Latest News :

’மகான்’ விமர்சனம்

46a165cf2dd12a32fadba8a5ae32b47b.jpg

Casting : Vikram, Dhruv Vikram, Bobby Simha, Simran, Sananth

Directed By : Karthik Subbaraj

Music By : Santhosh Narayanan

Produced By : Seven Screen Studio - S.S. Lalit Kumar

 

சுதந்திர போராட்ட வீரரான நரேன், தன் மகன் விக்ரமை காந்தியவாதியாக வளர்க்க விரும்புகிறார். அப்பாவின் விருப்பப்படி காந்தியவாதியாக வளர்ந்தாலும், தனது விருப்பப்படி ஒரு நாளாவது வாழ வேண்டும் என்று ஆசைப்படும் விக்ரமுக்கு தனது 40 வயதில் அந்த சந்தர்ப்பம் அமைகிறது. ஆனால், அதுவே விக்ரமின் வாழ்க்கையை புரட்டிப்போடும் நாளாகவும் அமைந்துவிடுகிறது.  அந்த நாளில் அப்படி என்ன நடந்தது, அதன் மூலம் விக்ரமின் வாழ்வில் நடக்கும் மிகப்பெரிய மாற்றமும், அதனை தொடர்ந்து எழும் பிரச்சனைகளும் தான் படத்தின் மீதிக்கதை.

 

அப்பா - மகனுக்கு இடையே நடக்கும் சண்டை, இதில் அப்பா கெட்டவரா? அல்லது மகன் கெட்டவரா?, இவர்களை பகடைகாயாக பயன்படுத்தி ஆதாயம் தேடுபவர்கள் கெட்டவர்களா? போன்ற கேள்விகளுக்கு தனது சிறப்பான மேக்கிங் மூலம் விடை அளித்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

 

பல கெட்டப்புகளில் வலம் வரும் விக்ரம் அனத்திலும் தனது அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காந்தியவாதியாக வந்தாலும் சரி, சாராய சாம்ராஜ்யத்தின் தலைவனாக வந்தாலும் சரி, அனைத்து காட்சிகளிலும் தனது நடிப்பால் அசரடித்திருப்பவர் ஹாலிவுட் சினிமா நாயகனை போல் படம் முழுவதும் காட்சியளிக்கிறார்.

 

அப்பாவுக்கு தப்பாமல் பிறந்திருக்கிறார் துருவ் விக்ரம். படத்திலும் விக்ரமின் மகனாக நடித்திருப்பவர், தனது அப்பாவின் சாம்ராஜ்யத்தை வீழ்த்தும் வெறிக்கொண்ட கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். நடிப்பில் மட்டும் இன்றி வசன உச்சரிப்பிலும் வெறித்தனத்தை வெளிப்படுத்தி கவனம் பெறுகிறார். எப்படிப்பட்ட வேடமாக இருந்தாலும் அதை சர்வசாதாரணமாக கையாளும் சாதூரியம் படைத்த நடிகர் என்ற நம்பிக்கையை கொடுக்கிறது துருவ் விக்ரமின் தோற்றமும் நடிப்பும்.

 

விக்ரமின் நண்பராக நடித்திருக்கும் பாபி சிம்ஹாவும் பல கெட்டப்புகளில், பலவிதமாக நடித்து பாராட்டு பெறுகிறார். படம் முழுவதும் வரும் பாபி சிம்ஹா, பல இடங்களில் விக்ரமுடன் போட்டி போட்டு நடித்திருக்கிறார்.

 

படத்தின் முக்கியமான வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் முத்துக்குமாரின் அசட்டு நடிப்பும், அமர்க்களமான வில்லத்தனமும் சபாஷ் சொல்ல வைக்கிறது. 

 

விக்ரமின் மனைவியாக நடித்திருக்கும் சிம்ரனுக்கு சிறிய வேடம் என்றாலும் நிறைவாக நடித்திருக்கிறார். சிம்ரனின் தந்தையாக நடித்திருக்கும் கஜராஜ், பாபி சிம்ஹாவின் மகனாக நடித்திருக்கும் சனத், தீபக் பரமேஸ்வர் என அனைத்து நடிகர்களும் குறையில்லாமல் நடித்திருக்கிறார்கள்.

 

பல்வேறு காலக்கட்டங்களை கச்சிதமாக படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, ஒவ்வொரு காலக்கட்டங்களிலும் கதாப்பாத்திரங்களின் மாற்றங்களோடு கதைக்களத்தின் மாற்றங்களையும் துல்லியமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

 

சந்தோஷ் நாராயணின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. படத்தின் நீளம் அதிகமாக இருந்தாலும், அதை ரசிக்கும்படி படத்தொகுப்பு செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன்.

 

காந்தியத்தை ஒரே கண்ணோட்டத்தில் மட்டுமே பலர் பார்ப்பதுண்டு. ஆனால், அதை பல கண்ணோட்டத்தில் பார்த்து, அதை மாஸ் மற்றும் கமர்ஷியல் ஜானர் திரைக்கதையாக்கி ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

 

விக்ரமின் அதிரடி ஆட்டம் மூலம் முதல் பாதி படத்தை பரபரப்பாக நகர்த்தி செல்லும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இரண்டாம் பாதியில் துருவ் விக்ரமின் வெறித்தனமான ஆட்டம் மூலம் படத்தை ஜெட் வேகத்தில் நகர்த்துகிறார். இடைவேளையின் போதே அப்பா - மகன் இடையே நடக்கும் சண்டை தான் மீதிப்படம் என்று தெரிந்தாலும், கிளைமாக்ஸில் எதிர்ப்பார்க்காத ஒரு ட்விஸ்டை வைத்து, இறுதியில் யார் உண்மையான மகான் என்பதை சொல்லும் இடத்தில், கை தட்டல் சத்தம் காதை பிளக்கிறது.

 

மொத்தத்தில், ‘மகான்’ சியான் ரசிகர்கள் மட்டும் அல்ல சினிமா ரசிகர்கள் அனைவரும் கொண்டாடும் மிகப்பெரிய மாஸ் சினிமா.

 

ரேட்டிங் 3.5/5