Latest News :

’பேட்டைக்காளி’ இணையத் தொடர் விமர்சனம்

330c9b775b2c52c072c8549fa34885aa.jpg

Casting : Kishore, Velaramamoorthy, Kalaiarasan, Antony, Sheela, Bala hassan

Directed By : La.Rajkumar

Music By : Santhosh Narayanan

Produced By : Vetri Maaran

 

இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில், லா.ராஜ்குமார் எழுதி இயக்கியிருக்கும் இணையத் தொடர் ‘பேட்டைக்காளி’. 8 பாகங்களாக உருவாகியுள்ள இத்தொடரின் முதல் பாகம் கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி ஆஹ தமிழ் ஒடிடி தளத்தில் வெளியான நிலையில், ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பாகம் என்று இதுவரை ஐந்து பாகங்கள் வெளியாகியுள்ளது. இந்த ஐந்து பாகங்கள் எப்படி இருக்கிறது? என்று விமர்சனத்தை பார்ப்போம்.

 

ஏராளமான திரைப்படங்களில் ஜல்லிக்கட்டு போட்டியை காண்பித்திருக்கிறார்கள். ஆனால், பாடல் அல்லது ஏதாவது ஒரு காட்சியில் ஜல்லிக்கட்டு போட்டி வந்து போகும். ஆனால், இந்த இணையத் தொடர் முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டு போட்டியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

 

ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துக்கொண்டு காளைகளை அடக்கி தங்களது வீரத்தை காட்டும் இளைஞர்கள் ஒரு பக்கம், யாராலும் அடக்க முடியாத காளைகளை வளர்த்து ஜல்லிக்கட்டில் பெயர் வாங்கும் பெரிய மனிதர்கள் ஒரு பக்கம், என்று ஜல்லிக்கட்டு போட்டியை கெளரவமாகவும், பெருமையாகவும் நினைக்கும் மனிதர்களுக்ளு இடையே நடக்கும் மோதலும், அரசியலும் தான் இந்த இணையத் தொடரின் கதை.

 

ஊர் பண்ணையரானா வேலராமூர்த்தியின் காளையை யாராலும் அடக்க முடியாது. இதனால், அவருக்கு ஜல்லிக்கட்டு போட்டியில் தனி மரியாதை கிடைக்கிறது. அதே சமயம், எந்த காளையாக இருந்தாலும் அதை அடக்க கூடிய திறமையான மாடுபிடி வீரரான கலையரசன் மற்றும் அவரது ஊரை சேர்ந்தவர்கள் வேலராமமூர்த்தியின் காளையை அடக்க கூடாது, என்று ஊர் கட்டுப்பாடு விதிக்கிறது. ஆனால், அந்த கட்டுப்பாட்டையும் மீறி கலையரசன், வேலராமமூர்த்தியின் காளையை அடக்கி விடுகிறார். அதனால், மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட அந்த பிரச்சனையை தொடர்ந்து நடக்கும் சம்பவங்களை, பல்வேறு திருப்பங்களுடன் சொல்வது தான் ‘பேட்டைக்காளி’.

 

சாதி பிரிவினையை மையமாக வைத்து முதல் பாகம் நகர, இரண்டாம் பாகம் ஜல்லிக்கட்டு போட்டியில் இருக்கும் அரசியலை மையமாக வைத்து நகர்கிறது. மூன்றாம் பாகம் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான போட்டி மற்றும் சூழ்ச்சியை மையப்படுத்தி நகர, நான்காம் பாகத்தில் ‘பேட்டைக்காளி’ யார்? என்ற உண்மை தெரிய வருவதோடு, பேட்டைக்காளியின் எண்ட்ரியால், அடுத்தடுத்த பாகங்கள் எப்போது வெளியாகும் என்ற ஆர்வம் ஏற்படுகிறது.

 

மாடுபிடி வீரர் வேடத்தில் நடித்திருக்கும் கலையரசன், காளையை போல் நடிப்பில் வேகத்தை வெளிக்காட்டியிருக்கிறார். அவர் காளை பிடிக்கும் போது உண்மையான மாடுபிடி வீரராக மாறி அசத்துகிறார். அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் ஜெட் வேகத்தில் பயணிக்கிறது.

