Latest News :

‘சிவகுமாரின் சபதம்’ விமர்சனம்

21141080204e32072e5b1a73bfa10804.jpg

Casting : Hip Hop Aadhi, Madhuri, Prank Raghul, Kathir, Vijay Karthik, Ranjana Natchiyar

Directed By : Hip Hop Aadhi

Music By : Hiphop Aadhi

Produced By : Hiphop Aadhi, Senthil Thyagarajan, Arjun Thyagarajan

 

காஞ்சிபுரத்தை சேர்ந்த பாரம்பரிய பட்டு நெசவாளரின் பேரனான நாயகன் ஹிப் ஹாப் ஆதி, ஒரு சபதம் போடுகிறார். அந்த சபதத்தில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா, யாரிடம் எதற்காக சபதம் போடுகிறார், என்பது தான் ‘சிவகுமாரின் சபதம்’.

 

பட்டு நெசவாளர்களின் இன்னல்களையும், இயலாமையையும் சொல்ல முயற்சித்திருக்கும் ஆதி, அதை ரொம்ப சீரியஸாக சொல்லாமல், இளைஞர்களை கவர வேண்டும் என்பதற்காக ஜாலியாக சொல்லியிருக்கிறார்.

 

ஹிப் ஹாப் ஆதி அலட்டல் இல்லாமல் ரொம்ப அசால்டாக நடித்திருக்கிறார். இளைஞர்களை ஈர்க்க வேண்டும், என்பதை மனதில் வைத்து லோக்கலாக நடிக்க ஆதி முயற்சித்திருந்தாலும், அது அவருக்கு சுத்தமாக பொருந்தவில்லை. 

 

நாயகி மாதுரிக்கு கமர்ஷியல் கதாநாயகி வேடம். ஹீரோவை காதலிக்கும் ஹீரோயினாக வலம் வரும் அவர், ஆதியின் துள்ளல் நடிப்புக்கு ஈடு கொடுக்க முடியாமல் பல இடங்களில் திணறுகிறார்.

 

ஆதியின் தாத்தாவாக நடித்திருக்கும் புதுவரவு இளங்கோகுமணன் கொடுத்த வேலை கச்சிதமாக செய்திருக்கிறார்.

 

ஆதியின் சித்தப்பாவாக நடித்திருக்கும் பிராங்க் ராகுல், காமெடி மற்றும் செண்டிமெண்ட் என்று கலந்துக்கட்டி நடித்தாலும், அனைத்திலும் ஏதோ குறை இருப்பது போலவே உணர முடிகிறது.

 

ஆதியின் நண்பராக வரும் ஆதித்யா கதிரின் வசனங்கள் சில இடங்களில் சிரிக்க வைக்கிறது.

 

வில்லனாக நடித்திருக்கும் விஜய் கார்த்திக், அவருடைய தங்கையாக நடித்திருக்கும் ரஞ்சனா நாஞ்சியார், பொருத்தமான தேர்வு.

 

அர்ஜுன் ராஜாவின் ஒளிப்பதிவு படத்திற்கு ஏற்ப பயணித்துள்ளது. ஹிப் ஹாப் ஆதியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருப்பதோடு, தத்துவங்களால் நிறைந்தும் இருக்கிறது.

 

மிக உணர்வுப்பூர்வமான கதைக்களத்தை எடுத்துக் கொண்டாலும், அதை காதல், காமெடி, ஆக்‌ஷன், சோகம் என அனைத்தையும் கலந்து ஒரு சாதாரணமான மசாலாப்படமாக கொடுத்தாலே போதும், என்று நினைத்து இயக்கியிருக்கும் இயக்குநர் ஆதி, பட்டு புடவைகள் குறித்து பல விவரங்களை பேசியிருக்கிறார். அப்படியே, பட்டு புடவைகளை உற்பத்தி செய்யும் நெசவாளர்களை விட, இடைத்தரகர்கள் தான் வளமாக இருக்கிறார்கள், என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

 

படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு ஆதி அடிக்கடி சபதம் போடுவதோடு, அவருடைய தாத்தா உள்ளிட்ட படத்தின் பல கதாப்பாத்திரங்கள் சபதம் போடுகிறார்கள். ஆனால், அத்தனை சபதங்களும் சப்பென்று போகுமளவுக்கு இறுதியில் ஒரு மெசஜை சொல்லி படத்தை முடிப்பது, உப்பு சப்பில்லாமல் உணவை சாப்பிட்டது போல் இருக்கிறது.

 

ரேட்டிங் 2.5/5