Latest News :

’அநீதி’ திரைப்பட விமர்சனம்

8c425b87d9a50ac3193a2ee0d2c71d86.jpg

Casting : Arjun Dass, Dushara Vijayan, Kaali Venkat, Vanitha vijayakumar, Arjun Chidambaram, Bharani, Shaa raa

Directed By : G.Vasanthabalan

Music By : GV Prakash Kumar

Produced By : M.Krishna Kumar, Murugan Gnanavel, Varadharajan Manickam, G.Vasanthabalan

 

சிறு வயதில் நடந்த கசப்பான சம்பவத்தால் மன ரீதியாக பாதிக்கப்பட்டும் நாயகன் அர்ஜுன் தாஸ், மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே, நாயகி துஷாரா விஜயனுடனான காதல் அவரது மனநிலையை மாற்றி அவரை சகஜ நிலைக்கு கொண்டு வரும் நிலையில், சூழ்நிலை காரணமாக அர்ஜுன் தாஸ் மற்றும் துஷாரா விஜயன், ஒரு குற்ற சம்பவத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். அதனால் அவர்களது வாழ்க்கை திசை மாறுவதோடு, எளியவர்களுக்கு சட்டம் எப்படி அநீதி இழக்கப்படுகிறது என்பதை சொல்வது தான் ‘அநீதி’ படத்தின் கதை.

 

எளியவர்களின் வாழ்க்கையையும், அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியையும் தொடர்ந்து தனது படங்களில் பதிவு செய்து வரும் இயக்குநர் வசந்தபாலன், இந்த படத்திலும் எளியவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து, உழைப்பாளிகளுக்கு முதலாளிகள் இழைக்கும் அநீதிகள் பற்றி அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

 

நாயகனாக நடித்திரும் அர்ஜுன் தாஸ், பலம் வாய்ந்த கதாபாத்திரத்தை மிக கவனமாக கையாண்டு கவனம் ஈர்க்கிறார். எளிய மக்களை இழிவாக நடத்துபவர்களை பார்த்தால் அவர்கள் மீது கொலைவெறி கொள்வது, யாருடனும் பேசாமல் இருக்கமாக இருப்பது, காதலிக்க தொடங்கிய உடன் தனது மனநிலையில் நடைபெறும் மாற்றத்தை வெளிப்படுத்துவது, காதலி சொல்லால் கலங்கி நிர்பது என அனைத்து இடங்களிலும் மிக சிறப்பாக நடித்திருப்பவர், தனது அப்பாவை நினைத்து அழும் காட்சியில், பார்வையாளர்களையும் கண் கலங்க வைக்கிறார். ஆக்‌ஷன் படங்களை மட்டும் இன்றி, காதல் மற்றும் எமோஷனல் படங்களையும் தன்னால் சிறப்பாக கையாள முடியும் என்பதை அர்ஜுன் தாஸ் இப்படத்தின் மூலம் நிரூபித்துள்ளார்.

 

நாயகியாக நடித்திருக்கும் துஷாரா விஜயன், பக்கத்து வீட்டு பெண் போல் இருப்பதோடு, கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.

 

காளி வெங்கட், சாந்தா தனஜெயன், வனிதா விஜயகுமார், அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, நடிப்பிலும் முத்திரை பதித்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் எட்வின் சாகேவின் ஒளிப்பதிவு கதாபாத்திரங்களின் எளிமையை அழகாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.

 

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டுமே திரைக்கதைக்கு வலு சேர்த்திருக்கிறது.

 

படத்தொகுப்பாளர் ரவிகுமார், கதையில் இருக்கும் வலிகளை மக்களிடம் கடத்துவதில் முக்கிய பங்கு வகித்திருக்கிறது.

 

உழைக்கும் வர்க்கத்திற்கு முதலாளிகளால் இழைக்கப்படும் அநீதிக்கு என்ன தீர்வு? என்பதை பேசும் படத்தை நான் லைனர் முறையில் சொல்லியிருக்கும் இயக்குநர் வசந்தபாலன், முதல் பாதியை எதிர்பார்ப்புடன் நகர்த்தி சென்று, இரண்டாம் பாதியில் அர்ஜுன் தாஸ் பிளாஷ்பேக்கை சொல்லி ஒட்டு மொத்த ரசிகர்களையும் கலங்கடித்து விடுகிறார்.

 

எளியவர்களுக்கு இந்த சமூகத்தில் நீதி கிடைப்பதில்லை என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர், அவர்கள் கோபமடைந்தால் என்னவாகும் என்பதை சொல்லிய விதம் அதீத வன்முறையாக இருந்தாலும், அவர்களின் வலி அதைவிட பெரியது என்பதையும் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

 

முதல் பாதியில் சில இடங்களில் தொய்வு இருந்தாலும், இரண்டாம் பாதி மற்றும் அர்ஜுன் தாஸ் யார்? என்ற பிளாஷ்பேக் பகுதிகள் படத்தை விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் நகர்த்தி செல்கிறது. இறுதிக் காட்சி நெருங்கும் போது என்ன நடக்கப் போகிறது? என்ற எதிர்பார்ப்பு நம்மை சீட் நுணியில் உட்கார வைத்துவிடுகிறது.

 

மொத்தத்தில், எளியவர்களுக்கு நடக்கும் அநீதிக்கு எதிராக மீண்டும் ஒரு முறை உரக்க குரல் கொடுத்திருக்கிறர் இயக்குநர் வசந்தபாலன்.

 

ரேட்டிங் 3/5