Latest News :

’ஐங்கரன்’ விமர்சனம்

2bb9d42c23b31a987923d6a1cfb56f81.jpg

Casting : GV Prakash Kumar, Mahima Nambiar, Naren, Kaali Venkat, Sidharth, Harish Peradi

Directed By : Ravi Arasu

Music By : GV Prakash Kumar

Produced By : Common Man - B.Ganesh

 

மக்களுக்கு பயனளிக்கும் புதிய கருவிகளை கண்டுபிடிக்கும் பொறியியல் பட்டதாரியான ஜி.விபிரகாஷ், தனது கண்டுபிடிப்புகளுக்கு அரசின் அங்கீகாரம் பெறுவதற்காக முயற்சிக்கிறார். ஆனால், அவரது கண்டுபிடிப்புகளை அரசு அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வந்தாலும் மனம் தளராமல் தொடர்ந்து தனது கண்டுபிடிப்புகளில் ஜி.வி.பிரகாஷ் கவனம் செலுத்தி வருகிறார். ஜி.வி.பிரகாஷின் தந்தை நரேன், காவல்துறையில் கான்ஸ்டபிளாக இருந்தாலும், எப்படியாவது இன்ஸ்பெக்டராக வேண்டும் என்பதற்காக தீவிரமாக பணியாற்றுகிறார். ஆனால், அவரும் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் மேல் அதிகாரிகளால் அலட்சியப்படுத்தப்பட்டு வருகிறார். திறமை இருந்தும் அதற்கான அங்கீகாரம் கிடைக்காமல் அலக்கழிக்கப்படும் இந்த இருவரின் திறமையை நிரூபிப்பதற்கான வாய்ப்பு ஒன்று அமைய, அதன் மூலம் இவர்கள் தங்களது திறமையை நிரூபித்து லட்சியத்தில் ஜெயித்தார்களா இல்லையா, என்பதை விறுவிறுப்பாக சொல்வது தான் ’ஐங்கரன்’.

 

மிதிவண்டியை மிதித்து உடற்பயிற்சி செய்வதோடு, அதை மாவு அரைக்கும் எந்திரமாகவும் உருவாக்கி உபயோகப்படுத்தி, ஒரே செயலில் இரண்டு பலன்களை அடையும் ஜி.வி.பிரகாஷ், படத்திலும் லட்சியத்தை நோக்கி பயணிக்கும் பக்கத்து வீட்டு  இளைஞராகவும், அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டும் மாஸ் ஹீரோவாகவும் வலம் வருகிறார்.

 

என்னதான் அரசு தனது கண்டுபிடிப்புகளை நிராகரித்தாலும் துவண்டு விடாமல் தொடர்ந்து புதிய புதிய கருவிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் ஜி.வி.பிரகாஷ், முன்னேற துடிப்பவர்களுக்கு வாய்ப்பு என்பது நிச்சயம் கிடைக்கும், அதுவரை சலிப்படையாமல் தொடர்ந்து போராட வேண்டும், என்ற நல்ல மெசஜை தனது நடிப்பு மூலம் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

 

கதாநாயகி மகிமா நம்பியார் நடித்திருந்தாலும், அவருக்கான வாய்ப்பு படத்தில் குறைவாகவே இருக்கிறது. கொடுத்த வேலை குறைவாக இருந்தாலும் நிறைவாக நடித்து மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்து விடுகிறார்.

 

ஜி.வி.பிரகாஷின் அப்பாவாக நடித்திருக்கும் நரேன், போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ஹரிஷ் பேரடி, காளி வெங்கட், வடநாட்டு திருடனாக வரும் சித்தார்த் என அனைவரும் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, கதாப்பாத்திரத்திற்கு ஏற்றபடி கச்சிதமாகவும் நடித்திருக்கிறார்கள்.

 

ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, படத்தை விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் நகர்த்தி செல்வதில் முக்கிய பங்கி வகிக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் சரவணன் அபிமன்யு சாதாரண லொக்கேஷன்களை கூட பிரம்மாண்டமாக காட்டியிருப்பதோடு, இரவு நேர காட்சிகளையும், ஆக்‌ஷன் காட்சிகளையும் ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறார்.

 

ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் பார்முலா ஜானரில் கதையை கையாண்டிருக்கும் இயக்குநர் ரவி அரசு, அதில் திறமையானவர்கள் புறக்கணிக்கப்படுவது, உணவு பாதுக்காப்பு உள்ளிட்ட சமூக பிரச்சனைகளை போகிற போக்கில் பேசிவிட்டு போகிறார்.

 

”பாதுகாக்க வேண்டிய ஏரிகளை மூடுவதும், மூட வேண்டிய போர்வெல் குழிகளை மூடாமல் இருப்பதும் இங்கே தான் நடக்கும்”, “நேர்மையாக வாழ வேண்டும் என்று நினைப்பதே பெரிய சாதனை தான்” போன்ற வசனங்கள் மூலம் ரசிகர்களை சிந்திக்க வைத்திருக்கும் இயக்குநர் ரவி அரசு, தற்போது நிஜத்தில் நடந்திருக்கும் இரண்டு சம்பவங்களை முன் கூட்டியே தனது படத்தில் வைத்திருப்பது ஆச்சரியமாக உள்ளது.  அந்த சம்பவங்களும், அதை இயக்குநர் படமாக்கிய விதமும் படத்தின் சுவாரஸ்யத்தை அதிகரிக்க செய்கிறது.

 

குறையாக சுட்டிக்காட்டக்கூடிய சில காட்சிகள் படத்தில் இருந்தாலும், வேகமான திரைக்கதை ஓட்டமும், விறுவிறுப்பான காட்சி அமைப்பும் அந்த குறைகளை மறைத்து நிறைவான ஒரு படத்தை பார்த்த திருப்தியை கொடுக்கிறது.

 

மொத்தத்தில், ‘ஐங்கரன்’ அமர்க்களமான கமர்ஷியல் படமாக மட்டும் இன்றி சமூக பிரச்சனைகளை சர்ச்சையில்லாமல் பேசும் நல்ல படைப்பாகவும் இருக்கிறது.

 

ரேட்டிங் 3.5/5