Latest News :

’பட்டத்து அரசன்’ திரைப்பட விமர்சனம்

bf1ef4257ad48054a27027d5fbf6c156.jpg

Casting : Atharva, Rajkiran, Ashika Ranganath, Radhika, Jayaprakash, Durai Sudhakar, Singam Puli, Ravikale, Sathru, Raj Iyappan

Directed By : A.Sarkunam

Music By : Ghibran

Produced By : Lyca Productions - Subashkaran

 

உயிருடன் இருக்கும் போதே சிலை வைத்து கொண்டாடும் அளவுக்கு மிகப்பெரிய கபடி வீரரான ராஜ்கிரண், மகன்கள், மகள், பேரன்கள், பேத்திகள் என்று கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார். அவருடைய மற்றொரு மனைவியின் பேரனான அதர்வாவும், அவரது அம்மா ராதிகாவும் தனியாக வசித்து வருகிறார்கள். ராதிகாவின் பகையால் பேரன் அதர்வாவை ராஜ்கிரண் மற்றும் அவரது குடும்பத்தார் ஒதுக்கி வைக்க, அதர்வாவோ எப்படியாவது தாத்தா குடும்பத்துடன் சேர முயற்சித்து வருகிறார்.

 

இதற்கிடையே, ஊரே கொண்டாடிய ராஜ்கிரண் குடும்பம் ஊருக்கு துரோகம் செய்துவிட்டதாக பழி சுமத்துவதோடு, அவரது குடும்பத்தில் இருப்பவர்கள் யாரும் ஊருக்காக கபடி விளையாட கூடாது என்று தடையும் விதிக்கிறார்கள். தாத்தா குடும்பம் மீது விழுந்த பழியை போக்க களம் இறங்கும் அதர்வா, ஊருக்கு எதிராக ஒரு சவால் விடுகிறார். அந்த சவால் என்ன? தாத்தா குடும்பத்துடன் சேர்ந்தாரா? சவாலில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதை விறுவிறுப்பான கபடி விளையாட்டோடு குடும்ப செண்டிமெண்டையும் சேர்த்து சொல்வது தான் ‘பட்டத்து அரசன்’.

 

கபடி வீரராக நடித்திருக்கும் அதர்வா விளையாட்டு வீரருக்கான வேடத்தில் கச்சிதமாக பொருந்துகிறார். கபடி களத்தில் ஜல்லிக்கட்டு காளையாக பாய்கிறவர், சண்டைக்காட்சிகளில் பத்து பேரை ஒற்றை ஆளாக அடித்தாலும் நம்பும்படியாக அதிரடி காட்டியிருக்கிறார். காதல் காட்சிகளில் அளவாக நடித்திருப்பவர் செண்டிமெண்ட் காட்சிகளில் அனைவரையும் கவரும்படி நடித்திருக்கிறார். 

 

நாயகனுக்கு தாத்தா என்றாலும் கதையின் மையக்கருவாக பொத்தாரி என்ற கபடி வீரரின் வேடத்தில் நடித்திருக்கும் ராஜ்கிரண், மூன்று விதமான கெட்டப்புகளில் வித்தியாசத்தை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். 70 வயதில் ஒருவரால் கபடி விளையாட முடியுமா? என்ற கேள்வியை கபடி கள காட்சிகள் மூலம் உடைத்தெறிகிறார் ராஜ்கிரண்.

 

நாயகியாக நடித்திருக்கும் புதுமுகம் ஆஷிகா ரங்கநாத் குடும்ப பாங்கான முகம். கபடி வீராங்கனையாக நடித்திருப்பவர் காதல் காட்சிகளிலும், கபடி போட்டியிலும் அளவான நடிப்பு மூலம் ஜொலிக்கிறார்.

 

ராஜ்கிரணின் மூத்த மகனாக நடித்திருக்கும் ஜெயப்பிரகாஷ், அதர்வாவிடம் கோபத்தை வெளிப்படுத்தும் காட்சிகளாகட்டும், இறுதியில் அவருடன் இணைவதாகட்டும் குறையில்லாமல் நடித்திருக்கிறார்.

