Latest News :

’எண்ணித்துணிக’ விமர்சனம்

208621eb8670fa68a4b80c588cae8d26.jpg

Casting : Jai, Athulya Ravi, Anjali Nair, Sunil Reddy, Vidya Pradeep, Suresh Subramaniyam,

Directed By : S.K. Vettri Selvan

Music By : Sam CS

Produced By : Suresh Subramaniyam,

 

அமைச்சர் சுனில் ரெட்டியின் பினாமி நடத்தும் நகைக்கடை ஒன்றில் கொள்ளை முயற்சியில் வம்சி கிருஷ்ணாவும் அவரது ஆட்களும் ஈடுபடுகிறார்கள். அப்போது அங்கு திருமணத்திற்காக நகை வாங்க வரும் அதுல்யா ரவி கொள்ளையர்களால் தாக்கப்படுகிறார். காதலியை தாக்கிய கொள்ளையர்களை கண்டுபிடித்து பழிவாங்க களத்தில் இறங்கும் ஜெய், இது வெறும் நகைக்காக நடத்தப்பட்ட கொள்ளை சம்பவம் இல்லை என்பதை தெரிந்துக்கொள்கிறார். மறுப்பக்கம் அமைச்சரும் கொள்ளையர்களை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்ட, இறுதியில் யார் கொள்ளையர்களை கண்டுபிடித்தார்கள், கொள்ளை சம்பவத்தின் பின்னணி என்ன? என்பதே ‘எண்ணித்துணிக’.

 

ஜெய் வழக்கம் போல் தனது வேலையை முழுமையாக செய்திருப்பதோடு, ஆக்‌ஷன் காட்சிகளிலும் அமர்க்களப்படுத்தியிருக்கிறார். அதுல்யா ரவியை சுற்றி சுற்றி வருபவர், அவருக்காக கொள்ளையர்களை கண்டுபிடிப்பதற்கு செய்யும் சம்பவங்கள் அனைத்தும் துணிச்சலின் உச்சமாக இருக்கிறது. காதல், ஆக்‌ஷன் என இரண்டிலும் ஜெய் ரசிக்க வைக்கிறார்.

 

ஜெயின் காதலியாக வரும் அதுல்யா ரவி, தைரியமான பெண்ணாகவும், துணிச்சலான பெண்ணாகவும் நடித்திருக்கிறார். அவருடைய துணிச்சலே அவருக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துவது பெரும் சோகம்.

 

முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் அஞ்சலி நாயர் படம் முழுவதும் வருவதோடு, கதையோடு பயணிக்கும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். தனது குழந்தையை காப்பாற்றுவதற்காக போராடும் அவரது நடிப்பு சிறப்பு.

 

அமைச்சராக நடித்திருக்கும் சுனில் ரெட்டி, வில்லத்தனத்தை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். வம்சி கிருஷ்ணா வழக்கம் போல் துடிப்பான இளைஞராக நடித்திருக்கிறார்.

 

படத்தின் கதை எழுதியிருப்பதோடு மாஃபியா கும்பலின் தலைவன் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் சுப்பிரமணியம் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமாக தேர்வாக இருப்பதோடு, அளவான நடிப்பு மூலம் கதாப்பாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

 

சாம் சி.எஸ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணிப்பதோடு, காட்சிகளின் விறுவிறுப்பையும் அதிகரிக்க செய்திருக்கிறது.

 

தினேஷ் குமாரின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றபடி இருக்கிறது. சாபு ஜோசப்பின் படத்தொகுப்பு காட்சிகளை வேகமாக நகர்த்தி செல்கிறது.

 

திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் எஸ்.கே.வெற்றிச் செல்வன், கொள்ளை சம்பவம் ஒன்றை வைத்துக்கொண்டு முழுமையான ஆக்‌ஷன் க்ரைம் திரில்லர் ஜானர் திரைப்படத்தை கொடுத்திருக்கிறார்.

 

வைரக்கற்களை தேடும் சர்வதேச மாஃபியா கும்பலை காட்டி படத்தின் ஆரம்பத்திலேயே  நம்மை கதைக்குள் இழுத்துவிடும் இயக்குநர் எஸ்.கே.வெற்றிச் செல்வன், கொள்ளை சம்பவங்களின் போது அப்பாவி மக்கள் அநியாயமாக பாதிக்கப்படுவதையும், அதன் பின்னணியின் பயங்கரத்தையும் பேசியிருக்கிறார். 

 

படத்தின் மையக்கருவை சர்வதேச அலவில் சொன்னாலும், திரைக்கதை மற்றும் காட்சிகள் அமைப்பில் சங்கிலி பரிப்பு போன்ற சிறு திருட்டு மூலம் ஒருவர் குடும்பத்தில் எவ்வளவு பெரிய இழப்பு ஏற்படுகிறது என்பதையும், அந்த இழப்பு குறித்து எந்த கவலையும் இல்லாமல் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை மிக கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பதையும் மிக அழுத்தமாக  சொல்லியிருக்கும் இயக்குநர் வெற்றிச் செல்வன், இரண்டு மணி நேரம் எப்படி போனது என்று தெரியாதபடி படத்தை வேகமாக நகர்த்தி செல்கிறார்.

 

படத்தில் வரும் அமைச்சர் கதாப்பாத்திரமும், அவரது வைரக்கற்கள் தேடல், சர்வதேச மாஃபியா கும்பலின் காட்சிகள் போன்றவை படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்வதோடு, படம் முழுவதையும் அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்ப்பார்ப்போடு பார்க்க வைக்கிறது.

 

மொத்தத்தில், ‘எண்ணித்துணிக’ ரசிகர்களை ஏமாற்றவில்லை.

 

ரேட்டிங் 4/5