Latest News :

மாயவன் விமர்சனம்

ca556e38b76014e81d05b9998a66eede.jpg

Casting : Sundeep Kishan, Lavanya Thiripathi, Daniel Balaji, Jackie Sheraf

Directed By : CV Kumar

Music By : Gibran

Produced By : CV Kumar

 

மந்திர, தந்திரத்தால் கூடுவிட்டு கூடு பாய்வதை காட்டிய சினிமாவில், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் மூளை சம்மந்தமான ஆராய்ச்சியின் மூலம் கூடுவிட்டு கூடு பாயும் முறையை சொல்லியிருக்கும் படமே ‘மாயவன்’.

 

போலீஸான சந்தீப் திருடனை பிடிக்க துரத்தும் போது ஒரு கொலை சம்பவத்தை நேரில் பார்க்கிறார். அந்த கொலையாளியை பிடிக்கும் முயற்சியில் இறங்கும் சந்தீப், மரணத்தின் விளிம்புக்கு சென்று திரும்புகிறார். சிகிச்சை முடிந்து மீண்டும் போலீஸ் பணியில் சேரும் போது, மருத்துவ அலோசனை பெற மேலதிகாரி அறிவுறுத்திகிறார். அதன்படி, மனநல மருத்துவரான ஹீரோயின் லாவண்யா திரிபாதியிடம் சந்தீப், மருத்துவ ஆலோசனை பெற, அவரோ இன்னும் சில மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று கூறுகிறார். ஆனால், அதை கேட்காமல் வேலைக்கு போகும் சந்தீப், மீண்டும் ஒரு கொலையை பார்க்க, அந்த கொலையும் முதல் கொலை சாயலிலேயே இருக்க, சந்தீப் மன அழுத்தத்தில் மாட்டிக்கொள்கிறார். அவருக்கு லாவண்யா திரிபாதி வைத்தியம் பார்க்கிறார்.

 

பிறகு மீண்டும் சந்தீப் பணிக்கு திரும்பும் போது, அடுத்தடுத்த கொலைகள் அறங்கேற அனைத்தும், முதல் கொலை பாணியிலேயே இருக்க, அதன் பின்னணி குறித்து கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் சந்தீப், அதனை கண்டுபிடித்தாரா?, கொலையாளி யார்? என்பது தான் ‘மாயவன்’ படத்தின் கதை.

 

தயாரிப்பாளராக பல வெற்றிப் படங்களை கொடுத்த சி.வி.குமார், இயக்குநராக ரசிகர்களுக்கு பிடித்த ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

 

நமது நினைவுகளை வைத்து கூடுவிட்டு கூடு பாய முடியும் என்பதை மூளை சம்மந்தமான ஆராய்ச்சி மூலம் விளக்கியிருக்கும் இயக்குநர் சி.வி.குமார், திரைக்கதையையும், காட்சிகளையும் ரொம்ப டீட்டய்லாக கையாண்டிருப்பது படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

 

போலீஸ் வேடத்திற்கு ஏற்ற கம்பீரத்துடன் சந்தீப் இருந்தாலும், போலீஸுக்கு உண்டான அந்த ஆக்ரோஷம் சற்று குறைவாக இருப்பது போல தோன்றுகிறது. அதேபோல், அவரது ஒட்டு மீசையும் சற்று உறுத்துகிறது. மற்றபடி கதாபாத்திரற்கு ஏற்ற நடிகராக இருப்பவர், தனது பணியையும் சிறப்பாக செய்திருக்கிறார்.

 

கமர்ஷியல் கதாநாயகியாக அல்லாமல் கதைக்கு ஏற்ற நாயகியாக நடித்துள்ள லாவண்யா திரிபாதியின் வசன உச்சரிப்பு சற்று எடுபடாமல் போனாலும், நடிப்பால் ஸ்கோர் செய்திருக்கிறார்.

 

டேனியல் பாலாஜியின் வேடமும், நடிப்பும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தாலும், அவரது கதாபாத்திரத்தை இயக்குநர் குறைவாக பயன்படுத்தியிருப்பது போலவே தோன்றுகிறது. இதே நிலை தான் ஜாக்கி ஷராப்புக்கும். படத்தில் நடித்த பிற நடிகர்களான மைம் கோபி, பகவதி உள்ளிட்ட பலரும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக உள்ளார்கள்.

 

இதமான பாடல்களை கொடுத்திருக்கும் ஜிப்ரான், பின்னணி இசையில் அதிரடியை காட்டியிருக்கிறார். கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவில் படம் முழுவதும் பரபரப்பு நிறைந்திருக்கிறது. இடியாப்ப சிக்கல் திரைக்கதையாக இருந்தாலும், ரசிகர்கள் எந்தவிதத்திலும் குழப்பம் அடையாமல், பார்த்து பார்த்து கத்திரியை பயன்படுத்தியிருக்கிறார் எடிட்டர் லியோ ஜான் பால்.

 

மூளை விஞ்ஞானத்தை மையமாக வைத்து இயக்குநர் சி.வி.குமார், உருவாக்கியிருக்கும் திரைக்கதையும், காட்சிகளும் வித்தியாசமாக இருப்பதோடு, விறுவிறுப்பாகவும் இருக்கிறது. அடுத்த காட்சி எப்படி இருக்கும், என்று ரசிகர்கள் யூகித்துவிட முடியாதபடி காட்சிகளை நகர்த்தியிருக்கும் இயக்குநர் முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் திரில்லர் படமாக மட்டுமே திரைக்கதையை கையாண்டிருக்கிறார். காதல், காமெடி என்ற கமர்ஷியல் விஷயங்களை துளியளவும் டச் செய்யாமல், தான் சொல்ல வந்ததை மட்டுமே சொல்ல முடிவு செய்து, படம் முழுவதும் அவர் எடுத்துள்ள மூளை மற்றும் அதை சார்ந்த ஆராய்ச்சி பாடத்தால், சில இடங்களில் ரசிகர்கள் சோர்வடைந்துவிடுகிறார்கள்.

 

இருந்தாலும், ’மாயவன்’ யார்?, எதற்காக இப்படி செய்கிறார்?, என்ற கேள்விகள் படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு தொற்றிக் கொள்ளச் செய்யும் விதத்தில் இப்படத்தை இயக்கியிருக்கும் சி.வி.குமார், இயக்குநராக வெற்றி பெற்றுவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

 

ஜெ.சுகுமார்