Latest News :

கசட தபற விமர்சனம்

c8066fa1954d377b47ba8a132a269ba2.jpg

Casting : Venkat Prabhu, Sundeep Kishan, Harish Kalyan, Santhanu, Prem Ji, Rejina Cassendra, Priya Bhavani Shankar, Sija Rose

Directed By : Chimbudevan

Music By : Yuvan Shankar Raja, Santhosh Narayanan, Ghibran, Premji, Sam CS, Sean Roland

Produced By : Venkat Prabhu

 

ஒன்றுக்கும் மேற்பட்ட வெவ்வேறு கரு கொண்ட கதைகளை ஒரே களத்தில் பயணிக்கும் திரைப்படங்களை ஹைபர் லிங் ஜானர் என்று சொல்கிறார்கள். அப்படிப்பட்ட திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘கசட தபற’ எப்படி என்பதை பார்ப்போம்.

 

6 கதைகள் கொண்ட இந்த படம் இரண்டு மணி நேரம் ஓடுகிறது. ஆனால், அந்த இரண்டு மணி நேரம் எப்படி போனது என்பதே தெரியாத வகையில், ஆறு கதைகளை விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் நகர்த்தி செல்கிறார் இயக்குநர் சிம்புதேவன்.

 

பிரேம்ஜி - ரெஜினா கசண்ட்ரா முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் கதையோடு படம் தொடங்குகிறது. பிரேம்ஜி கதையின் நாயகன், அவருக்கு ஜோடி ரெஜினா என்றதும் நம் புருவம் சற்று உயரத்தொடங்கினாலும், பிரேம்ஜியின் நடிப்பும் அக்கதையில் வைக்கப்பட்டிருக்கும் திருப்புமுனையும், சபாஷ் சொல்ல வைக்கிறது. முதல் கதை தான் இப்படி என்றால், இரண்டாவது கதையான சாந்தனு பாக்யராஜ் - சம்பத் நடித்திருக்கும் கதையிலும் எதிர்ப்பார்க்காத திருப்புமுனை, யூகிக்க முடியாத முடிவு, என்று அடுத்தடுத்து வரும் 6 கதைகளிலும் இயக்குநர் வைத்திருக்கும் ட்விஸ்ட் மற்றும் க்ளைமாக்ஸ் படத்தின் சிறப்பம்சம் என்றே சொல்லலாம்.

 

ஆறு கதைகளில் நடித்திருக்கும் அத்தனை நடிகர்களும் மனதில் நிற்கிறார்கள். ஒரு கதையின் நாயகியாக, சிறுவனுக்கு அம்மாவாக நடித்திருக்கும் விஜயலட்சுமி, நடிப்பில் அதிரடி காட்டியிருக்கிறார். தனது கதாப்பாத்திரத்திற்கு தேவையான கச்சிதமான நடிப்பை கொடுத்திருப்பவர், அந்த கதாப்பாத்திரத்திற்காக ஒரு நடிகையை தாண்டிய உழைப்பையும் கொடுத்திருக்கிறார். அதுவும் அந்த சண்டைக்காட்சியில், படம் பார்ப்பவர்களே பதறும் அளவுக்கு நடித்திருக்கிறார்.

 

இயக்குநர் வெங்கட் பிரபு பல படங்களில் நடித்திருந்தாலும், இந்த படத்தில் ஒரு நடிகராக தனி முத்திரை பெறுகிறார். மூன்று குழந்தைகளுக்கு அப்பாவாக, ஒரு சராசரியான ஏழை குடும்ப தலைவன் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் அவர், தனது அப்பாவித்தனத்தால் தூக்கு தண்டனை கைதியாகி, குடும்பத்தை நினைத்து வாடும்போதும், இறுதியில் தூக்கு மேடைக்கு போகும் போது, வெளிப்படுத்தும் நடிப்பில் நம்மை கலங்கடித்து வருகிறார். அவர் இறக்க கூடாது, அவர் தண்டனையில் இருந்து விடுபட வேண்டும், என்று படம் பார்ப்பவர்கள் அத்தனை பேரும் நினைப்பதோடு, கண்கலங்க வைக்கும் விதத்திலும் அவர் நடிப்பு சிறப்போ...சிறப்பு.

