Latest News :

‘வெப்’ திரைப்பட விமர்சனம்

83da2ed1553db7c3456502a408c70643.jpg

Casting : Natty, Shilpa Manjunath, Motta Rajendran, Murali, Ananya Mani, Shaasvi Bala, Subhapriya Malar

Directed By : Haroon

Music By : Karthick Raja

Produced By : Velan Productions - VM. Munivelan

 

ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஷில்பா மஞ்சுநாத், சாஷ்வி பாலா, சுபபிரியா மலர் ஆகிய மூன்று பேரும் பல்வேறு போதை பழக்கத்திற்கு ஆளாகிறார்கள். இதற்கிடையே தனது நிறுவனத்தில் பணியாற்றும் புதிதாக திருமணம் ஆன அனன்யா மணியை பார்ட்டிக்கு அழைத்து சென்று மது பழக்கத்திற்கு ஆளாக்கி கும்மாளம் போடுகிறார்கள். மதுக்கூடத்தில் இருந்து மரண போதையுடன் வெளியே வரும் நான்கு பேரையும் நட்டி நட்ராஜ் கடத்தி ஒரு வீட்டில் அடைத்து வைக்கிறார். அவர்களை நட்டி ஏன் கடத்தினார்?, அந்த பெண்கள் அங்கிருந்து தப்பித்தார்களா?, இல்லையா? என்பதே ‘வெப்’ படத்தின் கதை.

 

சிலந்தி வலையில் சிக்கியது போல் நட்டியிடம் மாட்டிக்கொண்டு நான்கு பெண்களும் தவிப்பதை ’வெப்’ என்று சொல்லியிருக்கும் இயக்குநர் இளைஞர்களுக்கான நல்ல மெசஜை அழுத்தமாகவும், சஸ்பென்சாகவும் சொல்லியிருக்கிறார்.

 

சைக்கோத்தனம் கலந்த ஹீரோவாக நடித்திருக்கும் நட்டி நட்ராஜ், நடிப்பில் வித்தியாசத்தை காட்ட முயற்சித்திருந்தாலும், அவருடைய ரஜினி நடிப்பு அவ்வபோது எட்டிப்பார்த்து விடுகிறது. இருந்தாலும், தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ப மாறுபட்ட நடிப்பை கொடுத்து விட வேண்டும் என்று கடைசிவரை போராடுகிறார்.

 

சாஷ்வி பலா, சுபபிரியா மலர், அனன்யா மணி ஆகியோருடன் பல படங்களில் நாயகியாக நடித்திருக்கும் ஷில்பா மஞ்சுநாத்தும் சேர்ந்து ரகளை செய்திருக்கிறார். ஐடி துறையில் பணியாற்றும் பெண்கள் விடுமுறை கொண்டாட்டம் என்ற பெயரில் எப்படி கும்மாளம் அடிக்கிறார்கள், என்பதை பிரதிபலிங்கும் வேடங்களில் நேர்த்தியாக நடித்திருப்பதோடு, அந்த வேடத்திற்கு பொருத்தமான தேர்வாகவும் இருக்கிறார்கள்.

 

கொஞ்ச நேரம் வந்தாலும் சிரிக்க வைக்கும் நான் கடவுள் ராஜேந்திரன், முரளி உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர்களாக இருக்கிறார்கள்.

 

ஒரு  வீட்டுக்குள் கதை நடந்தாலும், அந்த உணர்வு ஏற்படாத வகையில் ஒளிப்பதிவாளர் கிரிஸ்டோபர் ஜோசப் காட்சிகளை படமாக்கியிருக்கிறார்.  பாடல் காட்சிகளை கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருப்பவர், அழுக்கு பங்களாவில் கடத்தி வைக்கப்பட்டிருந்தாலும் நான்கு நடிகைகளையும் அழகாக காட்டி ரசிக்க வைக்கிறார்.

 

கார்த்திக் ராஜாவின் இசையில், அருண் பாரதி, ஆர்ஜே விஜய் மற்றும் ஜெகன் கவிராஜ் ஆகியோரது வரிகளில் பாடல்கள் அனைத்தும் ஆட்டம் போட வைக்கும்படி இருக்கிறது. கார்த்திக் ராஜா பின்னணி இசையில் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம்.

 

சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படங்களின் வழகமான பாணியை பின்பற்றி காட்சிகளை தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் சுதர்சன்.ஆர், கதை சொல்லலில் சற்று வித்தியாசத்தை காட்டியிருக்கலாம். கலை இயக்குநர் அருண் சங்கர் துரையின் பணி கவனம் பெறுகிறது.

 

இயக்குநர் ஹாரூன், நல்ல மெசஜை சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் படமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், படத்தின் முதல் பாதி முழுவதும் பெண்களை கடத்தியது ஏன்? என்பதை சொல்லாமல் படத்தை நகர்த்தி செல்வது பார்வையாளர்களின் பொருமையை சோதிக்கிறது.

 

பெண்களை கடத்தியதற்கு பின்னணியில் ஒரு பிளாஷ்பேக் இருக்கும், அதில் நட்டி பாதிக்கப்பட்டவராக இருப்பார், என்ற நம் யூகத்திற்கு ஏற்ப அடுத்தடுத்த காட்சிகள் பயணிப்பது திரைக்கதையை தொய்வடைய செய்தாலும், இறுதியில் நம் யூகத்தை பொய்யாக்கும் விதத்தில் ஒரு திருப்புமுனையோடு கதையின் போக்கையே மாற்றி கைதட்டல் பெறுகிறார் இயக்குநர் ஹாரூன்.

 

நாகரீகம் என்ற பெயரில் திசை மாறும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான மெசஜை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் ஹாரூன், அதை இளைஞர்களுக்கு ஏற்ற வகையிலான கமர்ஷியல் படமாக கொடுக்க முயற்சித்ததில் சற்று தடுமாறியிருந்தாலும், இறுதியில் தான் சொல்ல வந்த விஷயத்தை ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார்.

 

மொத்தத்தில், இந்த வெப் இளைஞர்களுக்கு அட்வைஸாக மட்டும் இன்றி நல்ல கொண்டாட்டமாகவும் இருக்கிறது.

 

ரேட்டிங் 2.5/5