Latest News :

‘தொரட்டி’ விமர்சனம்

2090aa556fcfb9373b220ca905f26ca5.jpg

Casting : Shaman Mithru, Sathyakala, Azhagu

Directed By : Marimuthu

Music By : Ved Shankar

Produced By : Indhu Karunakaran

 

அறிமுக இயக்குநர் மாரிமுத்து இயக்கத்தில், அறிமுக நடிகர்கள் நடிப்பில், இந்து கருணாகரன் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் ‘தொரட்டி’ எப்படி என்று பார்ப்போம்.

 

படத்தின் தலைப்பே, இது சாதாரணமாக கடந்து செல்லக்கூடிய கமர்ஷியல் படம் அல்ல, என்பதை நமக்கு புரிய வைக்கும். ஆடு மேய்ப்பவர்கள், ஆடுகளுக்கு மர இலைகளை பறிப்பதற்காக பயன்படுத்தப்படும் தொரட்டி தான் தலைப்பு, கதைக்களமும் ஆடு மேய்ப்பவர்களை பற்றியும், அவர்களைப் பற்றிய சிறிய வரலாற்று பதிவாகவும் இருக்கிறது.

 

ஊர் ஊராக சென்று ஆட்டு கெடை போட்டு வாழும் சமூகத்தை சேர்ந்த ஹீரோயினுக்கு அதே சமூகத்தை சேர்ந்த ஹீரோ மீது காதல் வருகிறது. கூடா நட்பு மூலம் கேடாய் போகும் ஹீரோ, எந்த நேரமும் சாராய போதையில் இருப்பதால், அவருக்கு பெண் கொடுக்க ஹீரோயின் தந்தை மறுக்கிறார். திருமணம் செய்து வைத்தால் மகனின் வாழ்க்கை மாறும் என்ற ஹீரோவின் தந்தையின் மனதை புரிந்துக்கொள்ளும் ஹீரோயின், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, ஹீரோவை கரம் பிடிப்பதில் கரார் காட்ட, அவரது விருப்பம் போலவே ஹீரோவை கட்டி வைக்கிறார்கள்.

 

திருமணத்திற்குப் பிறகு மனைவி சொல் மிக்க மந்திரம் இல்லை, என்பதை புரிந்துக்கொண்டு இல்லற வாழ்க்கையை நன்றாக வாழும் ஹீரோவுக்கு மீண்டும் கூடா நட்பு மூலம் கேடு வர, அதில் இருந்து மீண்டு வந்தாரா அல்லது தனது வாழ்க்கையை இழந்தாரா, என்பதே படத்தின் மீதிக்கதை.

 

ஆடு மேய்ப்பவர்களின் வாழ்க்கை பதிவு தான் கதைக்களம் என்றாலும், அதை டாக்குமெண்டரியை போல சொல்லாமல், அனைத்து தரப்பினருக்கும் பிடித்த, ஜனரஞ்சகமான திரைக்கதையுடன் சொல்லியிருக்கும் இயக்குநர் மாரிமுத்து, கிடை போடுவது என்றால் என்ன, அதனால் விவசாய நிலத்திற்கு என்ன பயன், என்பதை போகிற போக்கில் சாதாரணமாக சொல்லியிருந்தாலும், கிடை போட்டு வாழ்ந்து வந்த சமூகத்தினரின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையை வசனங்கள் மூலமாகவே நம் மனதில் பதிய வைக்கிறார்.

 

ஹீரோவாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் ஷமன் மித்ரு, சாதாரண கிராமத்து இளைஞர் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறவர். நடிப்பதே தெரியாத வகையில் இயல்பான அதே சமயம் வெகுளித்தனமான நடிப்பு மூலம் கவர்கிறார். ஆடு திருடுபவர்களிடம், “அந்த ஆட்டை விட்ருங்க, அதுக்கு பதிலா வேற ஆட்டை தர்ரேன், என்று கூறும்” அவரது வெகுளித்தனமான நடிப்பும், அதே சமயம், அதே கள்வர்களை காவு வாங்கும் போது காட்டும் ஆக்ரோஷமான நடிப்பிலும் சரி, எந்தவித ஓவர் ஆக்டிங்கும் இல்லாமல், இயல்பாக நடித்துவிட்டு போகிறார்.

