Latest News :

‘ஒரு குடைக்குள்’ விமர்சனம்

cae3e90de87250a44cdfd1021649e313.jpg

Casting : Meghana Raj, Siva Dinesh, Ilavarasu, Nirvasha, Rajasri, Ravi Raghul

Directed By : KL Udhayakumar

Music By : Deva

Produced By : KL Udhayakumar

 

கதை, திரைக்கதை, எழுதி, இயக்கியிருப்பதோடு, அய்யா சிவ சிவ சினி கிரியேஷன்ஸ் சார்பில் கே.எல்.உதயகுமார் தயாரித்திருக்கும் படம் ‘ஒரு குடைக்குள்’.

 

ஆனந்த், மேக்னா ராஜ், சிவ தினேஷ் ஆகிய இளம் நடிகர்களுடன், நிரோஷா, ‘கருத்தம்மா’ ராஜஸ்ரீ, இளவரசு, இராஜேந்திரநாத், ரவிராகுல், சூசன் ஜார்ஜ் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம், பூவண்டன் தோப்பு என்னும் சாமி தோப்பில் ஶ்ரீமன் நாராயண வைகுண்டர் நிகழ்த்திய அற்புதங்களை வரலாறாக எடுத்துச் சொல்லும் காவியமாக அமைந்துள்ளது.

 

சிறுவனாக அவதாரம் எடுக்கும் வைகுண்டர் சிவ தினேஷ், நாராயணசாமியின் தீவிர பக்தையாக இருக்கும் மேக்னா ராஜின் குடும்பத்திற்குள் ஒருவராக நுழைகிறார். அந்த ஊர் மக்களுக்கு தெரியாமலே அவர்கள் வாழ்வில் பல அற்புதங்களை செய்து வரும் அவதார சிறுவனான சிவ தினேஷ், மேக்னா ராஜுக்கு கிருஷ்ணராக தரிசனம் தருவதோடு, அவருக்கு ஏற்பட இருக்கும் பேராபத்தில் இருந்து அவரை பாதுகாக்கும் நடவடிக்கையில் இறங்குகிறார். இதனால், மேக்னா ராஜின் குடும்பத்தார் சிறுவன் சிவ தினேஷை திட்டி வீட்டை விட்டு வெளியேற்ற, மேக்னா ராஜுவை ஆபத்தில் இருந்து காப்பாற்ற முடியாமல் போகிறது. இருப்பினும், அவரை கிளியாக மாற்றி தீய சக்தியிடம் இருந்து காப்பாற்றும் சிவ தினேஷ், சிறுவன் அவதாரத்தில் இருந்து பெரியவனாக அவதாரம் எடுக்க, கிளியாக மாறிய மேக்னா ராஜ் என்ன ஆனார், வைகுண்டரின் அடுத்தடுத்த அவதாரங்கள் என்ன?, அதில் அவர் எப்படிப்பட்ட அதிசயங்களை நடத்தினார்?, போன்ற கேள்விகளுக்கான விடை தான் படத்தின் கதை.

 

வைகுண்டரின் அதிசயங்களை பற்றி அறிந்தவர்களுக்கும், அறியாதவர்களுக்கும் இனியமையான ஆன்மீக படமாக இப்படத்தை இயக்குநர் கே.எல்.உதயகுமார் இயக்கியிருந்தாலும், அனைத்து தரப்பினரும் ரசிக்க கூடிய சுவாரஸ்யமான திரைக்கதை கொண்ட கமர்ஷியல் படமாகவும் கொடுத்திருக்கிறார்.

 

வைகுண்டர் நிகழ்த்திய அதிசயங்கள் பல உண்டு என்பதால், இரண்டு பாகங்களாக இப்படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர், இரண்டாம் பாகம் எப்போது வரும், என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்படுத்தும் வகையில், முதல் பாகத்தை முடித்திருப்பது படத்தின் மிகப்பெரிய பலம்.

 

வைகுண்டரின் தீவிர பக்தையாக தாட்சாயணி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் மேக்னா ராஜ், எளிமையான அழகோடும், இயல்பான நடிப்போடும் கதாப்பாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். 

 

அவதார சிறுவனாக நடித்திருக்கும் சிவ தினேஷ், வைகுண்டரின் அவதாரத்திற்கு ஏற்ற கச்சிதமான தேர்வாக இருப்பதோடு, தனது நடிப்பு மூலம் படம் பார்ப்பவர்களை வைகுண்டரின் பக்தர்களாக்கி விடுகிறார்.

 

அசுரக்குல பெண்ணாக நடித்திருக்கும் சூசன் ஜார்ஜ், ‘மைனா’ படத்திற்கு பிறகு கவனிக்கும்படியான கதாப்பாத்திரத்தில் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெறுகிறார்.

 

இளவரசு, நிரோஷா, கருத்தம்மா ராஜஸ்ரீ, ரவிராகுல் ஆகியோரின் அனுபவம் வாய்ந்த நடிப்பு, கதாப்பாத்திரங்களுக்கு பலம் சேர்த்துள்ளது.

 

இசையமைப்பாளர் தேவாவின் பாடலும், பின்னணி இசையும் ஆன்மீக அருவியில் குளித்த அனுபவத்தை கொடுக்கிறது. காட்சிகளை தரமாக கொடுத்திருக்கும் ஒளிப்பதிவாளர் வி.இராஜேந்திரன், கதைக்கு ஏற்ப பயணித்துள்ளார்.

 

”கோவிலுக்குள் வந்துவிட்டால், சாமியை தவிர வேறு யாரையும் கை கூப்பி கும்பிட கூடாது...” போன்ற வசனங்கள் மூலம் கவனிக்க வைக்கும் எஸ்.ஆர்.நிலாவின் வசனங்களை கதாப்பாத்திரங்கள் உச்சரிக்கும் விதத்திற்கு தனி பாராட்டு தெரிவிக்கலாம். 

 

முதல் பாதியில் வைகுண்டரின் அவதாரம் செய்யும் அற்புதங்களை சுவாரஸ்யமான காட்சிகளாக தொகுத்திருக்கும் இயக்குநர் கே.எல்.உதயகுமார், இரண்டாம் பாதியில் அசுரக்குலம், மனிதகுலத்தை அடிமையாக்க எடுக்கும் முயற்சியும், அதில் இருந்து மக்களை காப்பாற்ற வைகுண்டர் அவதாரம் கொடுக்கும் பதிலடி, என படத்தை விறுவிறுப்பாக நகர்த்தி செல்கிறார்.

 

வைகுண்டரின் அற்புதங்களை எடுத்துச் சொல்லும் படமாக இருந்தாலும், அதை மக்களுக்கு புரியும்படி மிக எளிமையாக எடுத்துச் சொல்லும் இப்படம் ஆன்மீக பாதையில் நடக்கும் அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.