Latest News :

’டேக் டைவர்ஷன்’ விமர்சனம்

27057a2317d437c280a2f7e7741d3242.jpg

Casting : Sivakumar, Rams, John Vijay, Padini Kumar

Directed By : Shivani Senthil

Music By : Jose Franklin

Produced By : Suba Senthil

 

பல வருட காத்திருப்புக்குப் பிறகு ஹீரோ சிவக்குமாருக்கு திருமணம் முடிவாகிறது. மாலை பாண்டிச்சேரியில் நடக்க இருக்கும் நிச்சயதார்த்தத்துக்கு சென்னையில் இருந்து கிளம்ப சிவக்குமார் ரெடியாகும் போது, அவருடைய அலுவலக மேலாளர் ஒரு வேலை கொடுக்கிறார். அந்த வேலையை செய்யவில்லை என்றால் வேலை போய்விடும் என்ற சூழ்நிலையில், மேலாளர் கொடுத்த வேலையை முடிக்க களத்தில் இறங்கும் சிவக்குமார், ஹீரோயின் பாடினி குமாரை சந்திப்பதோடு, அவரால் பிரச்சனையிலும் சிக்கிக்கொள்கிறார். பிரச்சனையில் இருந்து விடுபட இருவரும் சேர்ந்து பாண்டிச்சேரிக்கு பயணப்பட, பிரச்சனையும் அவர்களை துரத்துகிறது. இறுதியில், பிரச்சனையில் இருந்து சிவகுமாரும், பாடினி குமாரும் மீண்டார்களா, சிவகுமாரின் நிச்சயதார்த்தம் நடந்ததா, என்பதை கலகலப்பான காமெடியோடு சொல்வது தான் ‘டேக் டைவர்ஷன்’ படத்தின் கதை.

 

கதையின் நாயகனாக நடித்திருக்கும் சிவக்குமார், முதல் படம் போல் இல்லாமல் அனுபவமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குழப்பமான மனைநிலையை நேர்த்தியாக வெளிப்படுத்தியிருப்பவர், சிரிக்காமலே தன் நடிப்பு மூலம் நம்மை சிரிக்க வைத்துவிடுகிறார்.

 

ஹீரோயின் பாடினி குமார் படம் முழுவதும் உற்சாகமாக இருக்கிறார். பெண்னாக பிறப்பதே ஒரு பிரச்சனை தான், என்று அடிக்கடி சொல்லிக்கொண்டு இருப்பவர், தனது கஷ்ட்டத்தை கூட சிரித்தபடி சொல்லி வருத்தப்படும் இடங்களில் நடிப்பில் அசத்துகிறார்.

 

வில்லன், அடியாள் கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த ராம்ஸ், முதல் முறையாக காமெடி வேடத்தில் கலெக்கியிருக்கிறார். பெரியப்பா வயதில் காதல் பீலீங்கோடு வலம் வரும் ராம்ஸ் வரும் காட்சிகள் அனைத்தும் சிரிக்க வைக்கிறது.

 

மைக்கேல் குரூஸ், ராக்கி ஆகிய கதாப்பாத்திரங்களில் நடித்திருப்பவர்களும், ஜான் விஜய் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் கொடுத்த வேலையை குறை இல்லாமல் செய்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் ஈஸ்வரன் தங்கவேல் பயணக் கதையை சலிப்பு ஏற்படாத வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார். இசையமைப்பாளர் ஜோஸ் பிராங்க்ளின் இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. படத்தொகுப்பாளர் விது விஷ்வாவின் பணியும் படத்திற்கு கைகொடுத்துள்ளது.

 

பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியிலான பிரச்சனையை கதைக்கருவாக எடுத்துக்கொண்ட இயக்குநர் ஷிவானி செந்தில், அதை நகைச்சுவையாக சொல்லியிருப்பது ரசிக்க வைக்கிறது.

 

ஹீரோவுக்கு தெரியாதவர்கள் அவரை தெரிந்தது போல் பேசுவது, அவருடன் பாண்டிச்சேரிக்கு பயணிப்பது, இடையே எதிர்ப்பார்க்காத வகையில் திருமணப் பெண் அவர்களுடன் பயணிப்பது போன்றவை படத்தை எதிர்ப்பார்ப்புடன் நகர்த்துவதோடு, ராம்ஸ் மற்றும் அவருடைய ஆட்களின் காமெடி படத்தை போராடிக்காமல் நகர்த்தி செல்கிறது. சில இடங்களில் இயக்குநர் தடுமாறியிருப்பது தெரிந்தாலும், காமெடி காட்சிகள் மூலம் அதை கச்சிதமாக சமாளித்தும் விடுகிறார்.

 

மொத்தத்தில், ‘டேக் டைவர்ஷன்’ இனிமையான பயணம்

 

ரேட்டிங் 3/5