Latest News :

’ராஜாமகள்’ திரைப்பட விமர்சனம்

83fbca8e0cadad15c30099c395048d97.jpg

Casting : Adukalam Murugadoss, Baby Prithksha, Velina, Bucks

Directed By : Henry.I

Music By : Shankar Rangarajan

Produced By : Henry.I

 

கைபேசி பழுதுபார்க்கும் கடை வைத்திருக்கும் ஆடுகளம் முருகதாஸ், மனைவி மகளோடு வாடகை வீட்டில் வசிக்கிறார். கடையில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பம் நடத்தினாலும், தனது மகள் கேட்பதை எல்லாம் இல்லை என்று சொல்லாமல் வாங்கி கொடுத்துவிடுவார். ஆனால், அவருடைய மனைவி வெலீனா குடும்ப நிலையை புரிய வைத்து மகளை வளர்க்க வேண்டும் என்று முருகதாஸுக்கு அறிவுரை சொன்னாலும் அதை ஏற்காமல் மகளை செல்லமாக வளர்க்கிறார்.

 

இதற்கிடையே, பள்ளியில் படிக்கும் மாணவனின் பிறந்தநாளுக்காக அவனது வீட்டுக்கு போகும் சிறுமி பிரதிக்‌ஷா, ஆடம்பரமான அந்த வீட்டை போல் தனக்கும் ஒரு வீடு வாங்கி கொடுக்க வேண்டும் என்று தனது தந்தையிடம் கேட்கிறார். தனது மகள் விரும்பியதை இல்லை என்று சொல்லி ஏமாற்ற மனம் இல்லாத முருகதாஸ், வீடு வாங்கி கொடுப்பதாக உறுதியளிக்கிறார்.

 

அறியாத வயதில் தெரியாமல் ஆசைப்பட்ட மகள் அதை சில நாட்களுக்கு பிறகு மறந்துவிடுவாள் என்று முருகதாஸ் நினைக்க, பிரதிக்‌ஷாவோ சொந்த வீடு ஆசையை மனதில் வளர்த்துக்கொண்டு எந்த நேரமும் அதே நினைவாகவே இருக்கிறார். வீட்டில் இருக்கும் பொருட்களுக்கான மாத தவணை கட்ட முடியாமல் கஷ்ட்டப்படும் முருகதாஸ், தனது மகளின் மிகப்பெரிய ஆசையை நிறைவேற்றினாரா? இல்லையா? என்பது தான் ‘ராஜாமகள்’ படத்தின் மீதிக்கதை.

 

காமெடி வேடங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்த ஆடுகளம் முருகதாஸ், முதல் முறையாக கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். என்ன தான் ஏழ்மையான வாழ்க்கையாக இருந்தாலும், பிள்ளைகள் ஆசைப்பட்டதை வாங்கிக்கொடுக்க வேண்டும் என்ற சராசரி தந்தையாக அமர்க்களமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருக்கும் முருகதாஸ், ஒரு கட்டத்தில் தன்னால் முடியாது என்பதை மகளுக்கு புரிய வைக்காமல், பொய்க்கு மேல் பொய்யாக சொல்லும் காட்சிகளில் அவர் மீது கடும்கோபம் வர வைக்கிறார்.

 

மகள் மறந்துவிடுவார் என்று நினைத்து மிக சாதாரணமாக வீடு வாங்கிடலாம் என்று சொல்பவர் நாளுக்கு நாள் சொந்த வீடு வாங்குவதில் மகள் காட்டும் ஆர்வத்தை பார்த்து ஆடிப்போகும் காட்சிகளிலும், மகளை பார்க்காமல் தவிர்த்துவிட்டு பிறகு அழும் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பு மூலம் கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்.

