Latest News :

‘காட்ஃபாதர்’ விமர்சனம்

ba02a8d3ed25ff4a81741524398b0111.jpg

Casting : Natty, Ananya, Lal, Aswanth, Marimuthu

Directed By : Jegan Rajshekar

Music By : Naviin Ravindran

Produced By : GS Arts & Firstclap

 

நல்ல வேலை, அழகான மனைவி, குழந்தை என்று திருப்திக்கரமான நடுத்தர குடும்பத்து மனிதராக வாழ்ந்து வரும் நட்டிக்கு, ரவுடி ஒருவரால் பிரச்சினை வருகிறது. அந்த பிரச்சினை அவரின் ஒரே ஒரு மகனின் உயிரை பலி கேற்க, அந்த ரவுடியிடம் இருந்து தனது மகனை நட்டி எப்படி காப்பாற்றுகிறார், அதன் பின்னணி என்ன, என்பதே கதை.

 

சாது மிரண்டால் காடு கொள்ளாது, என்ற பழமொழிக்கு ஏற்றவாறு கரு இருந்தாலும், அதை உடல் பலத்தோடு அல்லாமல், மன பலத்தோடு ஹீரோ எதிர்கொள்வது போல திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் அசுர பலம் பொருந்திய ரவுடிக்கும், அமைதியான ஹீரோவுக்கும் இடையே நடக்கும் ஆடு புலி ஆட்டத்தை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்.

 

நடுத்தர குடும்பத்தலைவராக கச்சிதமாக பொருந்தும் நட்டி, பாசமான அப்பாவாகவும், அன்பான கணவனாகவும் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். மகனின் உயிருக்கு ஆபத்து, அதுவும், ரவுடி ஒருவரால் என்ற போது, என்ன செய்வது என்று தெரியாமல் பயந்து பதறும் நட்டி, மகனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று, எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் காட்சிகளுக்கு சுவாரஸ்யத்தை சேர்க்கிறது.

 

நட்டியின் மனைவியாக நடித்திருக்கும் அனன்யா, விஷயம் தெரியாமல் அலட்சியமாக பேசுவதும், பிறகு விஷயம் தெரிந்தவுடன் பதறுவதும் இயல்பாக இருக்கிறது. அளவான நடிப்பு மூலம் தனது கதாப்பாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

 

குட்டி பையன் அஸ்வத், அலறுவது மனதை பதற வைக்கிறது. என்ன நடக்கிறது, என்று தெரியாமல் பயந்து நடங்கும் குழந்தையின் நிலையை எண்ணி வருந்துவதை விட, வில்லன் மீது பெரும் கோபம் ஏற்படுகிறது.

 

வில்லனாக நடித்திருக்கும் லால் அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குழந்தையின் உயிரை பலி கேற்கும் அவரது கொடூர எண்ணத்தோடு, அவரையும் சேர்த்து பொசுக்க வேண்டும், என்று படம் பார்க்கும் அனைவரும் நினைக்கும் வகையில், கொடூரமான நடிப்பை வெளிப்படுத்தி மிரட்டுகிறார்.

 

கதாப்பாத்திரங்களிடம் இருக்கும் பதற்றத்தை ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரமும், இசையமைப்பாளர் நவீன் ரவீந்திரனும் பார்வையாளர்களிடம் எளிதில் எடுத்துச் செல்லும் விதத்தில் பணியாற்றியிருக்கிறார்கள்.

 

சிறிய கருவை வைத்துக் கொண்டு, முழுநீளப் படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் ஜெகன் ராஜசேகர், தொடக்கம் முதல் முடியும் வரை, விறுவிறுப்பு குறையாத வகையில் திரைக்கதை அமைத்ததோடு, ரசிகர்களை படபடப்பாகவும், அடுத்த என்ன நடக்கும், என்ற எதிர்ப்பார்ப்புடனும் படம் முழுவதும் வைத்திருப்பது படத்தின் பலம்.

 

மொத்தத்தில், நேர்த்தியான திரைக்கதை, திருப்புமுனைகள் நிறைந்த காட்சிகள் என கொடுத்த காசுக்கு வச்சனை இல்லாமல் எண்டர்டெயின் செய்கிறார் இந்த  ‘காட்ஃபாதர்’ 

 

ரேட்டிங் 3/5