Latest News :

’உள்குத்து’ விமர்சனம்

457cdfcf0b385e18d8fe3e3d1efca0ab.jpg

Casting : Dinesh, Nanditha, Bala Saravanan, Dilip Subbarayan

Directed By : Karthick Raju

Music By : Justin Prabhakaran

Produced By : PK Film Factory

 

’திருடன் போலீஸ்’ என்ற வெற்றிப் படத்தை கொடுத்த இயக்குநர் கார்த்திக் ராஜு - தினேஷ் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் ‘உள்குத்து’ எப்படி என்பதை பார்ப்போம்.

 

சரத் லோகிதஸ்வாவும், அவரது மகன் திலீப் சுப்பராயணும் கந்து வட்டி, கட்ட பஞ்சாயத்து, கொலை என்று ரவுடி சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார்கள். இவர்களிடம் வட்டிக்கு பணம் வாங்கிவிட்டு திருப்பி கொடுக்கவில்லை என்றால் அது போலீசாக இருந்தாலும் போட்டுத்தள்ள தயங்க மாட்டார்கள்.

 

மீனவ குப்பங்கள் அனைத்திலும் இவர்கள் ராஜ்ஜியம் கொடிகட்டி பறக்க, அதில் ஒரு குப்பத்தில் மீன் வெட்டிக் கொடுக்கும் வேலை செய்யும் பால சரவணனிடம் ஹீரோ தினேஷ் தஞ்சம் அடைகிறார். ”எம்.பி.ஏ முடித்து ரிசல்டுக்காக காத்திருக்கிறேன், வீட்டு பிரச்சினையால் வீட்டை விட்டு வந்துவிட்டேன்”, என்று கூறும் தினேஷை பால சரவணன் தன்னோடு தங்க வைத்து, மீன் மார்க்கெட்டில் வேலையும் வாங்கிக் கொடுக்கிறார்.

 

இதற்கிடையே, பால சரவணனை அடிக்கும் திலீப் சுப்பராயணின் அடியாளை தினேஷ் பதிலுக்கு அடிக்க, அதை அறிந்த திலீப் சுப்பராயண், பால சரவணனை கொலை செய்ய முயற்சிக்கிறார். தினேஷ் அவரையும் வெளுத்து வாங்கி விட, கோபம் கொள்ளும் சரத் லோகிதஸ்வா தினேஷை போட்டுத்தள்ள திட்டமிடுகிறார். அதில் இருந்து எஸ்கேப்பாகும் தினேஷ், சரத் லோகிதஸ்வாவிடம் நல்ல பெயர் வாங்கி, திலீப் சுப்பராயணுக்கு நண்பராகிவிடுகிறார். திலீப் சுப்பராயணின் அடியாட்களே அவரை கொலை செய்ய முயற்சிக்க, அவர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காக அவரை போட்டில் கடலுக்கு அழைத்துச் செல்லும் தினேஷ், திலீப் சுப்பராயணை கொலை செய்துவிடுகிறார்.

 

திலீப் சுப்பராயணை போலீஸ் தான் கொன்று விட்டது என்று சரத் லோகிதஸ்வா நம்பிக் கொண்டிருக்க, தினேஷோ, ”போலீஸ் கொல்லவில்லை, வேறு யாரோ கொலை செய்திருக்கிறார்கள், அவர்களை நான் கண்டுபிடிக்கிறேன்”, என்று கூறி நாடகமாடுவதுடன், சரத் லோகிதஸ்வாவின் அடியாட்களை முகமுடியுடன் சென்று அடித்து வெளுக்கிறார். தினேஷ் ஏன் அப்படி செய்கிறார், உண்மையில் தினேஷ் யார்?, அவர் திலீப் சுப்பராயணை கொலை செய்ய என்ன காரணம்? என்பதே ‘உள்குத்து’ படத்தின் கதை.

 

உள்ளுக்குள் ஒன்றை வைத்துக்கொண்டு, வெளியே வேறு மாதிரியாக நடக்கும் இந்த உள்குத்து கதை சாதாரணமானதாக இருந்தாலும், அதற்கு இயக்குநர் கார்த்திக் ராஜு அமைத்திருக்கும் திரைக்கதையும், திரைக்கதையில் சொல்லியிருக்கும் சின்ன மெசஜும் படத்தை சுவாரஸ்யமாக்கியிருக்கிறது.

