Latest News :

‘பள்ளி பருவத்திலே’ விமர்சனம்

cab41269ce10030227f10a5895231001.jpg

Casting : Nanthan Ram, Venba, KS Ravikumar, Ponvannan, RK Suresh

Directed By : Vasudev Baskar

Music By : Vijay Narayanan

Produced By : D.Velu

 

அரசு பள்ளியின் தலைமை ஆசிரியராக இருக்கும் கே.எஸ்.ரவிகுமார் ஊரில் மரியாதையோடு வாழ்ந்து வருகிறார். அதே பள்ளியில் படிக்கும் அவரது மகனான ஹீரோ நந்தன் ராம், பள்ளி மாணவியான ஹீரோயின் வெண்பாவை காதலிக்கிறார். அவரது காதலுக்கு வெண்பா எதிர்ப்பு தெரிவித்தாலும், நந்தன் வெண்பாவை தொடர்ந்து பின் தொடர்கிறார். இது வெண்பாவின் தந்தையான பொன்வண்ணனுக்கு தெரியவர, தலைமை ஆசிரியர் மகன் என்பதால், அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைக்கிறார்.

 

இருந்தாலும் நந்தன் ராம், தொடர்ந்து வெண்பாவுக்கு காதல் தொள்ளைக் கொடுக்க, இதை அறியும் பொன்வண்ணன், நந்தன் ராமை கொலை செய்ய திட்டமிட, அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் ‘பள்ளிப் பருவத்திலே’ படத்தின் மீதிக் கதை.

 

பள்ளி மாணவ, மாணவி வேடத்திற்கு நந்தன் ராமும், வெண்பாவும் கச்சிதமாக பொருந்துகிறார்கள். நந்தன் சில இடங்களில் தடுமாறினாலும், வெண்பா எந்தவித தடுமாற்றமும் இன்றி நடித்திருக்கிறார். முதல் படத்திலேயே அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள நந்தன் ராம், தன்னால் முடிந்தவரை தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

 

கே.எஸ்.ரவிகுமார் பல படங்களில் நடித்திருந்தாலும், இதில் வித்தியாசப்படுவதோடு, நடிப்பில் வேறு ஒரு பரிணாமத்தை காட்டியிருக்கிறார். கலகலப்பான அம்மாவாக நடித்திருக்கும் ஊர்வசியின் வேடம் நடுத்தர தாய்மார்களை பிரதிபலிக்கிறது.

பொன்வண்ணன், ஆர்.கே.சுரேஷ் இருவரது வேடமும் பெண் பிள்ளை பெற்றவர்களின் பதபதப்பை திரையில் காட்டியிருக்கிறது. 

 

பள்ளிப் படிப்பின் போது ஏற்படுவது காதல் அல்ல என்பதை சொல்வதோடு, ஆணவக் கொலை பற்றியும் சொல்லியிருக்கும் இயக்குநர் வாசுதேவ் பாஸ்கர், ஆணவக் கொலை குறித்து படத்தில் அழுத்தமான காட்சிகளை வைத்திருக்கிறார். அதே சமயம், ஆணவக் கொலை எதற்காக நடத்தப்படுகிறது, என்ற காரணத்தை படத்தில் அழுத்தமாக சொல்ல தவறிவிட்டார்.

 

விஜய் நாராயணின் இசையும், வினோத் குமாரின் ஒளிப்பதிவும் திரைக்கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. 

 

காதல், காமெடி, செண்டிமெண்ட் என்று முதல் பாதி சுவாரஸ்யமாக நகர்ந்தாலும், படம் என்னவோ, எப்படா முடியும் என்று நினைக்க தோன்றுகிறது. படத்தில் வரும் பெரும்பாலான காட்சிகள் ரொம்ப பழசாக இருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலவீனமாக உள்ளது.

 

மொத்தத்தில், பழைய பாடத்தை புதிய முறையில் சொல்லிக் கொடுக்க முயற்சித்திருப்பதே ‘பள்ளி பருவத்திலே’

 

ஜெ.சுகுமார்