Latest News :

‘வேலைக்காரன்’ விமர்சனம்

7966d4a06fe5b5747f3f70e4d37113b1.jpg

Casting : Sivakarthikeyan, Nayanthara, Fahadh Faasil

Directed By : Mohan Raja

Music By : Aniruth

Produced By : RD Raja

 

காமெடி டிராக்கில் பயணித்து இளசுகளுடன் சிறுவர்களையும் கவர்ந்த சிவகார்த்திகேயன், சொல்லியிருக்கும் மெசஜ் தான் ‘வேலைக்காரன்’.

 

பல கொடிய பழக்கங்களால் இளைஞர் சமுதாயம் அழிவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்க, நமது அடுத்த சந்ததியான சிறுவர்களுக்கு நாமே விஷம் கொடுத்து வருகிறோம், என்ற விஷயத்தை உரக்க சொல்லியிருப்பது தான் ‘வேலைக்காரன்’ படத்தின் கதை.

 

சென்னை குடிசைப்பகுதியில் வசிக்கும் இளைஞரான சிவகார்த்திகேயன், அடி தடி, வெட்டு குத்து என்று இருக்கும் தனது பகுதி மக்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும், அவர்களை நல்வழிப்படுத்தி நல்ல வேலைக்கு அனுப்ப வேண்டும் என்றும் நினைக்கிறார். அதற்காக, தனது பகுதிக்கு என்று எப்.எம் ரேடியோ ஒன்றை தொடங்குபவர் அதன் மூலம், அனைவரிடமும் பேசி, தனது ஏரியா மக்களை திறுத்த முயல்கிறார். அதை பிடிக்காத அந்த ஏரியா ரவுடியான பிரகாஷ்ராஜ் எதிர்க்க ரேடியோவை மூடிவிட்டு வேலைக்கு போக முடிவு செய்யும் சிவகார்த்திகேயன், சேல்ஸ்மேன் வேலையில் சேருகிறார்.

 

மார்கெட்டிங் என்றால் என்ன?, அதன் சூட்சமங்கள் என்ன? போன்ற விஷயங்களை தனது அலுவலகத்தில் உள்ள மேலதிகரியான பகத் பாசிலிடம் கற்றுக் கொண்டு தனது திறமையை நிரூபிக்க களத்தில் இறங்க, அப்போது தான், தான் விற்கும் பொருளில் நஞ்சு இருப்பதை தெரிந்துக் கொள்பவர், தனது நிறுவன பொருட்களில் மட்டும் அல்ல, பல நிறுவனங்கள் விற்கும் உணவு பொருட்களில் பல விஷத்தன்மை கொண்ட ரசாயனங்கள் சேர்க்கப்படுவதோடு, அவை விளம்பர யுக்தியால் மக்களிடம் திணிக்கப்படுவதையும் தெரிந்துக் கொள்கிறார். இவைகளில் இருந்து மக்களை காப்பாற்ற சிவகார்த்திகேயன், மேற்கொள்ளும் முயற்சியும், அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா, என்பது தான் ‘வேலைக்காரன்’ படத்தின் கதை.

 

மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமான படங்கள் என்றாலே, போராட்டக் களம் நிச்சயம் உண்டு. ஆனால், இந்த படத்தில் போராட்டத்தை வித்தியாசமான முறையில் நடத்தியிருக்கும் இயக்குநர் மோகன் ராஜா, பெற்றோர்களுக்கும், சிறுவர்களுக்கும், பொருட்களை விற்பனை செய்யும் முதலாளி வர்க்கத்திற்கும் புத்தி சொல்லாமல், யார் நினைத்தால் இதுபோன்ற பொருட்கள் தயாரிக்கப்படுவது நிறுத்தப்படுமோ, அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். இந்த ஒரு விஷயத்திற்காகவே இந்த படத்தை பார்க்கலாம்.

