Latest News :

’மாமன்னன்’ திரைப்பட விமர்சனம்

c5022dd7db696d7d65c0f079f070e318.jpg

Casting : Udhayanidhi Stalin, Vadivelu, Fahadh Faasil, Keerthy Suresh, Lal, Vijayakumar, Raveena Ravi, Azhagam Perumal, Geetha Kailasam, Sunil

Directed By : Mari Selvaraj

Music By : A. R. Rahman

Produced By : Red Giant Movies

 

சமூகநீதி சமத்துவ மக்கள் கழகத்தின் மாவட்ட செயலாளரான பகத் பாசில் ஆதிக்க வர்க்கத்தை சேர்ந்தவர். அதே கட்சியின் எம்.எல்.ஏ-வான வடிவேலு பட்டியலினத்தை சேர்ந்தவர். எம்.எல்.ஏ-வாக இருந்தாலும் வடிவேலுவை தனக்கு கீழ் வைப்பதே தன்னுடைய அதிகாரத்திற்கான அடையாளம் என்று பகத் பாசில் நினைக்க, அது தவறு என்று அவருக்கு புரிய வைக்கிறார் வடிவேலுவின் மகனான உதயநிதி. அதை எப்படி செய்கிறார் என்பது தான் ‘மாமன்னன்’ படத்தின் கதை.

 

உதயநிதி இடத்தில், அவரது கல்லூரி தோழி கீர்த்தி சுரேஷ், ஏழை மாணவர்களுக்கான இலவச கல்வி மையத்தை நடத்தி வருகிறார். அவருடைய இந்த நடவடிக்கையால் பாதிப்படையும் பகத் பாசிலின் அண்ணனான சுனில், கல்வி மையத்தை சேதப்படுத்தி விடுகிறார். அதனால் உதயநிதிக்கும், சுனிலுக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. பிரச்சனையை தீர்க்க வடிவேலுவையும், உதயநிதியையும் பேச்சு வார்த்தைக்கு அழைக்கும் பகத் பாசில், வடிவேலுக்கு உரிய மரியாதை கொடுக்காமல் அவமதிக்கிறார். அதை பார்த்து கோபமடையும் உதயநிதி பகத் பாசிலை அடித்து விட, கட்சியில் மோதல் ஏற்படுகிறது. இதனால் வேறு ஒரு கட்சியில் பகத் பாசில் இணைந்து விடுகிறார்.

 

சட்டசபை தேர்தல் வருகிறது. பகத் பாசில் தனது ஆதிக்க வர்க்கத்தின் உதவியோடு தனது அதிகாரத்தை தக்க வைக்க தேர்தலில் வடிவேலுவை தோற்கடிக்க முயற்சிக்கிறார். அதே தேர்தல் மூலம் அதிகாரம் இருந்தும் தனது அப்பாவை அடிமையாக நினைத்த பகத் பாசிலின் ஆதிக்க எண்ணத்தை அழிப்பதற்கான முயற்சியில் ஈடுபடும் உதயநிதி, இறுதியில் பகத் பாசில் மட்டும் அல்ல, மாநிலத்தின் முதலமைச்சரே தனது தந்தைக்கு மரியாதை கொடுப்பதற்கான ஒரு அசத்தலான விசயத்தை செய்கிறார். அது என்ன? அதை எப்படி செய்கிறார்? என்பது தான் ‘மாமன்னன்’.

 

ஆதிக்க வர்க்கம், பட்டியலின மக்கள் என்றதுமே இயக்குநர் மாரி செல்வராஜ் எப்படிப்பட்ட கதையை சொல்லியிருப்பார் என்பதை யூகித்து விடலாம். ஆனால், அதை தற்காலத்து அரசியலோடு சேர்த்து, அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ள கூடிய விதத்தில் மிக நேர்த்தியாக சொல்லி மிரட்டியிருக்கிறார்.

 

ஒரு தனிமனிதனின் கொலை வெறி 400 குடும்பங்களின் கெளரவமாக மாறியது எப்படி? என்ற கேள்வியே இயக்குநர் மாரி செல்வராஜ் என்ன சொல்ல வருகிறார், மக்களுக்கு எதை புரிய வைக்க முயற்சிக்கிறார் என்பது தெளிவாக புரிகிறது.

 

”உன் அப்பாவை உட்கார வைக்காமல் இருப்பது எனது அதிகாரம், உன்னை உட்கார சொல்வது எனது அரசியல்” என்ற வசனத்தின் மூலம் தங்களது அதிகாரத்தை காப்பாற்றிக்கொள்ள வாக்கு அரசியல் மட்டும் அல்ல ஆதிக்க வர்க்கம் என்ற அரசியலையும் பலர் செய்து வருவதை சாட்டையடியாக சொல்லியிருக்கும் இயக்குநர் மாரி செல்வராஜ், தற்போதைய நவீன காலகட்டத்திலும், சிலர் இன்னமும் தங்களது அதிகாரத்திற்காக சாதியை தவறாக பயன்படுத்துவதை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

 

மாரி செல்வராஜின் அழுத்தமான திரைக்கதைக்கு நாயகன் உதயநிதி, வடிவேலு, பகித் பாசில் ஆகிய மூன்று பேரும் மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார்கள். 

 

உதயநிதியின் அமைதியான முகமும், ஆக்ரோஷமான உணர்வும் அதை அவர் வெளிப்படுத்திய விதமும் அவருடைய கதாபாத்திரத்தின் வலிமையையும், வலியையும் ரசிகர்களிடம் எளிதாக கொண்டு சேர்த்துவிடுகிறது. தன்னை அடக்கி ஆள நினைப்பவர்களுக்கு எதிராக உதயநிதி வெகுண்டெழும்போதெல்லாம் திரையரங்கில் கைதட்டல் சத்தம் காதை பிளக்கிறது.

