Latest News :

‘தரமணி’ விமர்சனம்

7f76d9fea30502eb613964d99383ca1c.jpg

Casting : வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி

Directed By : ராம்

Music By : யுவன் சங்கர் ராஜா

Produced By : ஜே.எஸ்.கே.பிலிம்ஸ் கார்ப்பரேஷன்

கதை அமைப்பு மற்றும் திரைக்கதை இவை இரண்டிலுமே வித்தியாசத்தை கையாண்டுள்ள ராம், பெண்களுக்கு ஆதரவான கருத்தை ரொம்ப அழுத்தமாக சொல்லியிருக்கும் படமே ‘தரமணி’.

 

தனது மகனுடன் வாழ்ந்து வரும் கணவரால் கைவிடப்பட்ட ஆண்ட்ரியாவுக்கும், காதலியால் ஏமாற்றப்பட்ட வசந்த் ரவிக்கும் இடையே நட்பு ஏற்பட பிறகு அது காதலாக மாறி இருவரும் ஒரே வீட்டில் திருமணம் செய்துகொள்ளாமல் கணவன் மனைவியாக வாழ்ந்து வருகிறார்கள். ஐடி துறையில் பணிபுரியும் ஆண்டிரியாவின் பழக்க வழக்கத்தால் அவர் மீது வசந்த் ரவி, சந்தேகப்பட அதன் காரணமாக இருவரும் பிரிந்துவிட, இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா, என்பது தான் ‘தரமணி’ படத்தின் மீதிக்கதை.

 

இதுவரை தமிழ் சினிமாவில் நாம் பார்க்காத வகையில், படத்தின் கதை நகர்த்தலும், காட்சி அமைப்புகளும் அமைந்திருப்பது பலரை குழப்பமடையச் செய்யும் என்றாலும், கொடூர பசியோடு இருக்கும் சினிமா விரும்பிகளுக்கு இப்படம் புல் மீல்ஸ் தான்.

 

ஐடி துறையில் உள்ள பெண்கள் சிகரெட் பிடிப்பதாலோ அல்லது மது அருந்துவதாலோ, அவர்கள் கெட்டவர்கள் அல்ல, அதே சமயம் கணவனுக்கு கட்டுப்பட்டு இருக்கும் பல மனைவிகள் சந்தர்ப்பம் கிடைத்தால், தவறு செய்ய தயங்க மாட்டார்கள், என்பதை ரொம்ப தைரியமாக இயக்குநர் ராம் சொல்லியிருக்கிறார்.

 

படத்தின் நாயகன் வசந்த் ரவி, முதல் படத்தில் மிக வலுவான வேடத்தை ஏற்றுள்ளவர், இயக்குநர் சொன்னதை மட்டுமே செய்திருக்கிறார்.

 

நாயகியாக நடித்துள்ள ஆண்ட்ரியா மிகப்பெரிய பலம் வாய்ந்த கதாபாத்திரத்தின் உணர்வுகளை தனது உடல் மொழியால் அறுமையாக வெளிப்படுத்துவதுடன், தைரியமான பெண்ணாக நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

 

தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவில் நடிகர்களுக்கு முன்பாக கேமரா இருப்பதைக் காட்டிலும் அவர்களுக்கு தெரியாத இடத்தில் தான் கேமரா அதிகமாக பயணித்திருக்கிறது. சென்னையின் இரவுகளையும், கதாபாத்திரங்களின் மனதையும் ரொம்ப அழகாக ரசிகர்களுக்கு காட்சியாக கொடுத்திருக்கிறது அவரது கேமாரா.

 

யுவன் சங்கர் ராஜா ரிட்டர்ன், என்று சொல்லும் அளவுக்கு படத்தின் பின்னணி இசை படு அமர்க்களம். படம் தொடங்கியதில் இருந்து முடியும் வரை, தனது பின்னணி இசை மூலம் காட்சிகளுக்கு உயிர்கொடுக்கும் யுவன், பாடல்களிலும் அசத்தியிருக்கிறார்.

 

கதை கரு சாதாரணமானதாக இருந்தாலும், அக்கருவை வைத்துக் கொண்டு ராம் திரைக்கதை அமைத்த விதமாகட்டும், படத்தின் நடு நடுவே சமூகத்தில் நடக்கும் பல சீர்கேடுகளையும் நையாண்டித்தனமாக சுட்டுக்காட்டியிருக்கும் விதமும் சுவாரஸ்யமாக அமைந்துள்ளது. 

 

மொத்தத்தில், ஏ சான்றிதழ் வாங்கினாலும், இப்படத்தின் மூலம் நல்ல விஷயத்தை சொல்லியிருக்கும் ராம், அதை அனைத்து தரப்பு மக்களுக்கான படமாக அல்லாமல், குறிப்பிட்ட ஒரு கூட்டத்திற்கு மட்டுமே புரியும் படம் மற்றும் பாடமாக கொடுத்திருப்பது வருத்தமே.

 

ஜெ.சுகுமார்