Latest News :

’இடியட்’ விமர்சனம்

bf41a7b66c6a3a02af8f822badcc94be.jpg

Casting : Mirchi Siva, Nikki Galrani, Akshara Gowda, Redin Kingsly, Ravi Mariya

Directed By : Rambhala

Music By : Vikram Selva

Produced By : Screen Scene Media Entertainment - Siddharth Ravipati

 

சந்தானத்தை வைத்து ’தில்லுக்கு துட்டு’ மற்றும் ‘தில்லுக்கு துட்டு 2’ என்ற இரண்டு வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் ராம்பாலாவின் மூன்றாவது படம், நடிகர் மிர்ச்சி சிவா நடிக்கும் முதல் காமெடி பேய் படம், என்ற முத்திரையோடு வெளியாகியிருக்கும் ‘இடியட்’ எப்படி என்பதை பார்ப்போம்.

 

பேயை பார்த்து மனிதர்கள் பயப்படுவார்கள். ஆனால், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பேயை எப்படி எதிர்கொள்வார்கள் என்பது தான் படத்தோட ஒன்லைன்.

 

இன்னும் சற்று விரிவாக இந்த கதையை சொல்லலாம், ஆனால், சொல்லும் எனக்கும் தலை வலிக்கும், கேட்கும் உங்களுக்கும் தலை வலிக்கும். (அப்படினா படத்த பார்க்கரவங்களுக்கு என்ன நடக்கும், என்று யோசிக்கிறீங்களா, வேறென்ன பைத்தியம் தான் பிடிக்கும்)

 

ஆமாங்க, ஒரு சாதாரண கதையை காமெடியாக சொல்கிறேன் என்ற பேரில், பலவித குழப்பங்களோடும், பல மொக்கை காமெடியோடும் சொல்லி, நம்மை அடித்து துவைத்து காயப்போட்டு விடுகிறார்கள்.

 

நடிகர்களை பொருத்தவரை, படம் முழுவதும் காமெடியை வாரி இறைக்க வேண்டும், என்ற முயற்சியோடு நடித்திருக்கிறார்கள். ஆனால், அவர்களது முயற்சி வீணாகிவிட்டது.

 

காமெடி நடிகர்கள் எல்லாம் ஹீரோவாகி கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தில், ஹீரோவாக நடித்து வந்தாலும், காமெடி நடிகராக பார்க்கப்படும் சிவா, இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஆனால், அவர் காமெடி நடிகராக கூட பாஸ் செய்ய முடியாமல் இருப்பது, அவர் மீது பரிதாபத்தை ஏற்படுத்துகிறது. எப்போதும் போல் வசன உச்சரிப்பால் உப்பேத்தலாம் என்ற அவரது முயற்சி கூட கடைசி வரை அவருக்கு கைகொடுக்கவில்லை.

 

கமர்ஷியல் படங்களில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்காது. ஆனால், பேய் படங்களில் கதாநாயகிகளுக்கு தான் அதிகமான வேலை இருக்கும். ஆனால், இந்த படத்தில் நிக்கி கல்ராணிக்கு அப்படி எந்த வாய்ப்பும் வழங்கப்படாதது அவரது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

 

சிவாவின் அப்பாவாக நடித்திருக்கும் ஆந்தராஜ், அம்மாவாக நடித்திருக்கும் ஊர்வசி இவங்க ரெண்டு பேரும் தான் சற்று ஆறுதல் அளிக்கிறார்கள். அதிலும், ஆனந்தராஜின் முட்டாள் தனமான செயலும், பேச்சும் நம்மை அறியாமலும் சிரிக்க வைக்கிறது. 

 

ஆனந்தராஜிக்கு ஈடுகொடுக்கும் வகையில் நடிகை ஊர்வசியும் தனது பங்குக்கு காமெடியில் பங்கம் செய்கிறார். அதிலும், சிவாவை வேண்டாம் என்று கூறும் பெண்ணை, அமாவாசை பற்றி கேள்வி கேட்டு கலாய்ப்பது, அல்டிமேட் காமெடி.

 

சிங்கமுத்து, ரவி மரியா, ரெட்டின் கிங்ஸ்லி, மயில்சாமி ஆகியோர் மூலம் காமெடியை கரக்க முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், அவர்களோ சட்டியில் இருந்தால் தானே அகைப்பையில் வரும், என்பது போல் இருப்பதால், அவர்கள் வரும் காட்சிகளில் தியேட்டரில் குரட்டை சத்தம் தான் கேட்கிறது.

 

ஆவிகளாக காட்டப்படும் சிவசங்கர் மற்றும் அவரது குடும்பத்தாரை படத்தின் ஆரம்பத்தில் முக்கியமான கதாப்பாத்திரங்களாக காண்பித்து விட்டு, பிறகு அவர்களை அப்படியே வெட்டி வீசிவிடும் இயக்குநர், அக்‌ஷரா கவுடாவை நுழைத்திருப்பது கதையை ஒட்டுமொத்தமாக கெடுத்ததோடு, படம் பார்ப்பவர்களையும் குழப்பிவிடுகிறது.

 

விக்ரம் செல்வாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சுமாராகவே உள்ளது. ராஜா பட்டாச்சார்ஜியின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. மாதவனின் படத்தொகுப்பு முழு கதையையும் சிதைத்து விட்டது.

 

பொதுவாக, பேய் படம் என்றால், ஆரம்பத்தில் மிரட்டுவாங்க, பிறகு சில சஸ்பென்ஸ் வைப்பாங்க, அதன் பிறகு ஒரு பிளாஷ்பேக் வைப்பாங்க, இறுதியில் அனைத்துக்கும் தீர்வு கொடுப்பாங்க. இதை காமெடியா சொல்லும் போது, படம் முழுவதும் காமெடி காட்சிகளை வைத்து நம்மை சிரிக்க வைத்து, காமெடி படத்துல லாஜிக் எல்லாம் பார்க்க கூடாது, என்று அட்வைஸ் செய்து அனுப்பி வைத்தாலும், கதையின் போக்கு சிதையாமல் ஒரே நேர்கோட்டில் பயணிப்பதாலும், ஆடியன்ஸுக்கு கதை புரிவதாலும், திருப்தியோடு வெளியே வருவோம்.

 

இந்த பார்மட்டில் தான் இயக்குநர் ராம்பாலா, தனது முந்தைய படங்களை இயக்கி ஹிட் கொடுத்தார். ஆனால், அவருக்கு இப்போது என்ன ஆனது என்று தெரியல, ஒரு இயக்குநராக அவர் இந்த படத்தில் எங்கேயும் வேலை செய்யவில்லை, என்பது படத்தின் அனைத்து காட்சியிலும் தெரிகிறது.

 

குறிப்பாக, கதை சொன்ன விதத்தில் மிகப்பெரிய ஓட்டை இருப்பதோடு, காமெடி காட்சிகளும் எடுபடாமல் போனது, எதிர்ப்பார்ப்போடு வந்த ரசிகர்களை ஏமாற்றி விட்டது.

 

முதல் 10 அல்லது 20 நிமிட படம் தான் காமெடி, அதை தவிர்த்துவிட்டால், படம் செம கடி. கடி என்றால் சாதாரண கடியல்ல, பேயும், பைத்தியமும் சேர்ந்து கடிக்கும் மரண கடி.

 

மொத்தத்துல, ‘இடியட்’ ரசிகர்களை இடியட்ஸ்களாக்கும் படம்

 

ரேட்டிங் 2/5