Latest News :

‘என் காதலி சீன் போடுறா’ விமர்சனம்

6fcb0250b9be87f8bdf6d3da532dbb6a.jpg

Casting : Mahesh, Shalu Souvrasiya, Gokul, Naren, Manobala

Directed By : Ram Seva

Music By : Amrish

Produced By : Shankar Movies International

 

’அங்காடித் தெரு’ மகேஷ், ஷாலு சவ்ரஷ்யா, கோகுல் ஆகியோரது நடிப்பில், ராம் சேவா இயக்கத்தில், ஷங்கர் மூவிஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் ஜோசப் பேபி தயாரிப்பில் வெளியாகியிருக்கும் ‘என் காதலி சீன் போடுறா’ படம் எப்படி என்று பார்ப்போம்.

 

ஹீரோ மகேஷும், ஹீரோயின் ஷாலு சவ்ரஷ்யாவும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிய மகேஷு ஷாலுவை காதலிக்கிறார். ஆரம்பத்தில் ஓவராக சீன் போடும் ஷாலு, பிறகு மகேஷை ஓவராக காதலிக்கவும் தொடங்குகிறார். இருவரது காதலுக்கும் இரு வீட்டாரும் பச்சைக்கொடி காட்டி திருமணத்திற்கும் ஏற்பாடு செய்கிறார்கள்.

 

போலீஸ் அதிகாரியான மகேஷின் அண்ணனை, மற்றொரு போலீஸ் அதிகாரியான கோகுல் பழிவாங்க நினைக்கிறார். இதற்கிடையே சில மர்ம நபர்கள் மகேஷின் அண்ணியை கொலை செய்ய, அவர்களை கண்டுபிடித்து பழிவாங்குவதற்காக காதலியை பிரியும் மகேஷ், தனது அண்ணியை கொலை செய்தது யார்? என்பதை கண்டுபிடித்தாரா, அவரது காதல் கைகூடியதா, மகேஷின் அண்ணனுக்கும், கோகுலுக்கும் இடையே என்ன பிரச்சினை, என்பது தான் படத்தின் மீதிக்கதை.

 

படத்தின் டைடிலைப் பார்த்தால், முழுக்க முழுக்க காதலைப் பற்றியும், காதலிகள் போடும் சீன்களைப் பற்றியும் படம் பேசப்போகிறது என்று தெரியும், ஆனால், காதல் என்பதை ஒரு களமாக வைத்துக்கொண்ட இயக்குநர் ராம் சேவா, திரைக்கதையை சமூக விழிப்புணர்வுடன் அமைத்திருக்கிறார்.

 

ஹீரோ அங்காடித் தெரு மகேஷ் தனக்கு கொடுத்த வேலையை சரியாகவே செய்திருக்கிறார். ஹீரோயின் ஷாலு சவ்ரஷ்யா, சன்னி லியோன் முகஜாடையில் இருந்தாலும், அவரைப் போல கவர்ச்சி காட்டாமல் கதைக்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

 

வில்லனா, நல்லவனா என்று தெரியாத வகையில் வரும் கோகுலின் கதாபாத்திரம் திருப்புமுனை. அவரது பிளாஷ்பேக் காட்சிகளும் ரசிக்க வைக்கிறது. அவரும் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். ஆடுகளம் நரேன், மனோபாலா என்று அனைவரும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

 

அம்ரிஷின் இசையும், வெங்கட்டின் ஒளிப்பதிவும் கதையுடன் பயணித்திருக்கிறது. அஹா...ஒஹோ...என்று சொல்லும்படி இல்லை என்றாலும், மோசம் என்று சொல்லாத வகையில் இருக்கிறது.

 

பிள்ளைகளை படிக்க வைக்கும் பெற்றோர்கள், அவர்கள் என்ன செய்கிறார்கள், என்ன படிக்கிறார்கள், எப்படிப்பட்டவர்களுடன் பழகுகிறார்கள், என்பதையும் அவ்வபோது கவனிக்க வேண்டும், ஏதோ அவர்களின் கல்லூரிக்கு பணம் கட்டிவிட்டோம், படிப்புக்கு பணம் கட்டிவிட்டோம் என்று விட்டுவிடக்கூடாது, அப்படி விட்டால் அவர்களது வாழ்க்கை எப்படி தடம் மாறும் என்பதை இயக்குநர் அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.

 

இன்று நாட்டில் நடக்கும் பல குற்றங்களில் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுவது தினசரி செய்தியாகிவிட்ட நிலையில், இப்படத்தின் மூலம் இயக்குநர் ராம் சேவா பெற்றோர்களுக்கு சொல்லியிருக்கும் அறிவுரை பாராட்டக்கூடியதாக இருக்கிறது.

 

படத்தில் சில குறைகள் இருந்தாலும், தான் சொல்ல வந்ததை நேர்த்தியாக சொல்லியிருக்கும் இயக்குநர் ராம் சேவா, திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். இருந்தாலும், கோகுலின் கதாபாத்திரத்தை அவர் கையாண்ட விதம் படத்தில் பலம் சேர்ப்பதாக இருக்கிறது.

 

மொத்தத்தில், ‘என் காதலி சீன் போடுறா’ வெறும் காதலியை பற்றி பேசாமல், சமூகத்தை பற்றியும் பேசியிருக்கிறது.

 

2.5/5