 

ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடியை காட்டியிருக்கும் ஹீரோ தினேஷ், நடிப்பில் மட்டும் பல இடங்களில் ‘குக்கூ’ தினேஷை நினைவுப் படுத்துகிறார். படம் முழுவதுமே ரொம்ப அமைதியாக நடித்திருப்பவர் காமெடி, செண்டிமெண்ட், காதல் என்று அனைத்து காட்சிகளிலும் ஒரே மாதிரியான நடிப்பையும் எமோஷ்னளையும் வெளிப்படுத்தியிருக்கிறார். நடிப்பில் இன்னும் கொஞ்சம் அலட்டாக இருந்திருக்கலாம்.

 

ஹீரோயின் நந்திதாவை விட பால சரவணனனுக்கு தான் முக்கியமான வேடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருக்கும் பால சரவணன், படம் முழுவதும் நம்மை சிரிக்க வைக்கிறார். அதே சமயம், குப்பத்து தலைவர் வேடத்தில் நடித்துள்ள சமையல் கலை நிபுணர் தாமு, காமெடி என்ற பெயரில் நம்மை கடுப்பேற்றுகிறார். அவருக்கு இந்த வேடத்தை கொடுத்ததிற்கு பதிலாக, நடிக்க முயற்சித்து வரும் வேறு யாருக்காவது கொடுத்திருக்கலாம்.

 

ஆரம்பத்தில் சாதாரணமாக நகரும் கதை, தினேஷ் திலீப் சுப்பராயணை அடித்ததும் வேகம் எடுக்கிறது. ஊரே பார்த்து பயப்படும் ஒரு ரவுடி மீது தினேஷ் சட்டென்று கை வைக்கும் காட்சிக்கு பிறகு தினேஷ், யார்? என்ற கேள்வி ரசிகர்களிடம் தொற்றிக்கொள்ள, அதில் இருந்து அவர் எதற்காக இந்த குப்பத்திற்கு வந்தார், என்ன செய்யப் போகிறார், என்ற எதிர்ப்பார்ப்பு படத்தை விறுவிறுப்பாக நகர்த்துகிறது. படகு போட்டியில் திலீப் சுப்பராயணுக்கு தினேஷ் விட்டுக்கொடுப்பது மேலும் திருப்பத்தை ஏற்படுத்துகிறது.

 

தினேஷின் நடவடிக்கையால், படத்தில் பிளாஸ் பேக் இருப்பதை ரசிகர்கள் உணர்ந்தாலும், அது என்னவாக இருக்கும், என்ற எதிர்ப்பார்ப்போடு, தினேஷின் அதிரடி நடவடிக்கைகளால், அடுத்து என்ன நடக்கும், என்ற எதிர்ப்பார்ப்பு படம் முழுவதும் பயணிக்கிறது. இருந்தாலும், தினேஷின் பிளாஷ் பேக் ஒபனாகும் இடம், அவர் ஹீரோயினிடம் சிக்குவது போன்ற காட்சிகள் ரொம்ப சினிமாத்தனமாக இருக்கிறது.

 

”சுறா சங்கர்னா சும்மவா....”என்று சொல்லிக் கொண்டு பால சரவணனன் சேயும் காமெடி குளுங்க குளுங்க சிரிக்க வைப்பதோடு, வில்லன்களை வெளுத்து வாங்கும் தினேஷிடம் அவர் சிக்கிக் கொண்டு திண்டாடும் காட்சிகளிலும் சிரிப்பு வெடியை கொளுத்தி போடுகிறார். 

 

ஸ்டண்ட் இயக்குநர் திலீப் சுப்பராயணும், சரத் லோகிதஸ்வாவும் தங்களது பணியை ரொம்ப சரியாக செய்திருக்க, சரத் லோகிதஸ்வா கபடி விளையாட்டு மூலம் பலரை காவு வாங்குவதும், அதே கபடி மூலம் தினேஷ் அவரை களங்கடிக்கும் காட்சியும் படத்தின் ஹைலைட்டாக உள்ளது.

 

பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவும், ஜஸ்டின் பிரபாகரனின் இசையும் படத்திற்கு பலம் சேர்ப்பது போல, ஜான் விஜயின் கதாபாத்திரமும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

கமர்ஷியல் படமாக இருந்தாலும், சஸ்பென்ஷ் ஆக்‌ஷன் ஜானரில் திரைக்கதையை ஜெட் வேகத்தில் நகர்த்தியிருக்கும் இயக்குநர் கார்த்திக் ராஜு, படத்தில் சின்ன மெசஜை ரொம்ப சிறப்பாக சொல்லியிருப்பவர், முழு படத்தையும் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இயக்கியிருக்கிறார்.

 

மொத்தத்தில், ’உள்குத்து’ கொடுத்த காசுக்கு ரசிகர்களை முழு திருப்தி படுத்தும் படமாக உள்ளது.

 

ஜெ.சுகுமார்