வெளியிட்டிருக்கும் ‘கொலைகாரன்’ எப்படி என்பதை பார்ப்பாம்.

 

முதல் காட்சியிலேயே ஹீரோயின் கொலை செய்யப்பட, அடுத்த காட்சியில், தான் ஒரு கொலை செய்ததாக கூறி, ஹீரோ விஜய் ஆண்டனி காவல் நிலையத்தில் சரண்டராகிறார். தகவல் உயர் போலீஸ் அதிகாரியான அர்ஜூனுக்கு போக, ஸ்பாட்டுக்கு வருபவர் விஜய் ஆண்டனியிடம், “என்ன ஆச்சு” என்று கேட்க, விஜய் ஆண்டனி கொடுக்கும் வாக்கு மூலத்தால், நாம் பரபரப்பின் உச்சத்திற்கே சென்றுவிடும் அளவுக்கு அடுத்தடுத்த காட்சிகளில் ட்விஸ்ட்டும், எதிர்ப்பார்ப்பும் நிறைந்த திரைக்கதையோடு, படம் படு சுவாரஸ்யமாக நகரத் தொடங்குகிறது.

 

விஜய் ஆண்டனியின் எதிர் வீட்டில் இருக்கும் ஹீரோயினுக்கும் அவருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை, என்றாலும் ஹீரோயினை அவ்வபோது பின் தொடரும் விஜய் ஆண்டனி, சில நேரங்களில் அவருடன் டூயட்டும் பாடுகிறார். ஒரு கட்டத்தில் ஒரு கொலை தொடர்பாக ஹீரோயினையும் அவரது அம்மாவையும் போலீஸ் விசாரிப்பதோடு, எதிர் வீட்டில் இருக்கும் விஜய் ஆண்டனியை விசாரிக்கையில், அவரைப் பற்றி ரகசியம் ஒன்று தெரிய வரும்போது, அர்ஜூனுக்கு மட்டுமல்ல படம் பார்க்கும் அத்தனை பேருக்கும் பெரிய ஷாக். அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உரைந்து போயிருக்கும் ரசிகர்களை மேலும் அதிர்ச்சியளிக்கும் வகையில் போலீஸ் அதிகாரி அர்ஜூன், ஹீரோயின் மற்றும் அவரது அம்மாவிடம் அமைச்சர் ஒருவரது தம்பியின் கொலை குறித்து விசாரிப்பதோடு, அந்த நபருக்கும் ஹீரோயினுக்கும் சம்மந்தம் இருப்பதால், அவர்கள் தான் கொலை செய்திருப்பார்கள், என்று சந்தேகிக்கிறார். 

 

அமைச்சரின் தம்பி கொலையை பற்றி விசாரிக்கும் அர்ஜூன், ஆரம்பத்தில் காட்டப்படும் ஹீரோயின் கொலை குறித்து எங்கேயும் பேசாமல் இருக்க, அப்படியானால் விஜய் ஆண்டனி யாரை கொலை செய்தார்? கொலை செய்த ஹீரோயின் எப்படி உயிரோடு இருக்கிறார்? அமைச்சரின் தம்பி கொலைக்கும் ஹீரோயினுக்கும் என்ன சம்மந்தம்? போன்ற பல கேள்விகளை நம் மனதில் ஏற்படுத்திவிட்டு, அவற்றுக்கு பலவிதமான ட்விஸ்ட்டுகளோடு விளக்கம் அளித்தப்பதோடு, க்ளைமாக்ஸ் வரை நம்மை சீட் நுணியில் உட்கார வைக்கிறார் இந்த ‘கொலைகாரன்’.

