Latest News :

‘சங்கத்தமிழன்’ விமர்சனம்

7722189b3edbf2f023cc16c4e1c5c04c.jpg

Casting : Vijay Sethupathi, Raashi Khanna, Nivetha Pethuraj, Soori, Nazar

Directed By : Vijay Chandar

Music By : Vivek-Mervin

Produced By : Vijaya Productions

 

சிம்புவின் ‘வாலு’ மற்றும் விக்ரம் நடித்த ‘ஸ்கெட்ச்’ படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில், விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘சங்கத்தமிழன்’. லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தமிழகம் முழுவதும் வெளியிட்டிருக்கும் இப்படம் எப்படி என்பதை பார்ப்போம்.

 

விஜய் சேதுபதி தனது நண்பர் சூரியுடன் சேர்ந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறார். அப்போது, பெரும் பணக்காரரின் மகளான ராஷி கண்ணாவின் நட்பு கிடைத்து நாளடைவில் அது காதலாக மாறுகிறது. மகளின் காதல் விவகாரம் தெரிந்து கோபப்படும் ராஷி கண்ணாவின் அப்பா, விஜய் சேதுபதியை பார்த்ததும், ஆத்திரப்படுவதற்கு பதிலாக அதிர்ச்சியடைந்து, இவன் முருகன் அல்ல தமிழ், என்று கூற, அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதை.

 

தமிழ் சினிமாவில் இரட்டை வேடம் படம் என்றாலே இப்படித்தான் இருக்கும், என்ற ரசிகர்களின் யூகத்தை பொய்யாக்காத ஒரு படமாக இந்த ‘சங்கத்தமிழன்’ இருந்தாலும், இரட்டை வேடத்தில் இருக்கும் சஸ்பென்ஸை சுவாரஸ்யமாக சொல்லியிருப்பதோடு, படத்தை முழுக்க முழுக்க பொழுதுபோக்காக கொடுத்திருக்கிறார்கள்.

 

விஜய் சேதுபதி எப்போதுமே பக்கத்து வீட்டு அங்கிள் போல அசால்டாக நடித்துவிட்டு போக கூடியவர். அதுவும் இப்படி ஒரு கமர்ஷியல் படம் என்றால் சொல்லவா வேண்டும், ரொம்ப சாதாரணமாக நடித்திருப்பவர், மாஸ் காட்சிகளைக் கூட தனது ஸ்டைலில் இயல்பாக கடந்து போகிறார். சில படங்களில் மாஸ் காட்டலாமா, வேணாமா என்று யோசித்த விஜய் சேதுபதி, இதில் ஓபனிங் சண்டைக்காட்சி, ஓபனிங் பாடல் என்று முழுவதுமாக இறங்கி விளையாடியிருக்கிறார். இருந்தாலும், ஏதோ ஒரு குறை இருப்பது போலவே தோன்றுகிறது.

 

முதல் பாதியில் ராஷி கண்ணா, இரண்டாம் பாதியில் நிவேதா பெத்துராஜ் என்று இரண்டு ஹீரோயின்கள் இருந்தாலும், இருவருக்கும் கமர்ஷியல் கதாநாயகிகளின் வேலை தான்.

 

பேசாமல் காமெடி செய்திருக்கும் சூரியின் புது டெக்னிக் பெரும் வரவேற்பு பெறுகிறது. அதிகம் பேசாமல், எக்ஸ்பிரஷன்கள் மூலமாகவே ரசிகர்களை சிரிக்க வைக்கும் சூரி, தொட்டி ஜெயா சிம்புவாக சில நிமிடங்கள் நடித்திருந்தாலும், அதை நினைத்து நினைத்து பல மணி நேரங்கள் சிரிக்க வைத்துவிடுகிறார்.

 

Sangathamizhan Review

 

வில்லன் அஷுதோஸ் ராணா மற்றும் ராஷி கண்ணாவின் அப்பாவாக நடித்திருப்பவர் தமிழ் சினிமாவுக்கு பரிச்சயம் இல்லாத நபர்களாக இருப்பதால் சற்று ஒட்டாமல் போகிறார்கள். நாசர் எப்போதும் போல தனது பணியை சரியாக செய்திருக்கிறார்.

 

வேல்ராஜின் ஒளிப்பதிவு கலர்புல்லாக இருக்கிறது. விவேக் - மெர்வின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். பின்னணி இசை மசாலப்படங்களுக்கு ஏற்றவாறு இருக்கிறது.

 

விஜய் சேதுபதியை முழுமையான மாஸ் ஹீரோவாக காட்ட வேண்டும் என்று முடிவு செய்திருக்கும் இயக்குநர் விஜய் சந்தர், அதை படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை ஃபாலோ செய்திருக்கிறார்.

 

முருகன் மற்றும் தமிழ் இருவரும் ஒருவரா, அல்லது வெவ்வேறு நபரா, என்ற சஸ்பென்ஸ் திரைக்கதைக்கு சுவாரஸ்யம் சேர்த்திருந்தாலும், படத்தில் இடம்பெறும் மரம் வெட்டுதல், தொழிற்சாலை எதிர்ப்பு போராட்டம், ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் கஷ்ட்டப்படுவது போன்ற விஷயங்கள் அதரபழசாக இருக்கிறது. 

 

காண்சப்ட் பழசாக இருந்தாலும், இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத நகைச்சுவை காட்சிகள், இரத்தம் இல்லாத சண்டைக்காட்சிகள், விரசம் இல்லாத காதல் காட்சிகள், குறிப்பாக டாஸ்மாக் போகாத ஹீரோ, என்று அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய ஒரு நேர்மையான பொழுதுபோக்கு படமாக இயக்குநர் விஜய் சந்தர் இயக்கியிருக்கிறார்.

 

இது இப்படித்தான் இருக்கும், என்று படம் பார்ப்பவர்கள் யூகித்தாலும், அது எப்படி நடந்தது, என்ற எதிர்ப்பார்ப்புடன் திரைக்கதையை சுவாரஸ்யத்துடன் நகர்த்தியிருக்கும் இயக்குநர் இரண்டரை மணி நேரம் ரசிகர்களை முழுமையாக எண்டர்டெயின் பண்ணக்கூடிய படமாக கொடுத்திருக்கிறார்.

 

மொத்தத்தில், ’சங்கத்தமிழன்’ ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் தோழனாக இருக்கிறார்.

 

ரேட்டிங் 3/5