Latest News :

‘மண்டேலா’ விமர்சனம்

79b0c0467f175b8fd1f6d397b805f3f9.jpg

Casting : Yogi Babu, Sheela Rajkumar, Sangili Murugan

Directed By : Madonne Ashwin

Music By : Bharath Shnkar

Produced By : YNot Studios, Reliance Entertainment, Open Window & Wishberry Films

 

தமிழ் சினிமாவில் மட்டும் அல்ல, பிற மொழிகளில் கூட இப்படி ஒரு சமகால அரசியல் நையாண்டித் திரைப்படம் வெளியாகியிருக்காது, என்ற ரீதியில், அசத்தலான அரசியல் நையாண்டித் திரைப்படமாக உள்ளது இந்த ‘மண்டேலா’.

 

ஊராட்சி தேர்தலில் கிராமத்தின் இரு பெரிய தலைகள் போட்டியிடுகிறார்கள். இருவருக்கும் சரிசமமான வாக்குகள் கிடைக்க, அந்த கிராமத்தில் புதிதாக வாக்களர் பட்டியலில் இணைந்த சவரத்தொழிலாளியான யோகி பாபுவின் வாக்கு யாருக்கு கிடைக்கிறதோ, அவர் தான் வெற்றி பெறுவார், என்ற நிலை ஏற்படுகிறது. இரண்டு வேட்பாளர்களும் யோகி பாபுவின் வாக்கை பெறுவதற்கு செய்யும் முயற்சிகளும், தனது ஒரு வாக்கினால் என்னவாக போகிறது, என்று நினைக்கும் யோகி பாபுவின் ஓட்டால் அந்த கிராமத்தின் தலை எழுத்தே மாறுகிறது. அவை எப்படி நடக்கிறது, என்பதை மிக நேர்த்தியான வகையிலும், நையாண்டித்தனமாகவும் சொல்வது தான் ’மண்டேலா’கதை.

 

பணத்திற்காக வாக்கை விற்பதால் ஏற்படும் விளைவுகளையும், தற்போதைய பணநாயக அரசியலால் நாடு எப்படி கெட்டு குட்டிச்சுவராகிறது, என்பதை இதை விட அழுத்தமாகவும், நையாண்டித்தனமாகவும் மட்டும் இன்றி ரசிக்கும்படியான திரைப்படமாகவும் யாரும் சொன்னதில்லை.

 

கதையின் நாயகனாக நடித்திருக்கும் யோகி பாபு, தனது காமெடியை கடந்து நல்ல குணச்சித்திர நடிகர் என்று பெயர் எடுத்திருக்கிறார். சவரத்தொழிலாளி கதாப்பாத்திரத்தில், இளிச்சவாயன் என்று ஊர் மக்களால் அழைப்பது மட்டும் இன்றி, அந்த பெயருக்கு ஏற்றபடி வாழ்ந்து வரும் யோகி பாபு, தனது ரெகுலர் காமெடி கலாட்டாவை ஓரம் வைத்துவிட்டு, படம் முழுவதும் கதையின் நாயகனாக பயணித்து, படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார்.

 

கிருதா கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுவன், அஞ்சல்துறை ஊழியரான ஷீலா ராஜ்குமார், சங்கிலி முருகன், தேர்தலில் போட்டியிடுபவர்கள் மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்கள் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும், நடிக்கிறார்கள், என்ற உணர்வு நமக்கு ஏற்படாத வகையில், திரையில் தோன்றுகிறார்கள்.

 

விது அய்யன்னாவின் ஒளிப்பதிவு திரைக்கதைக்கு ஏற்றவாறு பயணித்திருப்பதோடு, கதாப்பாத்திரங்களை நம் மனதில் எளிதாக இறக்கிவிடுகிறது.

 

யாருப்பா இசை? என்று கேட்கும்படி, பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டிலும் கவனம் ஈர்க்கிறார் இசையமைப்பாளர் பரத் சங்கர். 

 

ஜாதி அரசியலை நையாண்டி செய்து படத்தை தொடங்கும் இயக்குநர் மடோன்னே அஸ்வின், அடுத்தடுத்த காட்சிகளில் அரசு எந்திரத்தில் உள்ள குறைபாடுகளுக்கு குட்டு வைப்பதோடு, பணநாயக அரசியலை பந்தாடியிருக்கிறார்.

 

ஒரு ஓட்டால் என்னவாகிட போகிறது, என்று நினைக்கும் ஒவ்வொரு மனிதரும் இந்த படத்தை பார்த்துவிட்டால், என்னதான் ஆனாலும் சரி, ஓட்டு போடாமல் இருக்கவும் மாட்டார்கள், ஓட்டுக்கு பணமும் வாங்க மாட்டார்கள்.

 

அரசியல் நையாண்டி திரைப்படமாக இருந்தாலும், மக்களுக்கு எளிதாக புரியும்படி திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் மடோன்னே அஸ்வின், தான் சொல்ல நினைத்ததை திரைவடிவில் நேர்த்தியாக சொல்லியிருப்பது படத்தின் கூடுதல் பலம். அதிலும், படம் முழுவதும் நம்மை சிரிக்க வைத்தே, நமக்கு புத்திமதி சொல்லியிருப்பது சபாஷ் போட வைக்கிறது.

 

‘மண்டேலா’ - மகத்துவம்

 

ரேட்டிங் 5/5

 

குறிப்பு : ’மண்டேலா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல், நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் ஏப்ரல் 4 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.