Latest News :

’சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை’ விமர்சனம்

d1d84f20a4aed74ef7015589b39c907f.jpg

Casting : Rudhraa, Subiksha, Vinod Sagar, Subbulakshmi

Directed By : Mhesh Padmanaban

Music By : Rajesh Apukuttan

Produced By : Nufais Rahman

 

தனது துறையில் சாதிப்பதை காட்டிலும் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வதே போதும் என்ற மனநிலையுடன் இருக்கும் நாயகன் ருத்ராவுக்கும், தனது துறையில் சாதனைப் படைப்பதற்காக வளைந்து கொடுத்து போனாலும் பரவாயில்லை என்ற மனநிலையுடன் இருக்கும் நாயகி சுபிக்‌ஷாவுக்கும் இடையே காதல் ஏற்படுகிறது. ஒரே துறையில் பயணிக்கும் இவர்களது காதலுக்கு இவர்களது மனநிலையே எதிரியாகிறது. இறுதியில் காதல் கைகூடியதா இல்லையா என்பதை இனிமையான காதல் அனுபவத்தோடு சொலியிருப்பது தான் ‘சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை’ படத்தின் கதை.

 

ஒரே துறையில் இருப்பவர்கள் காதலர்கள் ஆன பிறகு, அவர்கள் எப்படிப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை சொல்வதோடு அதற்கான தீர்வாக அழுத்தமான மெசஜ் ஒன்றை காதல் கவிதையை போல் அழகாக சொல்லியிருக்கிறார்கள்.

 

அறிமுக நாயகன் ருத்ரா, முதல் படத்திலேயே சொந்த குரலில் டப்பிங் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. அவரது தமிழ் உச்சரிப்பு மம்மூட்டியின் படம் பார்க்கும் உணர்வை கொடுக்கிறது. வெகுளித்தனமான கிராமத்து இளைஞராக நடிப்பில் கவர்கிறார். தனது காதலி மற்றவர்களுடன் சகஜமாக பழகுவதை பார்த்து வேதனைப்படும் காட்சிகளில் காதல் உணர்வுகளையும், கிராமத்து இளைஞர்களின் மனநிலையையும் அழகாக பிரதிபலிக்கிறார். நடிப்பில் கூடுதல் கவனம் செலுத்தினால் நிச்சயம் நல்ல எதிர்காலம் உண்டு.

 

கமர்ஷியல் திரைப்படங்களில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் என்பது மிக அரிதான ஒன்றாகிவிட்ட நிலையில், இந்த படத்தில் சுபிக்‌ஷாவுக்கு மிக அழுத்தமான கதாப்பாத்திரம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும், அதை எதிர்கொள்ளும் முறைகளையும் மிக நேர்த்தியாக தனது நடிப்பில் கையாண்டிருக்கும் சுபிக்‌ஷா, தனது மனதில் இருக்கும் காதலை வெளிப்படுத்த முடியாமலும், தனது லட்சியத்தில் வெற்றி பெறும் முயற்சியை தனது காதலனுக்கு புரிய வைக்க முடியாமல் தவிக்கும் காட்சிகளில் அசத்தியிருக்கிறார்.

 

குணச்சித்திர நடிகராக கவனம் பெற்ற ‘ராட்சசன்’ வினோத் சாகர், இந்த படத்தில் காமெடி நடிகராக கவனம் ஈர்த்திருக்கிறார். ’அம்மணி’ சுப்புலக்‌ஷ்மி பாட்டி, அமெரிக்க மாப்பிள்ளை, ருத்ராவின் அப்பாவாக நடித்திருப்பவர் என படத்தில் நடித்த அனைவரும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.

 

ராஜேஷ் அப்புக்குட்டனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாக இருந்தாலும், “விழியினேலே...” பாடல் திரும்ப திரும்ப கேட்கும் ரகம். பின்னணி இசையும் நிறைவு.

 

ஒளிப்பதிவாளர் பிஜு விஸ்வநாதன் இயற்கையின் அழகுக்கு கூடுதல் அழகு சேர்க்கும் வகையில் காட்சிகளை படமாக்கியிருக்கிறார்.

 

காலம் காலமாக காதல் கதைகள் சொல்லப்பட்டு வந்தாலும், அவற்றை வித்தியாசத்தோடு சொல்பவர்கள் நிச்சயம் ஜெயிப்பார்கள், அந்த வகையில் இயக்குநர் மகேஷ் பத்மநாபன் காதல் கதையோடு காதலர்களுக்கு நல்ல மெசஜ் ஒன்றையும் சொல்லி, திரைக்கதையை நகர்த்தி செல்வது படத்திற்கு சுவாரஸ்யத்தை சேர்த்துள்ளது.

 

காதலர்கள் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் படத்தில் இருந்தாலும், அவற்றை நாகரீகமாக கையாண்டிருப்பதோடு, காதல் என்பது காதலர்கள் ஒன்று சேர்வது மட்டும் அல்ல, நினைவுகளோடு வாழ்வதும் காதல் தான், என்பதை உணர்த்தும் வகையில் காட்சிகளை கையாண்டு படத்தை ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

 

சில இடங்களில் சிறு சிறு குறைகள் இருந்தாலும், முழுவதுமாக ஒரு நல்ல காதல் கதையை அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில் நாகரீகமான முறையில் கொடுத்திருக்கிறார்கள்.

 

மொத்தத்தில், ‘சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை’ திகிட்டாத காதலோடு, காதலர்களை சிந்திக்கவும் வைக்கிறது.

 

ரேட்டிங் 3.5/5