 

உதயநிதியின் அப்பாவாக நடித்திருக்கும் வடிவேலு தனது அசத்தலான நடிப்பு மூலம் மாமன்னன் என்ற கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். அதிகாரம் இருந்தும் தன் ஆழ் மனதுக்குள் இருக்கும் பயத்தால் அவர் தடுமாறும் காட்சியில் நடிப்பில் அசத்தியிருப்பவர், “மண்ணாக இருந்த என்னை என் மகன் மாமன்னனாக மாற்றி விட்டான்” என்று சொல்லும் இடத்தில் உணர்ச்சிகரமான நடிப்பால் கவர்கிறார்.

 

வில்லனாக இருந்தாலும் நடிப்பில் நாயகனாக ஜொலித்திருக்கிறார் பகத் பாசில். தனது அதிகாரத்தை தக்க வைப்பதற்காக அவர் காட்டும் ஆக்ரோஷம் மிரட்டல். அதிகாரத்தையும், அரசியலையும் பிறர் மீது அவர் பயன்படுத்தும் விதம் தற்போதைய காலக்கட்ட சாதி அரசியலை வெட்ட வெளிச்சமாக்குகிறது.

 

கதையோடு பயணித்தாலும் கீர்த்தி சுரேஷுக்கு அவ்வளவு முக்கியத்தும் கொடுக்கப்படவில்லை. இருந்தாலும், கிடைத்த வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்தி “நானும் இருக்கிறேன்” என்று அடிக்கடி நமக்கு நினைவுப்படுத்துகிறார்.

 

இயக்குநர் மாரி செல்வராஜின் உணர்ச்சிகரமான படைப்புக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை உயிர் கொடுத்திருக்கிறது. பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டுமே மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருப்பதோடு, மெதுவாக நகரும் காட்சிகளை கூட ரஹ்மானின் பின்னணி ரசிகர்களின் கவனம் சிதறாமல் கவனிக்க வைக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், படத்தின் முக்கியமான மூன்று கதாபாத்திரங்கள் மற்றும் அவர்கள் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கு மூன்று விதமான வண்ணங்களை பயன்படுத்தி கவனிக்க வைத்திருக்கிறார். படத்தில் நடித்திருக்கும் நட்சத்திரங்கள் மற்றும் கதைக்களத்தை காட்சிப்படுத்திய விதம் நம் கண்கள் திரையை விட்டு அகலாத வகையில் இருக்கிறது.

 

மாரி செல்வராஜின் படம் எப்படி இருக்கும் என்பதை படத்தின் ஆரம்ப காட்சி நமக்கு உணர்த்துவது போல், இரண்டாம் பாதியில் என்ன நடக்கப் போகிறது என்பதை நம்மால் யூகிக்க முடிந்தாலும், காட்சிகளை தொய்வில்லாமல் தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் செல்வா ஆர்.கே.

 

கலை இயக்குநர் மற்றும் ஸ்டண்ட் இயக்குநர் ஆகியோரது பணியும் கவனம் பெறுகிறது.

 

பட்டியலின மக்களின் வலிகளுக்கான மருந்தாக காட்சிகளையும், வசனத்தையும் வடிவமைத்திருக்கும் இயக்குநர் மாரி செல்வராஜ், அதிகாரத்தை குடும்ப சொத்தாக நினைத்து தலைமுறை தலைமுறையாக சக மனிதனை அடக்கி ஆள நினைப்பவர்களுக்கு,  தற்போதைய தலைமுறை அந்த எண்ணத்தை ஏற்றுக்கொள்ளாமல் அடித்து நொறுக்கிவிடும் என்பதை சாட்டையடியாக சொல்லியிருக்கிறார். 

 

ஏற்கனவே இயக்குநர் மாரி செல்வராஜின் படத்தில் பார்த்தே அதே கதைக்கரு தான் என்றாலும் அதற்கு திரைக்கதை அமைத்து சொன்ன விதம் புதிதாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. சில இடங்களில் திரைக்கதை மெதுவாக நகர்வது குறையாக இருந்தாலும், பின்னணி இசை மற்றும் நடிகர்களின் நடிப்பு அந்த குறையை மறைத்துவிடுகிறது. 

 

பட்டியலின மக்களுக்கு ஆதரவான அரசியல் பேசும் படம் என்றாலும், தற்போதைய நவீன உலக இளைஞர்கள் சாதி பாகுபாடு என்பது ஒட்டு மொத்த சமுதாயத்திற்கு அழிவை உண்டாக்கும் என்பதை புரிந்துக்கொண்டார்கள் என்பதையும், பழைய பஞ்சாங்கத்தை பற்றி பேசும் சிலர் இன்னமும் தங்களது சுய லாபத்திற்காக வர்க்கப்புகழ் பாடி மக்களை தவறான பாதைக்கு அழைத்து செல்கிறார்கள், என்பதையும் சொல்லி ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் தேவையான ஒரு திரைப்படமாக மாரி செல்வராஜ் இயக்கியிருக்கிறார்.

 

மொத்தத்தில், ”பிறப்பினால் அனைவரும் சமம் செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும்”, என்ற உண்மையை இயக்குநர் மாரி செல்வராஜ் மீண்டும் ஒரு முறை சத்தமாகவும், சரவெடியாகவும் சொல்லியிருக்கிறார்.

 

இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் நாயகன் உதயநிதி ஸ்டாலினுக்கு இந்த ‘மாமன்னன்’ மகுடம் சூட்டும்.

 

ரேட்டிங் 4/5