Latest News :

’கதிர்’ விமர்சனம்

2db9b11137c9c36e4f194eaaf19dd050.jpg

Casting : Venkatesh, Santhosh Pradap, Rajini Sandy, Bhavya Trikha

Directed By : Dinesh Pazhanivel

Music By : Prashanth Pillai

Produced By : Dhuvaraka Studios

 

ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையில் எதாவது ஒரு இடத்தில் தோல்வியை சந்தித்திருப்பார்கள். அந்த தோல்வியை கண்டு துவண்டு விடாமல் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும், என்ற உத்வேகத்தை கொடுப்பது தான் ‘கதிர்’ படத்தின் கதை.

 

கதிர் என்ற இளைஞராக ஹீரோ வெங்கடேஷும், வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட காதல் தோல்வியால் துவண்டு போகிறார். அப்போது அவருக்கு கம்யூனிஷ போராளி சந்தோஷ் பிரதாப்பின் வாழ்க்கை குறித்து தெரிய வருகிறது. அவரது வாழ்க்கை கதையை கேட்டு உத்வேகம் அடையும் வெங்கடேஷ், பிறகு என்ன செய்கிறார், வாழ்க்கையில் எப்படி வெற்றி பெறுகிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.

 

நாயகனாக நடித்திருக்கும் வெங்கடேஷ், கதிர் என்ற கதாப்பாத்திரத்தில் துள்ளலாகவும், துடிப்பாகவும் நடித்திருக்கிறார். கல்லூரி மாணவராக காதல் வயப்படுவது, நண்பர்களுக்காக ஆக்ரோஷமாக சண்டைப்போடுவது என்று துடிப்பாக நடித்திருப்பவர், வேலை கிடைக்காமல் துவண்டு போவது, பிறகு சொந்தமாக தொழில் தொடங்கி வெற்றிக்காக போராடுவது என்று முதிர்ச்சியான நடிப்பில் மூலம் அசத்துகிறார். மொத்தத்தில் கொடுத்த கதாப்பாத்திரத்தில் குறையில்லாமல் நடிக்க கூடிய நடிகர் என்ற நம்பிக்கை ஏற்படும் வகையில் நடித்திருக்கிறார்.

 

கம்யூனிஷ போராளியாக நடித்திருக்கும் சந்தோஷ் பிரதாப் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு. பிளாஷ்பேக் காட்சியில் வந்தாலும் மனதில் நிற்கும்படி நடித்திருக்கிறார்.

 

Kathir

 

நாயகனின் ஹவுஸ் ஓனராக நடித்திருக்கும் ரஜினி சாண்டி கதாப்பாத்திரமும், அதில் அவர் நடித்த விதமும் படத்திற்கு பெரிய பலம் சேர்த்திருக்கிறது. ஹீரோவுக்கு இணையான வேடத்தில் மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் பாவ்யா ட்ரிக்கா குறைவான காட்சிகள் வந்தாலும் நிறைவாக நடித்திருக்கிறார். ஹீரோவின் நண்பர்களாக நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

 

பிரஷாந்த் பிள்ளையின் இசையும், ஜெயந்த் சேது மாதவனின் ஒளிப்பதிவும் கதைக்கு ஏற்ப பயணித்துள்ளது. படத்தொகுப்பாளர் தீபக் துவாரகநாத்தின் படத்தொகுப்பிலும் குறையில்லை.

 

கல்லூரி வாழ்க்கை, அதில் வரும் காதல், மோதல், காதல் தோல்வி ஆகியவற்றை தமிழ் சினிமாவில் காலம் காலமாக பார்த்துக்கொண்டிருக்க கூடிய அம்சங்கள் என்பதால், அவற்றை வித்தியாசமான முறையில் கையாண்டால் மட்டுமே ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க முடியும், என்பதை மனதில் வைத்து இயக்குநர் தினேஷ் பழனிவேல் காட்சிகளை அமைத்திருந்தால் ‘கதிர்’ படத்தை அனைத்து தரப்பினரும் கொண்டாடி இருப்பார்கள்.

 

இருந்தாலும் தான் சொல்ல வந்ததை மிக நேர்த்தியாகவும் தெளிவாகவும் சொல்லியிருக்கும் இயக்குநர் தினேஷ் பழனிவேல், தோல்விகளால் துவண்டு போகும் இளைஞர்களுக்கு புத்திமதி சொல்வதோடு, புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலும் படத்தை இயக்கியிருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘கதிர்’ இளைஞர்களுக்கான படமாக மட்டும் இன்றி பாடமாகவும் இருக்கிறது.

 

ரேட்டிங் 3/5