Latest News :

’திட்டம் இரண்டு’ விமர்சனம்

9650c0b88796d39391dbacba09e83d3a.jpg

Casting : Aishwarya Rajesh, Baval Navageethan, Subash Selvam, Ananya Ramprasad

Directed By : Vignesh Karthik

Music By : Satish Raghunathan

Produced By : Dinesh Kannan and Vinod Kumar

 

பணியிடை மாற்றம் காரணமாக சென்னைக்கு பயணிக்கும் காவல்துறை அதிகாரியான ஐஸ்வர்யா ராஜேஷ், பேருந்து பயணத்தில் சுபாஷ் செல்வத்தை கண்டதும் காதல் கொள்கிறார். பிறகு இருவரும் நெருக்கமாகி காதலை வளர்துக் கொண்டிருக்கும் போது, ஐஸ்வர்யா ராஜேஷின் நெருங்கிய தோழி காணாமல் போகிறார். தோழியின் கணவர் மூலம் அவர் காணாமல் போனதை அறிந்த ஐஸ்வர்யா ராஜேஷ், தனது தோழியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட, அதன் பிறகு நடக்கும் சம்பவங்களும், அதன் மூலம் கிடைக்கும் தகவல்களும் அவரை மட்டும் இன்றி, படம் பார்ப்பவர்களையும் பேரதிர்ச்சி அடைய செய்யும் விதத்தில் உள்ளது. அது என்ன என்பது தான் ‘திட்டம் இரண்டு’ படத்தின் கதை.

 

வழக்கமான க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் படமாக இருந்தாலும், வித்தியாசமான கருவை வைத்துக் கொண்டு இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் அமைத்திருக்கும் வேகமான திரைக்கதையும், விறுவிறுப்பான காட்சிகளும் படத்தை தொய்வு இல்லாமல் நகர்த்துகிறது.

 

ஐஸ்வர்யா ராஜேஷ், காவலராக அதிரடி காட்டவில்லை என்றாலும், அழகாக இருக்கிறார். தனது அளவான நடிப்பு மூலம் கொடுத்த கதாப்பாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

 

ஐஸ்வர்யா ராஜேஷின் காதலராக நடித்திருக்கும் சுபாஷ் செல்வத்தின் வேடம் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் இருக்க, ஐஸ்வர்யா ராஜேஷின் தோழியாக நடித்திருக்கும் அனன்யா ராம்பிரசாத்தின் வேடம் பேரதிர்ச்சியளிக்கும் விதத்தில் இருக்கிறது. இருவரும் தங்களது கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற உருவ ஒற்றுமையுடன் இருப்பது, க்ளைமாக்ஸில் இயக்குநர் வைத்திருக்கும் திருப்புமுனைக்கு பலம் சேர்க்கிறது.

 

பாவல் நகீதனின் வேடம் சிறியதாக இருந்தாலும், படத்தின் திருப்புமுனையாக இருக்கிறது. எந்த வேடமாக இருந்தாலும் அதில் கச்சிதமாக தன்னை பொருத்திக் கொள்ளும் பாவல் நவகீதன், குறைவான காட்சிகளில் வந்தாலும், தனது நிறைவான நடிப்பு மூலம் மனதில் நிற்கிறார்.

 

ஜீவா ரவி, கோகுல் ஆனந்த், முரளி ராதாகிருஷ்ணன் ஆகியோரின் கதாப்பாத்திரம் சிறியதாக இருந்தாலும், கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக உள்ளது.

 

கோகுல் பெனாயின் ஒளிப்பதிவும், சதிஷ் ரகுநாதனின் இசையும் எளிமையாக இருந்தாலும், கதாப்பாத்திரங்களைப் போல், காட்சிகளுடனே பயணித்துள்ளது.

 

படத்தொகுப்பாளர் சி.எஸ்.பிரேம்குமார், இயக்குநர் சொல்ல நினைத்ததை எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் படம் பார்ப்பவர்களிடம் கொண்டு சேர்த்ததோடு, யூகிக்க முடியாதபடி காட்சிளை கச்சிதமாக தொகுத்திருக்கிறார்.

 

சில காட்சிகள் லாஜிக் இல்லாதவைகளாகவும், முழுமை பெறாதது போல் இருப்பது படத்திற்கு சற்று பலவீனமாக இருந்தாலும், படத்தின் வேகம் அதை சமாளித்து ரசிக்க வைத்துவிடுகிறது.

 

வேகமான திரைக்கதை மற்றும் சுவாரஸ்யமான காட்சிகள் மூலம் அடுத்து என்ன நடக்கும்? என்ற கேள்வியை படம் முழுவதுமே நம்மை கேட்க வைத்திருக்கும் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், க்ளைமாக்ஸில் வைத்திருக்கும் திருப்புமுனை எதிர்ப்பார்க்காத ஒன்றாக இருப்பதோடு, யூகிக்க்க முடியாதபடியும் உள்ளது.

 

மொத்தத்தில், ‘திட்டம் இரண்டு’ விறுவிறுப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக மட்டும் இன்றி வித்தியாசமான படமாகவும் உள்ளது.

 

ரேட்டிங் 3.5/5