 

ஊர் பண்ணையாராக நடித்திருக்கும் வேல ராமமூர்த்தி, வழக்கமான முறைப்பை நடிப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருந்தாலும், அவரது நடிப்பு ஒரே மாதிரியாக இருப்பது சலிப்படைய செய்கிறது.

 

கலையரசனின் மாமாவாக நடித்திருக்கும் கிஷோர், தனது அறிமுக காட்சியிலேயே நம்மை கதைக்குள் அழைத்து சென்று விடுகிறார். இளைஞர்களுக்கும், ஊர் மக்களுக்கும் வழிகாட்டியாக இருக்கும் கிஷோர், ஏழு நாட்டு பஞ்சாயத்து முடிந்த பிறகு, கலையரசனுக்காக சவால் விடும் காட்சியில் கண்களில் கோபம் இருந்தாலும், அதை வெளிப்படுத்துவதில் காட்டியிருக்கும் நிதானம் மூலம் கைதட்டல் பெறுகிறார்.

 

வேலராமமூர்த்தியின் மகனாக நடித்திருக்கும் பாலா ஹாசன், சூட்சியின் மறு உருவமாக நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் அப்பாவின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர், பிறகு அப்பாவின் அதிகாரம் கைக்கு வந்த பிறகு மாறும் இடத்தில் நடிப்பில் வித்தியாசத்தை காட்டியிருக்கிறார்.

 

கிஷோர், வேலராமமூர்த்தி, கலையரசன் ஆகியோர் மூன்று பாகங்களை ஆக்கிரமிக்க, நான்காவது பாகத்தில் அறிமுகமாகும் ஷீலா ராஜ்குமாரும், பேட்டைக்காளியும், அடுத்தடுத்த பாகங்களில் என்ன நடக்கப் போகிறது? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறார்கள்.

 

வேல்ராஜின் ஒளிப்பதிவு இதுவரை திரையில் காட்டாத ஜல்லிக்கட்டு போட்டியை காட்சிப்படுத்தியிருக்கிறது. நிஜ ஜல்லிக்கட்டு போட்டியை காட்சிப்படுத்தியிருக்கும் விதத்தில் ஜல்லிக்கட்டு போட்டி காட்சிகள் அனைத்தும் பிரமிக்க வைக்கிறது. அந்த போட்டியில் கலையரசனும் இறங்கி விளையாடுவது, கதாபாத்திரங்களின் உணர்வுகளை வெளிப்படுத்திய விதம் நேர்த்தியாக இருப்பது போல், ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கும் வீரர்களின் சாகசங்கள் மெய் சிலிரிக்க வைக்கிறது. 

 

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மேற்பார்வையில் இசைப்பணிகள் நடைபெற்றுள்ளது. பின்னணி இசையில் வரும் சில பீஜியம்கள் ‘பொல்லாதவன்’, ‘வடசென்னை’ போன்ற படங்களை நினைவுப்படுத்துகிறது. அதை தவிர்த்துவிட்டு பார்த்தால் இசை காட்சிகளுக்கு பலம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

 

எழுதி இயக்கியிருக்கும் லா. ராஜ்குமார், ஆரம்பத்தில் சாதியை மையப்படுத்தி கதையை நகர்த்தினாலும், அதன் பிறகு ஜல்லிக்கட்டு போட்டி மற்றும் அதை நேசிக்கும் மனிதர்கள், அவர்களுக்கு இடையே இருக்கும் அரசியல் என்று இதுவரை பார்த்திராத ஒரு களத்தில் நம்மை பயணிக்க வைக்கிறார். 

 

ஒரு பாகம் முடிந்த பிறகு அடுத்த பாகத்தில் என்ன இருக்கும், என்ற எதிர்பார்ப்பு ஏற்படும் வகையில் பல திருப்புமுனைகளை வைத்து நான்கு பாகங்களையும் தொய்வில்லாமல் நகர்த்தி செல்லும் இயக்குநர் லா.ராஜ்குமார், இறுதியில் மீதம் உள்ள நான்கு பாகங்களை பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆவலை தூண்டும் விதத்தில் முடித்திருக்கிறார்.

 

மொத்தத்தில், ஜல்லிக்கட்டு போட்டியை வியக்கும் வகையில் படமாக்கியிருகும் ‘பேட்டைக்காளி’ இணையத் தொடர் உலகில் முக்கிய இடத்தை பிடிக்கும்.

 

ரேட்டிங் 4/5