Latest News :

‘இ.பி.கோ 306’ விமர்சனம்

5212d3e85137c085188d7769be2e4f1c.jpg

Casting : Thara Pazhanivel, Seenu Mohan, Sai

Directed By : Sai

Music By : Surya Prasad

Produced By : Sai Pictures - Sivakumar

 

நீட் தேர்வால் தனது மருத்துவப்படிப்பு கனவு சிதைந்து போனதை தாங்க முடியாமல், தமிழக மாணவி அனிதா தற்கொலை செய்துக் கொண்டார். 2017 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தை கருவாக கொண்டு உருவாகியிருக்கும் படம் தான் ‘இ.பி.கோ 306’.

 

அனிதா தற்கொலை சம்பவம் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தினாலும், ஒரு சில நாட்களுக்குப் பிறகு அப்படி ஒரு சம்பவம் நடந்ததையே மக்கள் மறந்துப்போகும் அளவுக்கு காலங்கள் ஓடி, தற்போது பணம் இருக்கும் மாணவர்கள், பள்ளி படிப்பின் போதே நீட் தேர்வுக்கும் தயாராகும் நிலை சகஜமாகிவிட்டது.

 

ஆனால், நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துக்கொண்ட மாணவி அனிதாவின் வாழ்வில், நீட் தேர்வு எத்தகைய ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது என்றும், நீட் தேர்வினால் அரசியல்வாதிகளுக்கு கிடைக்கும் பலன் என்ன? என்பது பற்றியும் வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது இந்த ‘இ.பி.கோ 306’

 

படத்தில் மாணவி கோடீஸ்வரியாக நடித்திருக்கும் தாரா பழனிவேல், கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பதோடு, நடிப்பிலும் கவனம் ஈர்க்கிறார். அப்பாவுக்கு தைரியம் சொல்லி தேற்றும் இடத்திலும், உறவினர் தனக்கு சமாதானம் சொல்லாமல், தன்னிடம் கோபம்படும் போது, தனது இயலாமையை எண்ணி வருந்தும் இடத்திலும் கலங்க வைக்கிறார்.

 

மாணவியின் அப்பாவாக நடித்திருக்கும் சீனுமோகன், நடிக்காமலேயே தனது பாவப்பட்ட நிலையை வெளிப்படுத்துகிறார்.

 

அரசியல் தலைவராக நடித்திருக்கும் சாய், கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருப்பதோடு, தமிழகத்தின் குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியையும், அதன் தலைவரையும் அவ்வபோது நினைவுப்படுத்துவது போலவும் வசனம் பேசுகிறார்.

 

திரைக்கதையும், காட்சிகளும் சொல்லும் சோகத்தை விட சற்று கூடுதலான சோகத்தை சூரிய பிரசாத்தின் பின்னணி இசையும், பாடல்களும், ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கிறது. ஒளிப்பதிவாளர் செல்லாப்பாவின் கேமரா கதைக்கு ஏற்ப பயணித்துள்ளது.

 

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கும் சாய், நீட் தேர்வால் மாணவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், என்பதோடு, அதே தேர்வில் இருக்கும் அரசியல் மற்றும் அரசியல்வாதிகளுக்கான ஆதாயங்களை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். 

 

நீட் தேர்வு மட்டும் அல்ல மக்களுக்கு தீமை விளைவிக்கும் அனைத்திலும் அரசியல்வாதிகளுக்கு பல கோடி ரூபாய் லாபம் கிடைக்கிறது, என்பதை தைரியமாக சொல்லியிருக்கும் இயக்குநர், சத்தமே இல்லாமல் நீட் தேர்வு பயிற்சி மையம், என்ற பெயரில் நடக்கும் வியாபரம் பற்றியும் பேசியிருக்கிறார்.

 

வேகம் குறைவான திரைக்கதை சில இடங்களில் தொய்வை ஏற்படுத்தினாலும், எந்த ஒரு கமர்ஷியல் விஷயங்களையும் கலக்காமல், நீட் தேர்வின் பாதிப்பையும், அதற்கு பின்னால் இருக்கும் அரசியலையும் நெற்றிப்பொட்டில் அறைந்தது போல அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குநர் சாய் மற்றும் ‘இ.பி.கோ 306’ படக்குழுவை வெகுவாக பாராட்டலாம்.

 

இப்படம், இலவசமாக படங்கள் பார்க்ககூடிய ஓடிடி தளமான எம்.எக்ஸ் பிளேயரில் (MX PLAYER) வெளியாகியுள்ளது.

 

ரேட்டிங் 3.5/5