Latest News :

’பபூன்’ திரைப்பட விமர்சனம்

4b0c528190b149270de788691fd74e0a.jpg

Casting : Vaibhav, Anagha, Anthagudi Ilayaraja, Jo.joo.George, Adukalam Naren, Tamilarasan, Adukalam Jeyabalan, Moonar Ramesh, Madurai M.P.Vishwanathan, Rajkumar,

Directed By : Ashok Veerappan

Music By : Santhosh Narayanan

Produced By : Kaarthekeyen Santhanam, Sudhan Sundharam, Jayaraman & Karthik Subbaraj

 

நாடகத்தில் பபூன் வேடம் போடும் நாயகன் வைபவ், நாடக தொழில் நலிந்து வருவதால் அத்தொழிலை விட்டுவிட்டு வெளிநாட்டுக்கு சென்று பணம் சம்பாதிக்க முடிவு செய்கிறார். அதற்கான செலவுக்காக லாரி ஓட்டுநராக வேலை செய்கிறார். அப்போது போதை பொருள் இருக்கும் லாரியை உப்பு மூட்டை லாரி என்று நினைத்து அவர் ஓட்டி வரும் போது, போலீசில் சிக்கிக்கொள்கிறார். அதையடுத்து அவரது வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளும், அதில் இருந்து அவர் மீண்டாரா?, இல்லையா? என்பதை சமகால அரசியல் மற்றும் ஈழத்தமிழர்களின் வாழ்வியலோடு சேர்த்து சொல்லியிருப்பது தான் ‘பபூன்’ படத்தின் கதை.

 

நாடகத்தில் கோமாளி வேடம் போட்டு பாட்டம், ஆட்டம் என்று கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தும்  வைபவ், இருக்கமான காட்சிகளில் கூட இயல்பாக நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் சில இடங்களில் தடுமாற்றம் தெரிந்தாலும், அதை சாமர்த்தியமாக சமாளித்திருக்கிறார்.

 

இலங்கை அகதியாக நடித்திருக்கும் நாயகி அனகா, ஈழத்தமிழர்களின் கோபத்தை தனது கண்களினால் வெளிப்படுத்தியிருப்பதோடு, மறுக்கப்படும் ஈழத்தமிழர்களின் உரிமை குறித்து பேசும் காட்சிகளில் மனதில் நிற்கிறார்.

 

வைபவின் நண்பராக படம் முழுவதும் வரும் ஆலங்குடி இளையராஜா, முதல் படத்திலேயே பலம் வாய்ந்த கதாப்பாத்திரத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருப்பதோடு, சில இடங்களில் சிரிக்கவும் வைக்கிறார்.

 

கதையின் மையப்புள்ளி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜின் வேடமும், அவரது நடிப்பும் மிரட்டல். ஆனால், அவரது காட்சிகளை படத்தில் குறைவான அளவு வைத்திருப்பது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.

 

போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் தமிழரசன், காவல்துறையின் வேகத்தையும், விவேகத்தையும் தனது நடிப்பில் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

 

அரசியல்வாதிகளாக நடித்திருக்கும் ஆடுகளம் நரேன், ஆடுகளம் ஜெயபாலன் ஆகியோர் சமகால அரசியல்வாதிகளின் போட்டி அரசியலை நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

 

மூணாறு ரமேஷ், ராஜ்குமார், குமார் கங்கப்பன், கஜராஜ் என படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்கள் அவர் அவர் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

 

தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு கதையோடு பயணிப்பதோடு, தமிழக கடலோரப்பகுதிகளை அழகாக காட்டியிருக்கிறது.

 

சந்தோஷ் நாராயணின் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கிறது. அளவான பின்னணி இசை மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

 

தமிழக கடலோரப் பகுதிகளில் நடக்கும் கடத்தல், அகதிகளாக தமிழகத்தில் இருக்கும் ஈழத்தமிழர்களுக்கு தமிழர்கள் மூலம் நடக்கும் கொடுமைகள் மற்றும் மறுக்கப்படும் அவர்களது உரிமைகள், சமகால அரசியல் என பல விஷயங்களை மிக சாதாரணமாக பேசியிருக்கிறார் இயக்குநர் அசோக் வீரப்பன்.

 

முக்கிய குற்றவாளியை பிடிக்க முடியவில்லை, என்று வருத்தப்படும் போலீஸ் அதிகாரியிடம், “நாம் கைது செய்ய வேண்டும் என்றால் முதலமைச்சரையும், அமைச்சரையும் தான் கைது செய்யனும்” என்று உயர் போலீஸ் அதிகாரி சொல்வது, எங்கள் மீது வழக்கு போடுவதற்கு சட்டத்தை ஆராயும் நீங்க, எங்களுக்கு சட்டத்தில் இருக்கும் உரிமைகள் பற்றி தெரிந்துக்கொள்ள அக்கறை காட்ட மாட்ரீங்களே ஏன்? என்று நாயகி கேட்பது உள்ளிட்ட பல வசனங்கள் மூலம் இயக்குநர் அசோக் வீரப்பன் ஆட்சியாளர்களை கிழித்து தொங்க விடுவதோடு, ஈழத்தமிழர்களுக்காக அமைதியான முறையில் குரல் கொடுத்திருக்கிறார்.

 

உள்ளூர் அரசியலுக்காக நடத்தப்படும் சர்வதேச கடத்தல், அதை சார்ந்திருக்கும் அப்பாவிகள் என மிக அழுத்தமான விஷயங்களை சாதாரண கமர்ஷியல் படத்திற்கான திரைக்கதை அமைப்போடு காட்சிப்படுத்தியிருந்தாலும், வசனங்கள் மூலம் கமர்ஷியலையும் தாண்டிய ஒரு விஷயத்தை படத்தில் வைத்திருக்கும் இயக்குநரை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.

 

படத்தின் தலைப்பு மற்றும் வைபவின் இயல்பான நடிப்பு கதையின் வலுவை குறைக்கும்படி இருப்பதோடு, முதல்பாதி படம் வேகம் குறைவாக நகர்வது போன்றவை படத்திற்கு சற்று பலவீனமாக அமைந்தாலும், ஈழத்தமிழர்கள் குறித்த வசனங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் ஈகோ போட்டிகள் அதற்குள் சிக்கும் அப்பாவிகள் போன்றவை படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறது.

 

மொத்தத்தில், ‘பபூன்’ கோமாளி அல்ல.

 

ரேட்டிங் 3.5/5