 

கதையின் நாயகன் முருகதாஸ் என்றால், கதையின் நாயகியாக பிரமிக்க வைத்திருக்கிறார் சிறுமி பிரதிக்‌ஷா. தந்தையின் செல்லமாக வளரும் அவர் வாடகை வீடு என்றால் என்ன?, சொந்த வீடு என்றால் என்ன? என்று விளக்கம் கேட்டுவிட்டு, நாமும் சொந்த வீடு வாங்க வேண்டும் என்று தந்தையிடம் அப்பாவியாக கேட்கும் காட்சி, சொந்த வீடு கனவோடு வாழும் பிள்ளைகளை பிரதிபலிக்கிறது. தான் இருப்பது தனது வீடு அல்ல என்பதை தெரிந்துக்கொள்ளும் போது அவர் காட்டும் ரியாக்‌ஷன், அதே சமயம் அப்பா வீடு வாங்கிவிட்டதாக சொன்னவுடன், பள்ளியில் சக மாணவர்களிடம் பந்தா காட்டுவது என இந்த வயதில் இப்படி ஒரு நடிப்பா! என்று வியக்க வைக்கிறார். 

 

முருகதாஸின் மனைவியாக நடித்திருக்கும் வெலீனா, உண்மை நிலை தெரியாமல் ஆசைப்படும் மகள், அறியாமல் ஆசைப்படும் மகளுக்கு புரிய வைக்காமல் செல்லம் கொடுக்கும் தந்தை இருவரையும் மிக இயல்பாக கடந்து செல்லும் கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் மகளின் ஆசையையும், தந்தையின் பொய்யையும் அலட்சியமாக பார்க்கும் வெலீனா, ஒரு கட்டத்தில் மகளின் ஆசையை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று கணவனுக்கு தைரியம் கொடுத்து அவருடன் பயணிக்கும் காட்சிகள் நம்பிக்கை கொடுக்கிறது.

 

முருகதாஸின் நண்பராக நடித்திருக்கும் பக்ஸ் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். மகனின் அறியாமையை விமர்சித்தாலும் ஒரு கோடியில் அவர் வீடு வாங்கிவிட்டார் என்று சிறுமி சொன்னவுடன், ஊரில் இருந்து கிளம்பி வந்து மல்லுக்கட்டும் முருகதாஸின் அம்மா வேடத்தில் நடித்திருப்பவர் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் மற்றும் அவர்களது  நடிப்பு கதைக்கு உயிரோட்டத்தை கொடுத்திருக்கிறது.

 

நிக்கி கண்ணனின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றபடி பயணித்திருப்பதோடு, கதாபாத்திரங்களையும், கதைக்களத்தையும் மக்கள் மனதில் பதிய வைக்கிறது.

 

சங்கர் ரங்கராஜணனின் இசை காட்சிகளுக்கு கூடுதல் வலு சேர்க்கவில்லை என்றாலும், கதையை திசை திருப்பாமல் பயணித்திருக்கிறது.

 

எழுதி இயக்கியிருக்கும் ஹென்றி.ஐ, எதார்த்த வாழ்க்கையை மீறிய ஒரு கற்பனையை கதையாக்கி, திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார். 

 

ஏழையாக இருந்தாலும் தனது பிள்ளைகளை ராஜா போன்று வளர்க்க தந்தையர்கள் ஆசைப்படுவது சகஜமான ஒன்று தான். ஆனால், அதற்கான எல்லையை தாண்டும் போது, பிள்ளைகளுக்கு வாழ்க்கையின் உண்மையை புரிய வைக்கும் எதார்த்தத்தில் இருந்து முருகதாஸ் விலகி செல்லும் போது படம் நமக்கு சற்று சலிப்படைய செய்கிறது.

 

இருந்தாலும், பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் தவிக்கும் தந்தையின் வலியை மிக அழுத்தமாக பதிவு செய்து படத்தை நம் மனதுக்குள் கடத்திவிடுகிறார் இயக்குநர் ஹென்றி.ஐ.

 

மொத்தத்தில், ‘ராஜாமகள்’ எதார்த்தை மீறிய கற்பனையாக இருந்தாலும், கதாபாத்திரங்களின் நடிப்பால் கவனம் ஈர்க்கிறது.

 

ரேட்டிங் 3/5