 

காமெடியின் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்துக் கொண்ட சிவகார்த்திகேயன், சமூக விழிப்புணர்வு விஷயம் சொல்லும் ஹீரோவாக உருவடுத்திருப்பதோடு, கதைக்கு ஏற்ற ஹீரோவாக நடித்துள்ளார். சென்னை குடிசைப் பகுதி வாழ் இளைஞராக கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தும் சிவகார்த்திகேயன், தன் மீது இருந்த காமெடி என்ற இமேஜை மறைத்துவிட்டு புது சிவகார்த்திகேயனாக படம் முழுவதும் வலம் வந்திருக்கிறார்.

 

படத்தின் விளம்பரத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கும் நயந்தாரா, கதைக்காக சிறிது அளவுகூட பயன்படுத்தப்படவில்லை. இந்த வேடத்திற்கு நயந்தாரா அல்ல, சாதாரண ஜூனியர் ஆர்டிஸ்டை கூட போட்டிருக்கலாம். நயந்தாராவுக்கு மட்டுமா இந்த நிலை, ரோபோ சங்கர், ஆர்.ஜே.பாலாஜி, பிரகாஷ் ராஜ் என்று அனைவருக்கும் இதே நிலை தான். சிவகார்த்திகேயனுக்கு இணையான வேடத்தில் வில்லன் பகத் பாசில் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். இதுவரை தமிழ் சினிமாவில் பார்க்காத முகத்தை அந்த கதாபாத்திரத்தில் போட்டிருப்பது அந்த வேடத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

 

அனிருத்தின் இசையும், ராம்ஜியின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்திருப்பதைக் காட்டிலும், முத்துராஜியின் கலை அதிக பலத்தை கொடுத்திருக்கிறது. சென்னை குடிசைப் பகுதியை நம் கண் முன் நிறுத்தும் முத்துராஜுக்கு விருது கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

 

மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இப்படி ஒரு பிரம்மாண்டமான படமாக கொடுத்திருக்கும் இயக்குநர் மோகன் ராஜா, நல்லதை நல்லபடியாக சொன்னால் போதும் என்று நினைத்து மசாலாத்தனத்தை தவிர்த்திருக்கிறார். அதேபோல், சிவகார்த்திகேயனிடம் ரசிகர்கள் என்ன எதிர்ப்பார்ப்பார்களோ அதைக் காட்டாமல், சிவகார்த்திகேயனால் இப்படிப்பட்ட படங்களிலும் நடிக்க முடியும் என்று காட்டியிருக்கிறார்.

 

நல்ல விஷயத்தை சொல்லும் இயக்குநர் மோகன் ராஜா, சாமானிய மக்களுக்கும் புரிய வேண்டும் என்பதை சற்று மறந்திருப்பார் போல, அதனால் தான் ஆரம்பத்தில் படம் சிலருக்கு புரியாத புதிராக நகர, இடைவேளைக்கு பிறகே, தான் சொல்ல வந்ததை ரொம்ப தெளிவாக சொல்லியிருக்கிறார். அதேபோல், விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் அதை பரபரப்பான காட்சிகளோடு சொல்லாமல், வசனங்கள் மூலமாகவே சொல்லியிருப்பது ரசிகர்களின் பொருமையை சோதிக்கிறது. இருந்தாலும், பல வசனங்கள் அனல் தெறிப்பதோடு மக்களை யோசிக்க வைக்கிறது.

 

சிவகார்த்திகேயனை வித்தியாசமாக காட்டியிருப்பது, கமர்ஷியலை தவிர்த்திருப்பது, போன்ற முயற்சிகளால் படம் சற்று சலிப்பை ஏற்படுத்தினாலும், படத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் மக்கள் நிச்சயம் தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயமாக உள்ளது.

 

மொத்தத்தில், வேலைக்காரர்கள் மட்டும் அல்ல, முதலாளிகளும், வாடிக்கையாளர்களான பொதுமக்களும் பார்க்க வேண்டிய ஒரு தரமான படமாக இந்த ‘வேலைக்காரன்’ படத்தை இயக்குநர் மோகன் ராஜா கொடுத்திருக்கிறார். 

 

ஜெ.சுகுமார்