 

குழந்தைத்தனமான சாந்தனுவால் இந்த கதாப்பாத்திரத்திலும் இப்படியும் நடிக்க முடியும், என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு கதாப்பாத்திரம், அதை மிக சிறப்பாகவே கையாண்டிருகிறார் சாந்தனு. அவருடைய அப்பாவாக நடித்திருக்கும் சம்பத் டிரைலர் மேட் ரோல், என்று சொல்லும் விதத்தில் நடித்திருக்கிறார்.

 

மற்ற கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் சந்திப் கிஷன், ஹரிஸ் கல்யாண் ஆகியோரும் தங்களது நடிப்பு மூலம் தங்களது கதையை மக்களிடம் கொண்டு சேர்த்து விட, அனைத்து கதைகளிலும் சிறு சிறு வேடங்களில் நடித்தவர்கள் கூட ரசிகர்கள் மனதில் நிற்கும் வகையில், அவர்களுடைய கதாப்பாத்திரம் கதைக்கு முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக செண்ட்ராயன், பசங்க சிவக்குமார், பிருத்வி பாண்டியராஜ், ஆகாஷ் அரவிந்த் ஆகியோரது கதாப்பாத்திரங்களை சொல்லலாம்.

 

ஆறு கதைகளுக்கும் ஆறு இசையமைப்பாளர்கள், ஆறு ஒளிப்பதிவாளர்கள், ஆறு  படத்தொகுப்பாளர்கள் பணியாற்றியிருந்தாலும், தரம் பிரிக்க முடியாத வகையில் அத்தனை பேருடைய பணியும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. ஒளிப்பதிவு, இசை மற்றும் படத்தொகுப்பு ஆகிய மூன்றையும் பிரித்து பார்க்க முடியாதபடி, கதையுடனே பயணிப்பது படத்திற்கு கூடுதல் பலம்.

 

இப்படிப்பட்ட கதைகளை சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்வது பெரிதல்ல, இயக்குநர் என்ன சொல்ல வருகிறார், என்பது படம் பார்ப்பவர்களுக்கு புரிய வேண்டும். அது தான் இதுபோன்ற ஜானர் படங்களுக்கு மிகப்பெரிய சவால். அந்த சவாலை இயக்குநர் சிம்புதேவன் மிக சாமர்த்தியமாக வென்றிருக்கிறார்.

 

படத்தின் ஆரம்பத்தில், யூகி சேது கடவுள் கிருஷ்ணராக பிரேம்ஜியுடன் பேசும் போது, நமக்கு சட்டென்று சிம்புதேவனின் பழைய படம் நினைவுக்கு வந்தாலும், அடுத்தடுத்த காட்சிகளில் “அது இதுவல்ல, இது புதிது” என்பதை புரிய வைத்திருப்பதோடு, அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலையும் நம் மனதில் ஏற்படுத்துகிறார்.

 

அப்படியானால் படத்தில் குறையே இல்லையா? என்ற கேள்வி எழும். சில குறைகள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், எத்தனை குறைகள் இருந்தாலும், அவை நமக்கு தெரியாத வகையில் இயக்குநர் சிம்புதேவன் திரைக்கதையையும், காட்சிகளையும் வடிவமைத்திருக்கிறார். குறிப்பாக சர்ச்சையான கருத்துக்களை கூட மேலோட்டமாக சொல்வது போல், கையாண்டு மிக ஆழமாக சொல்லியிருப்பவர், வசனங்களில் வைத்த கூர்மை மற்றும் கச்சிதத்தை காட்சிகளிலும் வைத்திருப்பது படத்திற்கு கூடுதல் பலம்.

 

படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை, படம் பார்ப்பவர்களின் கவனம் சிதறாமல் 6 கதைகளுடனும்,  கதாப்பாத்திரங்களுடனும், பயணிக்க வைத்திருக்கும் இயக்குநர் சிம்புதேவனையும், அவருடைய இந்த ‘கசட தபற’ படத்தையும் கைதட்டி வரவேற்கலாம்.

 

ரேட்டிங் 4.5/5