 

நிஜமாகவே ஆடு மேய்க்கும் பெண்மணியோ என்று நினைக்க தோன்றும் அளவுக்கு ஹீரோயின் சத்யகலாவின் தோற்றமும், நடிப்பும் இருக்கிறது. கட்டிக்க போறவர் மதுவுக்கு அடிமையானவர் என்பது தெரிந்தும், அவரது பெற்றோரின் கண்ணீருக்காக அவரை கணவராக்கி கொள்ள சம்மதிப்பவர், தனது அதிரடியால் கணவனை கட்டிப்போடுவதோடு, அவரை திருத்துவதற்காக எடுக்கும் ஒவ்வொரு அதிரடியான விஷயங்களாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கிறார். மொத்தத்தில், பாலுமகேந்திராவின் கதாநாயகியாக நம் மனதில் ஒட்டிக்கொள்கிறார்.

 

ஹீரோவின் அப்பாவாக நடித்திருக்கும் அழகு, அம்மாவாக நடித்திருக்கும் பேச்சி, ஹீரோயினின் பெற்றோர்களாக நடித்திருக்கும் குமணன், ஸ்டெல்லா மற்றும் திருடர்களாக வரும் சுந்தர்ராஜன், சீலன், முத்துராமன் என அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வாக இருப்பதோடு, இயல்பாக நடிப்பதில் கைதேர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.

 

Thorati Review

 

வேத் சங்கரின் இசையில் கிராமத்து மண் வாசம் வீசுவது போல, சினேகனின் வரிகளில் கணவன் - மனைவி பந்தத்தில் இருக்கும் காதல் கரைபுரண்டு ஓடுகிறது.

 

எளிமையான ஒளிப்பதிவாக இருந்தாலும், திரைக்கதையுடன் காட்சிகள் ஒட்டி உறவாடும் வகையில் ஒளிப்பதிவாளர் குமார் ஸ்ரீதர் காட்சிகளை படமாக்கியிருக்கிறார். காட்சிகளில் பிரம்மாண்டத்தை காட்டுவதை விட கதைக்கு தேவையானவைகளாக இருக்க வேண்டும் என்பதில் மனுஷன் தீவிரம் காட்டி இருப்பது படம் முழுவதும் தெரிகிறது.

 

ஒரு சமூகத்தின் வாழ்வியலை சொன்னாலும், எந்தவித சர்ச்சையிலும் சிக்காமல் அனைத்து தரப்பினருக்கும் புரியும் வகையில் ஜனரஞ்சகமான முறையில் சொல்லியிருக்கும் இயக்குநர் மாரிமுத்து, கூடா நட்பு கேடு விளைவிக்கும், என்ற சாதாரணமான மெசஜை கூட, நமக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.

 

படம் க்ளைமாக்ஸை நெருங்கும் போது, ஹீரோயினுக்கு என்ன நடக்கும், அவர் காப்பாற்ற படுவாரா, என்ற பரபரப்பு நம்மை தொற்றிக்கொள்ள வைக்கும் இயக்குநர், சோறு போட்டவனுக்கு கேடு விளைவித்தவர்களுக்கான முடிவில் ட்விஸ்ட்டை வைத்து எதிர்ப்பார்ப்பை எகிற வைக்கிறார். இறுதியில், ஹீரோ மீது நமக்கு ஏற்படும் இறக்கத்தை விட, அவரது வாழ்க்கையை சீரழித்தவர்கள் மீது அதிகப்படியான கோபம் ஏற்பட வைப்பவர், அவர்களுக்கு சரியான முடிவையும் கொடுக்கிறார்.

 

Thorati

 

கமர்ஷியல் படம் என்று பத்தில் ஒன்றாக இதை ஒதுக்கிடவும் முடியாமல், கலைப்படம் என்று நாம் ஒதுங்கி போகவும் முடியாமல், இரண்டையும் சரிசமமாக சேர்த்து சினிமா ரசிகர்களும், ரசனைமிக்க ரசிகர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தரமான படமாக இயக்குநர் மரிமுத்து இப்படத்தை கொடுத்திருக்கிறார்.

 

மொத்தத்தில், இந்த ‘தொரட்டி’ திரைப்படமாக மட்டும் இன்றி நல்ல பதிவாகவும் இருக்கிறது.

 

ரேட்டிங் 3.5/5