 

விஜய் ஆண்டனி கொலை செய்தது நான் தான், என்று கூறி சரணடைந்தாலும், வழக்கை விசாரிக்கும் அர்ஜூன் ஒரு கட்டத்தில் விஜய் ஆண்டனி கொலை செய்யவில்லை, என்ற முடிவுக்கு வருவதோடு, அவர் கொலை செய்திருக்கிறார், என்றும் கூறுகிறார். அவரது இந்த முரண்பட்ட விசாரணைக்குப் பின் பலவிதமான மர்மங்கள் நிறைந்திருப்பதை, எந்தவித குழப்பமும் இல்லாமல் புரிய வைத்திருக்கும் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் அமைத்திருக்கும் காட்சிகள் அத்தனைக்கும் அப்ளாஷ் கொடுக்கலாம்.

 

Kolaigaran Review

 

அழுத்தமான வேடத்தை அசால்டாக செய்யக்கூடிய விஜய் ஆண்டனிக்கு ஏற்ற கதை. இப்படிப்பட்ட படங்களுக்கு சரியான தேர்வு விஜய் ஆண்டனி மட்டுமே, என்று முத்திரை குத்தும் அளவுக்கு மனுஷன் தனது கதாபாத்திரத்தை கச்சிதமாக கையாண்டுள்ளார்.

 

பல படங்களில் போலீஸ் வேடத்தில் நடித்திருக்கும் அர்ஜூனுக்கு இந்த போலீஸ் வேடம் புதுசு தான். ரொம்பவே அமைதியாக கொலை குறித்து விசாரணை நடத்தும் அர்ஜுன், எந்த இடத்திலும் நடிக்கணும் என்று நினைக்காமல், இயல்பாக வலம் வந்து, தன்னையும் ஹீரோவாக நிலை நிறுத்தியுள்ளார்.

 

ஹீரோயின் அஷிமா நர்வாலை சுற்றி கதை நகர்ந்தாலும், அவரை எங்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதில் இருக்குநருக்கு இருந்த தெளிவை, அவரது நடிப்பிலும் பார்க்க முடிகிறது. சீதா, நாசர் போன்றவர்கள் ஒரு சில காட்சிக்கு வந்தாலும் கவனிக்க வைக்கிறார்கள்.

 

Kolaigaran Review

 

ஒளிப்பதிவாளர் முகேஷ் பரபரப்பை கூட்டும் விதத்தில் காட்சிகளை கையாண்டிருக்கிறார். சாதாரண காட்சிகளைக் கூட ரசிகர்கள் கவனிக்க வேண்டும் என்பதற்காக அவர் வைத்த பிரேம்கள் அனைத்தும் திரில்லராகவே இருக்கிறது. சிமோன் கிங்கின் இசையில் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. அதிலும் படத்தில் ஒலிக்கும் அந்த ஒரு பீஜியமே நம்மை பீதியடைய செய்துவிடுகிறது. 

 

இரண்டு விதமான கதைகளை ஒரே நேர் கோட்டில் சொல்லி புரிய வைப்பது என்பதே சவாலானது. அதுவும் இதுபோன்ற சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் படத்தை அப்படி சொல்வது ”கரணம் தப்பினால் மரணம்” என்பது போல தான், ஆனால், அதை சாமர்த்தியமாக கையாண்டிருக்கும் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸுக்கு, எடிட்டர் ரிச்சர்ட் கெவின் மிகப்பெரிய பலமாக இருந்திருக்கிறார். அவருடைய பணி படத்திற்கு மிகப்பெரிய பிளஷாக இருக்கிறது.

 

படம் பார்ப்பவர்களை யூகிக்க விடாமல், தொடர் திருப்புமுனைகளோடு படம் நகர்ந்தாலும், கொலைக்கான காரணமாக சொல்லப்படுவது சற்று சினிமாத்தனமாக இருந்தாலும், நேர்த்தியான கதை சொல்லல், சுவாரஸ்யமான காட்சிகள், விறுவிறுப்பான திரைக்கதை ஆகியவற்றால் நமது முழு கவனமும், எண்ட் டைடில் கார்டு போடும் வரை திரையிலேயே இருக்கிறது.

 

மொத்தத்தில், ‘கொலைகாரன்’ திரும்ப திரும்ப பார்த்தாலும் சலிப்படையாத சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உள்ளது.

 

ரேட்டிங் 4/5