Latest News :

’வேலன்’ விமர்சனம்

a798ba827a8c4046ac7ec03e74e71264.jpg

Casting : Mugen Rao, Meenakshi Govindarajan, Prabhu, Soori, Thambi Ramaiah, Harish Peradi

Directed By : Kevin

Music By : Govind Vasantha

Produced By : Skyman Films International

 

ஊர் பெரிய மனிதரான பிரபுவின் மகனான நாயகன் முகேன், 12ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்து விடுகிறார். அதனால் அவரை வெறுக்கும் பிரபு அவரிடம் பேசாமல் இருக்கிறார். தனது தந்தையிடம் மீண்டும் நல்ல பெயர் எடுப்பதற்காக பல வருட போராட்டங்களுக்குப் பிறகு பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் சேரும் முகேனுக்கும், நாயகி மீனாட்சி கோவிந்தராஜனுக்கும் இடையே காதல் மலர்கிறது. இதற்கிடையே, முகேனின் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட குழப்பத்தால், அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் பிரபு திருமணம் நிச்சயம் செய்துவிடுகிறார். அதே சமயம், பிரபுவின் எதிரி அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி அவரை அவமானப்படுத்த முயற்சிக்க, குறித்த தேதியில் திருமணத்தை நடத்திக்காட்டுவேன், என்று பிரபு சபதமிடுகிறார். 

 

அப்பாவின் வாக்கை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் முகேன், அப்பாவின் லட்சத்தியத்திற்காக காதலை நிராகரித்தாரா அல்லது காதலுக்காக மீண்டும் அப்பா வெறுக்கும் மகன் ஆனாரா, என்பதே படத்தின் மீதிக்கதை.

 

அறிமுக நாயகன் முகேன் அமர்க்களமாக இருக்கிறார், நடிப்பிலும் அசத்துகிறார். சண்டைக்காட்சிகள், நடனம், நகைச்சுவை மற்றும் செண்டிமெண்ட் காட்சிகள் என அனைத்திலும் அசத்தி ஆல் ரவுண்டர் என்பதை நிரூபித்திருக்கும் முகேன், நல்ல கதைகளை தேர்வு செய்தால் கோலிவுட்டின் தவிர்க்க முடியாத ஹீரோக்கள் பட்டியலில் இடம் பிடிப்பது உறுதி.

 

கல்லூரி மாணவி கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தும் நாயகி மீனாட்சி கோவிந்தராஜன், பாவாடை தாவணியாகட்டும், மாடன் உடையாகட்டும் இரண்டிலும் குடும்ப பாங்கான முகத்தோடும், நிறைவான நடிப்போடும் வலம் வருகிறார்.

 

நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் பிரபுவின் அனுபவமான நடிப்பு கதாப்பாத்திரத்திற்கு பலம் சேர்த்துள்ளது. சூரியின் காமெடி காட்சிகள் சிரிக்க வைக்கிறது. குறிப்பாக தம்பி ராமையாவின் நடவடிக்கையை கலாய்க்கும் சூரியின் வசனங்கள் சிரிப்பு சரவெடி.

 

ஹரீஷ் பெராடி, ப்ராங்ஸ்டர் ராகுல், மரியா வின்செண்ட், பிரிகிடா என மற்ற கதாப்பாத்திரங்களில் நடித்தவர்களும் கிடைக்கும் வாய்ப்புகளில் ரசிகர்களிடம் கவனம் பெறுகிறார்கள்.

 

கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு காட்சிகளையும், கதாப்பாத்திரங்களையும் அழகாக காட்டியிருக்கிறது. கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கமர்ஷியல் படத்திற்கு ஏற்றவாறு பயணித்துள்ளது.

 

கதாநாயகனின் காதலையும், அதை தொடர்ந்து வரும் குழப்பங்களையும் மையப்படுத்திய கதையம்சம் கொண்ட பல கமர்ஷியல் படங்களை கோலிவுட் ரசிகர்கள் பார்த்திருந்தாலும், ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையிலும், பார்க்கும் வகையிலும் திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் கெவின்.

 

எந்தவிதமான திருப்புமுனையோ அல்லது புதுமையான காட்சிகளும் படத்தில் இல்லை என்றாலும், வழக்கமான காமெடி காட்சிகள் சிரிக்கும்படி இருப்பதால் படத்தை ரசிக்க முடிகிறது.

 

மொத்தத்தில், ‘வேலன்’ தப்பித்தான்.

 

ரேட்டிங் 3/5