 

ராஜ்கிரணின் இளைய மகனாக நடித்திருக்கும் துரை சுதாகர், தஞ்சை மாவட்டம் என்பதால் என்னவோ கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். சில இடங்களில் மூத்த நடிகர்களையும் ஓவர் டேக் செய்யும் விதத்தில் அவருக்கு முக்கியமான வசனங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை சரியாக பயன்படுத்தி சிறப்பாக நடித்து கைதட்டல் பெறுகிறார். குறிப்பாக பஞ்சாயத்து காட்சியில் தன் குடும்பத்திற்கான உரிமையை விட்டுக்கொடுக்காமல் சீறும் காட்சி தமிழ் சினிமாவில் துரை சுதாகர் பெரிய நடிகராக வருவார் என்பதற்கு சாட்சி.

 

Pattathu Arasan Movie Review

 

சிங்கம் புலி காமெடி நடிகராக அல்லாமல் குடும்பத்து நபராக வலம் வந்தாலும் கிடைக்கும் சில இடங்களை பயன்படுத்தி நம்மை சிரிக்க வைக்கிறார். ராஜ்கிரணின் மற்றொரு பேரனாக நடித்திருக்கும் ராஜ் ஐயப்பன் நடிப்பிலும் சரி, கபடி விளையாட்டிலும் சரி பாராட்டும்படி நடித்திருக்கிறார்.

 

ராதிகா, சத்ரு, ரவி காளே, பால சரவணன், ஆர்.கே.சுரேஷ் என படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருந்தாலும், அனைவரும் கதையோடு பயணிப்பதால் குறைவான காட்சிகளில் வந்தாலும் மனதில் நிற்கிறார்கள்.

 

லோகநாதன் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றபடி பயணிக்கிறது. விளையாட்டு போட்டிகளை விறுவிறுப்பாக காட்டுவது புதிதல்ல என்றாலும், தாத்தா, மகன், பேரன் என்று மூன்று தலைமுறையினர் கொண்ட ஒரு அணி கபடி விளையாடுவதை மிக நேர்த்தியாக காட்டியிருப்பதோடு, தஞ்சை மாவட்டத்தில் நம்மையும் பயணிக்கும்படி காட்சிகளை படமாக்கியுள்ளார்.

 

இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசை படத்திற்கு கூடுதல் பலம். பாடல்கள் திரும்ப திரும்ப கேட்கும்படி இருப்பதோடு, முணு முணுக்கவும் வைக்கிறது. பின்னணி இசை படத்தை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தி செல்கிறது.

 

கபடி விளையாட்டை மையமாக வைத்து கதை எழுதப்பட்டிருந்தாலும், குடும்ப செண்டிமெண்டோடு திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் சற்குணம், அதை முழுமையான பொழுதுபோக்கு படமாக கொடுத்திருக்கிறார்.

 

ஏகப்பட்ட நட்சத்திரங்களை வைத்துக்கொண்டு இப்படி ஒரு கதையை சொல்வதே மிகப்பெரிய சவால் என்றாலும், அந்த சவாலை சாமர்த்தியமாக சமாளித்திருக்கும் இயக்குநர் சற்குணம், காதல், ஆக்‌ஷன், காமெடி, குடும்ப செண்டிமெண்ட் என்று அனைத்தையும் அளவாக கொடுத்திருக்கிறார்.

 

விறுவிறுப்பான கபடி விளையாட்டை சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் குடும்ப செண்டிமெண்டால் திரைக்கதை ஒட்டத்தில் சில தடுமாற்றங்கள் இருந்தாலும், அவற்றை கபடி விளையாட்டும் அதை சார்ந்த தகவல்களும் சரிசெய்து சலிப்பு ஏற்படுத்தாமல் படத்தை நகர்த்தி செல்கிறது.  இறுதியில் ராஜ்கிரணின் குடும்பத்தாருக்கும், ஊருக்கும் இடையே நடக்கும் கபடி போட்டி நம்மை சீட் நுணியில் உட்கார வைத்து ரசிக்க வைக்கிறது.

 

மொத்தத்தில், ‘பட்டத்து அரசன்’ கிராம மக்களின் எதார்த்த வாழ்க்கையோடு அவர்களின் விளையாட்டு வாழ்க்கையையும் இயல்பாக சொல்லியிருக்கிறது.

 

ரேட்டிங் 4/5