Latest News :

’முதல் நீ முடிவும் நீ’ விமர்சனம்

1310c4dbbfb3b324db15b81b2be27632.jpg

Casting : Amritha Mandarin, Purva Raghunath, Harish.K, Kishen Das, Sharan Kumar, Rahul Kannan, Manjunath, Naushad, Meetha Raghunath, Varun Rajan, Sacchin Nachiappan, Goutham Raj CSV, Naren, Harini Ramesh Krishnan

Directed By : Darbuka Siva

Music By : Darbuka Siva

Produced By : Super Talkies - Sameer Bharat Ram

 

பள்ளி பருவத்தில் வரும் காதல் இளம் வயதில் வரும் ஈர்ப்பு மட்டுமே, அது உண்மையான காதல் அல்ல, என்று பல திரைப்படங்கள் கருத்து பேசியிருக்கிறது. ஆனால், அந்த முதல் காதல் தோல்வியடைவதால் எத்தனை பேருடைய வாழ்க்கை முழுமை பெறாமல் போகிறது, என்பதை இளமை துள்ளலோடும், கவிதையின் அழகியலோடும் சொல்வது தான் ‘முதலும் நீ முடிவும் நீ’.

 

பள்ளி பருவ வாழ்க்கை, அதில் வரும் காதல் மற்றும் மோதல், பிரிவு உள்ளிட்ட அனைத்தையும் மிக இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் படம் பார்ப்பவர்களை தங்களின் பள்ளி பருவத்திற்கு திரும்ப அழைத்துச் சென்றுவிடுகிறார்.

 

பள்ளி மாணவர்களாகவும், மாணவிகளாகவும் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, நடிப்பிலும் அசத்தியிருக்கிறார்கள். பள்ளி மாணவர்களிடம் இருக்கும் ஆர்வம், மோதல், குறும்புத்தனம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் மிக சரியான அளவில் வெளிக்காட்டி கைதட்டல் பெருகிறார்கள்.

 

முதன்மை கதாப்பாத்திரமாக நடித்திருக்கும் கிஷன் தாஸ் மற்றும் மீதா ரகுநாத் ஜோடி காதலால் கணிவதும், இசையால் உருகுவதும் என்று காட்சிகளின் சுவாரஸ்யத்தை கூட்டுகிறது. முகத்தால் மட்டும் இன்றி குரலாலும் வசீகரிக்கும் மீதாவுக்கு கோலிவுட்டில் நல்ல எதிர்காலம் உண்டு. அதிலும், அவர் கொடுக்கும் அந்த நீண்ட ஆங்கில முத்தம், அடங்கப்பா.... ரகம்.

 

சைனீஷ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ஹரிஷ்.கே-வின் உடல் மொழி மற்றும் வசன உச்சரிப்பு ஒட்டு மொத்த  திரையரங்கையே குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கிறது. புரவ் ரகுநாத், வருண் நாதன், கவுதம் ராஜ் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் மனதில் நிற்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.

 

சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, பள்ளிப் பருவ கதாப்பாத்திரங்களை இரண்டாம் பாதி படத்தில் காட்டும் போது மாறுபட்ட விதத்தில் காட்டுவதற்கு ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறது.

 

கதை எழுதி இயக்கியிருக்கும் தர்புகா சிவா தான் இசையும் அமைத்திருக்கிறார். “முதலும் நீ...முடிவும் நீ...” பாடல் ரசிக்க வைப்பதோடு எங்கேயோ கேட்டது போலவும் இருக்கிறது. இதெல்லாம் அரசியல்ல சகஜம் தான் என்றாலும் இதுபோன்ற காதல் கதைகளுக்கு தனித்துவமான இசையை கொடுத்திருந்தால் படம் சற்று கூடுதல் கவனம் பெற்றிருக்கும்.

 

இசையமைப்பாளராக சிறு தடுமாற்றத்தை சந்தித்த தர்புகா சிவா, இயக்குநராக எந்தவித தடுமாற்றமும் இன்றி, தான் சொல்லவந்ததை நேர்த்தியாகவும், ரசிக்கும்படியும் சொல்லியிருக்கிறார். அதே சமயம், பள்ளி பருவத்தில் வரும் காதலை நாகரீகமாக கையாண்டிருப்பவர், அந்த காதலின் வீரியத்தையும், அதன் தோல்வியால் ஏற்படும் வலியையும் இரண்டாம் பாதியில் மிக அழுத்தமாக பதிவு செய்திருப்பது பாராட்டத்தக்கது.

 

மொத்தத்தில், ‘முதலும் நீ முடிவும் நீ’ தேர்ச்சி

 

ரேட்டிங் 3/5