Latest News :

‘இன்ஃபினிட்டி’ திரைப்பட விமர்சனம்

2b1573d453e13078df9bcbab4c6a728e.jpg

Casting : Natty Natarajan, Vidhya Pradheep, Munishkanth, Tha.Muruganandham, Vinod Sagar, Charles Vinoth, Nikitha, Jeeva Ravi, Sindhuja, Adhavan

Directed By : Sai Karthik

Music By : Balasubramanian.G

Produced By : Menpani Productions - V.Manikandan, U.Prabhu, K.Arputharajan, D.Balabaskaran

 

சென்னையில் ஒரே நாளில் இரண்டு கொலைகள் நடக்கிறது. அந்த கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டரும் கொலை செய்யப்படுகிறார். அதனால், அந்த வழக்கு சிபிஐ  வசம் போகிறது. சிபிஐ அதிகாரி நட்டி நட்ராஜன் கொலை வழக்கை விசாரிக்க தொடங்கும் போது, ஒரு பெண்ணின் கொலைக்கும், இந்த வழக்குக்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடிப்பதோடு, இந்த தொடர் கொலைகளுக்கான பின்னணி என்ன? , கொலையாளி யார்? என்பதை எப்படி கண்டுபிடிக்கிறார்? என்பதை முடிவில்லா பிரச்சனையோடு சொல்வதே ‘இன்பினிட்டி’.

 

ஏற்கனவே சில படங்களில் இப்படிப்பட்ட விசாரணை அதிகாரி வேடத்தில் நட்டி நட்ராஜன் நடித்திருப்பதால் அவரை இந்த வேடத்திற்கு தேர்வு செய்திருக்கிறார்கள். அவரும் வழக்கமான தனது பாணியில், வழக்கமான நடிப்போடு வலம் வருகிறார். ஒவ்வொரு காட்சியிலும் தன்னை சிபிஐ அதிகாரி என்று நட்டி சொல்லும் போது தான் படம் பார்ப்பவர்களுக்கும் அவர் சிபிஐ என்று நினைவு வருகிறது. 

 

சிபிஐ அதிகாரி தான் இப்படி என்றால், அவருடைய அலுவலகத்தில் நட்டிக்கு உதவியாளர்களாக பணியாற்றும் முருகானந்தம் அவரை “அண்ணா” என்று அழைப்பதெல்லாம் கொஞ்சம் அல்ல ரொம்பவே ஓவராக இருக்கிறது.

 

காவலர் வேடத்தில் நடித்திருக்கும் முனீஷ்காந்தை வைத்து ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், முனீஷ்காந்த் என்னவோ ரசிகர்களை காட்சிக்கு காட்சி கடுப்பேற்றிவிட்டு, படத்தில் அவர் மட்டும் சிரித்துக்கொண்டிருக்கிறார்.

 

மருத்துவர் வேடத்தில் நடித்திருக்கும் நித்யா மேனன், சாந்தமான முகம், அமைதியான நடிப்பு என்று அறிமுகமானாலும், திடீரென்று வரும் ட்விஸ்ட்டில் சரவெடியாக வெடிக்கிறார்.

 

முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் அறிமுக நடிகர் ஆதவன், கவனம் ஈர்க்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், நடிப்பில் தடுமாறியிருக்கிறார். 

 

சார்லஸ் வினோத், ஜீவா ரவி, சிந்துஜா, கிருஷ்ணராஜு என்று படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர், நடிகைகளில் சிலர் தங்கள் வேலையை சரியாக செய்திருந்தாலும், பலர் குறையாகவே செய்திருக்கிறார்கள்.

 

Infinity Movie Review

 

இன்ஃபினிட்டி என்றால் முடிவில்லாதது அல்லது எல்லையற்றது என்று அர்த்தம். அப்படிப்பட்ட ஒரு பிரச்சனையை சுற்றி தான் தொடர் கொலைகள் நடக்கிறது. அந்த பிரச்சனை என்ன? என்ற கேள்வி ஒன்று மட்டுமே சுவாரஸ்யமாக இருக்கிறது, அதை தவிர மற்ற அனைத்தும் பெரும் குறையாக இருக்கிறது.

 

குறிப்பாக இயக்குநர் சாய் கார்த்திக் விசாரணை காட்சிகளையும், சிபிஐ அலுவலகம் மற்றும் அதனை சுற்றி நகரும் காட்சிகளை சிறுபிள்ளைத்தனமாக கையாண்டிருக்கிறார். அதிலும், மூன்று கொலைகள் நடந்த இரண்டு நாட்களிலேயே ஒரு வழக்கு சிபிஐ வசம் செல்வதெல்லாம் குழந்தைகள் கூட ஏற்றுக்கொள்ளாத லாஜிக் மீறலாக இருக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் சரவணன் ஸ்ரீ மற்றும் இசையமைப்பாளர் பாலசுப்பிரமணியன்.ஜி கதைக்கு ஏற்ப பயணித்திருந்தாலும், க்ரைம் த்ரில்லர் ஜானர் திரைப்படத்திற்கான எந்த ஒரு தனித்துவமான விஷயத்தையும் செய்யாமல் மிக எளிமையாக பணியாற்றியிருக்கிறார்கள்.

 

கதையின் ஆரம்பத்தில் ஒரு பெண் கொலையை காட்டும் இயக்குநர் அதன் பிறகு நடக்கும் தொடர் கொலைகளை மையப்படுத்தி திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார். ஆனால், திடீரென்று பெண் கொலைக்கும் தொடர் கொலைகளுக்கும் தொடர்பு இருப்பதாக சொன்னாலும், படத்தின் முடிவில் என்னவோ அந்த பெண் கொலையும், அதற்கான காரணமும் தேவையில்லாத ஒன்றாக இருப்பதோடு, அண்ணன் - தங்கை உறவை கொச்சைப் படுத்தும் விதமாகவும் இருக்கிறது.

 

ஏகப்பட்ட குறைகளுடன் இந்த ‘இன்ஃபினிட்டி’-யின் முதல் பாகத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் சாய் கார்த்திக், இரண்டாவது பாகத்திலாவது குறைகளை களைந்து ஒரு முழுமையான க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் படத்தை கொடுப்பார் என்று நம்புவோம்.

 

ரேட்டிங் 2.5/5