Latest News :

’லேபர்’ விமர்சனம்

84cd6e786c6c659cc189a251b6d57406.jpg

Casting : Muthu, Saranya Ravichandran, Arumugamurugan, Jeeva Subramanian

Directed By : Sathiyapathy

Music By : Nijil Dinakaran

Produced By : Royal Fortuna Creations

 

சென்னையில் வாழும் கட்டிட தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் சினிமாத்தனம் இன்றி மிக எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருப்பது தான் ‘லேபர்’.

 

சென்னையில் வாழும் கட்டிட தொழிலாளர்கள் தங்களது தொழிலில் சந்திக்கும் பிரச்சனைகளோடு, அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் வாழ்க்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை உள்ளது உள்ளபடியே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

 

கதையின் நாயகனாக நடித்திருக்கும் முத்து புதுமுகம் என்றாலும் ஒரு கட்டிட தொழிலாளியாக மிக இயல்பாக நடித்திருக்கிறார். 

 

முத்துவின் மனைவி கதாப்பாத்திரத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் சரண்யா ரவிச்சந்திரன், தனது நடிப்பு மூலம் முழு படத்திற்கும் பெரிய முகவரியை கொடுத்திருக்கிறார். மது குடித்துவிட்டு வரும் கணவனிடம் சண்டையிடுவது, கட்டிட பணி செய்வது போன்ற காட்சிகளில் இயல்பாக நடித்திருக்கிறார்.

 

பாண்டியார் என்ற கதாப்பாத்திரத்தில் மேஸ்திரியாக நடித்திருக்கும் ஆறுமுகமுருகன், திருநங்கை தீவா சுப்ரமணியன், பரோஸ்கான், கயல் என படத்தில் வருபவர்கள் அனைவரும் கட்டிட தொழிலாளர்களின் வாழ்க்கையை நம் கண்முன் நிறுத்துகிறார்கள்.

 

கதைக்கு ஏற்ற இசையை கொடுத்திருக்கும் இசையமைப்பாளர் நிஜில் தினகரன், சூழலின் ஒலிகலை மட்டுமே பின்னணி இசையாக கொடுத்து படத்தை கவனிக்க வைக்கிறார்.

 

கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் சத்தியபதி, கட்டிட தொழிலாளர்களின் வாழ்க்கையில் இருக்கும் வலிகளை எதார்த்தமாக பதிவு செய்ய முயற்சித்திருப்பதோடு, மது பழக்கத்தால் கூலித்தொழிலாளர்கள் பாதிக்கப்படுவது, கூலித்தொழிலாளர்களை குறி வைத்து நடத்தப்படும் பண மோசடி உள்ளிட்ட சமூக பிரச்சனைகளையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

 

இயக்குநர் சத்தியபதி தான் சொல்ல வந்ததை சினிமாத்தனம் இன்றி சொல்ல நினைத்திருப்பது வரவேற்கத்தக்கது தான் என்றாலும், காட்சி அமைப்புகளிலும், கதாப்பாத்திரங்களிடம் வேலை வாங்குவதிலும் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் படம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்.

 

மொத்தத்தில், ‘லேபர்’ தொழிலாளர்களின் வலி.

 

ரேட்டிங் 2.5/5