Latest News :

’ஷூ’ திரைப்பட விமர்சனம்

dd1d5ca5149337ea3c3e821584417f8f.jpg

Casting : Priya Kalyaan, Yogi Babu, Dileepan, Redin Kingsley, Kpy Bala

Directed By : Kalyaan

Music By : Sam C.S

Produced By : R.Karthick and M.Niyash

 

கடந்த காலத்திற்கு அழைத்துச் செல்லக்கூடிய டைம் ட்ராவல் ஷூ (காலணி) ஒன்றை திலீபன் உருவாக்குகிறார். அந்த ஷூவை சோதித்து பார்க்கும் போது, எதிர்பாரதவிதமாக ஏற்படும் விபத்தில் சிக்கும் திலீபன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவரிடம் இருந்த அந்த அதிசய ஷூ, சிறுமி பிரியாவிடம் கிடைக்கிறது. அவர் அந்த ஷூவை யோகி பாபுவிடம் கொடுத்து விடுகிறார்.

 

இதற்கிடையே, சிறுமிகளை கடத்தி பாலியல் சித்ரவதை செய்யும் கும்பலால் சிறுமி பிரியா கடத்தப்படுகிறார். பிரியாவை போல் பல பெண்களை கடத்தல் கும்பல் சித்ரவதை செய்ய, அவர்களை காப்பாற்றும் முயற்சியில் இறங்கும் பிரியாவுக்கு டைம் ட்ராவல் ஷூ எப்படி உதவி செய்கிறது, என்பதை நம் தலை சுற்றும் அளவுக்கு சொல்லியிருக்கிறார்கள்.

 

கதையின் நாயகியாக சிறுமி பிரியா கல்யாண் நடித்திருக்கிறார். அம்மா இல்லாமல், மதுவுக்கு அடிமையான அப்பாவின் ஆதரவில் வளரும் பிள்ளையாக நடித்திருக்கும் பிரியா, தன் அம்மாவை நினைத்து ஏங்கும் காட்சிகளில் நம்மை கலங்க வைக்கிறார். தன் மீது அக்கறை இல்லை என்றாலும், தனது அப்பா மீது அக்கறை காட்டும் அவரின் பாசம் நெகிழ வைக்கிறது. 

 

ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் யோகி பாபு படம் முழுவதும் வருவது போல் இருக்கிறது. யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, பாலா ஆகியோரது கூட்டணியின் காமெடி காட்சிகள் சில சிரிக்க வைத்தாலும், சில மொக்கையாக இருக்கிறது.

 

திலீபன் கதாப்பாத்திரம் யார்? என்பதை இயக்குநர் எந்த இடத்திலும் சொல்லவில்லை. அவர் டைம் ட்ராவல் ஷூவை வடிவமைப்பதால், அவர் ஒரு விஞ்ஞானியாக தான் இருப்பார் என்று நாமே நினைத்துக்கொள்ள வேண்டியது தான். ஆனால், விஞ்ஞானிக்கான எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் வரும் திலீபன், கதாப்பாத்திரம் படத்தில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

 

சிறுமியின் குடிகார தந்தையாக நடித்திருக்கும் பாடகர் அந்தோணி தாஸ், குடி எப்படி குடியை கெடுக்கிறது என்பதற்கான உதாரணமாக நடித்திருக்கிறார்.

 

ஜேக்கப் ரத்தினராஜ் மற்றும் ஜெமின் ஜோம் அய்யனத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. சாம் சி.எஸ் இசையமைப்பில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்றபடி பயணித்துள்ளது. 

 

கதை எழுதி இயக்கியிருக்கும் கல்யாண், பெண் குழந்தைகள் கடத்தலை மையக்கருவாக கொண்டு, அதை காமெடியாகவும், சீரியஸாகவும் சொல்ல முயற்சித்திருக்கிறார். 

 

யோகி பாபுவை வைத்து காமெடி செய்கிறேன் என்ற பெயரில் ரசிகர்களை கடித்து குதறும் இயக்குநர் கல்யாண், சிறுமி பிரியா மூலம் கலங்க வைக்கிறேன், என்ற பெயரில் நம்மை கதற வைக்கிறார்.

 

2 மணி நேரத்திற்கும் குறைவான படம் என்றாலும், 3 மணி நேரம் பார்த்த அனுபவத்தை கொடுக்கிறது. அந்த அளவுக்கு அனைத்து காட்சிகளையும் மெதுவாக நகர்த்தி செல்லும் இயக்குநர், சிறுமிகள் துன்பப்படும் காட்சிகளை ரசித்து ரசித்து எடுத்திருப்பதை பார்க்கவே கஷ்ட்டமாக இருக்கிறது.

 

குடிகார தந்தையை கவனித்துக்கொள்ளும் சிறுமி, டாஸ்மாக் மதுக்கடை பெயர் பலகையின் மீது சிறுமி கல் எறிவது போன்ற காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும், படத்தின் பெரும்பாலான காட்சிகள் பொறுமையை சோதிக்கும் விதத்தில் இருக்கிறது.

 

குழந்தை கடத்தல் என்பது நாட்டில் நடக்கும் முக்கியமான குற்றம், அதிலும் பெண் குழந்தைகள் கடத்தல் பற்றி சொல்லும் இயக்குநர், அதன் பின்னணி மற்றும் கடத்தல்காரர்களின் நெட் ஒர்க் போன்ற எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாக சொல்லாமல், சிறுமி பிரியாவை முன் நிறுத்தி படத்தை நகர்த்துவதோடு, காட்சிகளை மெதுவாக நகர்த்தி செல்வது சலிப்படைய செய்கிறது.

 

மொத்தத்தில், ச்சே....என்று ரசிகர்கள் சொல்லும் விதத்தில் தான் இருக்கிறது இந்த ‘ஷூ’.

 

ரேட்டிங் 2/5